வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Monday, September 27, 2010

காமன்வெல்த் பாடம்


 

   கரை வேட்டியில்
   கறை படாமல்
   கரையில் நிற்பவன்
   கையில் முத்து
  
   காற்றிழுத்து
   கடலுக்குள் மூழ்கி
   காரிருளில்
   கண்டேன் சிப்பியை

   காசு சேர்க்க
   கட்சிக்காரனா(நா)ய்  இரு
   காமன்வெல்த்
   கற்றுத் தந்த பாடம்

  

Saturday, September 25, 2010

இன்டர்மீடியேட் வயசு - பாகம் இரண்டு
  அன்றும் அப்படி தான் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தோம். வகுப்புக்குள் செல்லும் அனைவரும் எங்களைத் தாண்டி தான் செல்ல வேண்டும். என் நண்பர்கள் உள்ளே  நுழையும் பெண்களை கிண்டல் செய்து கொண்டே இருந்தனர். மத்த விஷயங்களில் பயங்கர சேட்டை செய்யும் நான் பெண்கள் என்றாலே ஓடி ஒளிவேன். சிறுவயதில் இருந்தே கூச்சம். அதனால் அமைதியாக இருந்தேன். அப்போது தான் அவள் வந்தாள். எங்களுக்கும் கரும்பலகைக்கும் இடையில் உள்ள இடைவெளியில் கரும்பலகையின் எழுத்துக்களை அழிக்கும்படி அதை ஒட்டி வந்தாள். அப்படி அவள் சென்றதில் இருந்தே அவளுக்கு எங்கள் மீது இருந்த பயம் புரிந்தது. வெள்ளை நிற சுடிதார், இரட்டை ஜடை போட்டிருந்தாள். பொதுவாக பள்ளியில் தான் இரட்டை ஜடை போட்டு வருவார்கள். இன்டர்மீடியேட் கல்லூரியில் இரட்டை ஜடை போட்டு வந்து நான் பார்த்தது இல்லை. என்னையும் மீறி "யார்டா இரட்டை ஜடை போட்ட ஸ்கூல் பொண்ண உள்ள விட்டது?" என்று உரக்க கூறி விட்டேன். சடாரென்று திரும்பினாள். கண்களில் கோவம் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது. அவள் முறைத்த உடனே நம்ம இரத்தத்தின் இரத்தங்களுக்கு இரத்தம் சூடாகிவிட்டது. "ஏய் என்ன முறைக்குற?" என்று எழுந்துவிட்டனர். என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை. விறு விறு என வகுப்புக்குள் சென்று விட்டாள். எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. விடுங்கடா, விடுங்கடா என அவர்களை சமாதானம் செய்தேன்.

    என் நண்பர்களுக்கோ பயங்கர ஆச்சரியம். அதுவரை நான் எந்த பெண்ணையும் கண்டுகொண்டதே இல்லை. முதல் முறையாக ஒரு பெண்ணை கிண்டல் செய்துள்ளேன். அதுவும் அவள் முறைத்ததற்கு கோவம்  வரவில்லை. இதற்கு ஒரு வாரத்திற்கு முன் தான் தியேட்டரில் முறைத்தான் என்று லோக்கல் நெல்லூர்காரனிடம் சண்டைக்கு போய் போலிஸ் வந்து சமாதானப் படுத்தும் அளவு சென்றது. அனைவரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தனர். ஹி ஹி ஹி என கேவலமாக சிரித்து  வைத்தேன்.

     மறுநாள் காலை ஏழு மணி இருக்கும். எங்கள் வீட்டின் மொட்டை மாடியில் பல் துலக்கிக் கொண்டு இருந்தேன். திடீரென்று "டேய் சுமன் சீக்கிரம் வாடா, உன் ஆளு போறா" என்று பயங்கர சத்தமாக கத்தினான் நண்பன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. வேகமாக எட்டிப் பார்த்தேன். அவள் என் வீட்டின் வாசல் வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தாள். கரெக்டா நான் எட்டிப் பார்க்கும் நேரம் பார்த்து மாடியைப் பார்த்து விட்டாள். மீண்டும் ஒரு முறைப்பு. பிறகு தான் தெரிந்தது. எங்கள் தெருவின் இறுதியில் இருக்கும் வீடுகளில் உள்ள பெண்கள் விடுதியில் தான் அவள் தங்கியிருக்கிறாள் என்று. தினமும் இந்த வழியாக தான் கல்லூரிக்கு வரவேண்டும். பிறகென்ன தினமும் ஏழு மணிக்கு மொட்டை மாடியில் இருந்து முறைப்பு தரிசனம் பெற்றேன். கொஞ்ச நாள் கழித்து சிறிது தைரியம் வந்த உடன் "கண்கள் இரண்டால்" ஜெய் போல மண்டையை ஆட்டிக் கொண்டே சிரித்தேன். சில நாட்கள் முறைப்பாள். சில நாட்கள் சிரிப்பாள். 

      ஒருநாள் மொட்டை மாடியில் நின்று அவளை எதிர்பார்த்து வாயில் பிரஷுடன் நின்று கொண்டிருந்தேன். அவள் வழக்கமாக வரும் நேரத்திற்கு வரவில்லை. நான் சாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன். சிறிது நேரம் கழித்து வந்தாள். ஆச்சர்யம். ஒரு ஜடை போட்டு அழகாக ரோஜாப்பூ வைத்திருந்தாள். மாடியைப் பார்த்துக் கொண்டே வந்தாள். எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. சைகையாலே சூப்பர் என்று சொன்னேன். சிரித்துக் கொண்டே ஓடிவிட்டாள். அன்று முழுவதும் மந்திரித்து விட்ட கோழி போலவே சுற்றினேன். அதன்பிறகு அவள் வேற வேற ஹேர் ஸ்டெயிலில் வருவதும் நான் மாடியில் இருந்து கமென்ட் தருவதும் தொடர்ந்தது.

  ஒரு திங்கள் கிழமை. அவளுடன் அவள் வகுப்பிலேயே படிக்கும் மாணவன் ஒருவன் அவன் அம்மாவுடன் அன்று கல்லூரி வாசலில் நின்று கொண்டிருந்தான். நாங்கள் என்ன விஷயமாக இருக்குமென்று யோசித்துக் கொண்டே உள்ளே வந்து உட்கார்ந்து விட்டோம். சிறிது நேரத்தில் இவள் பயங்கர கோவமாக வந்தாள். அதற்குள் விஷயம் வகுப்பிற்குள் பரவி விட்டது. அதாவது அவனுக்கு இவளை பிடித்து விட்டதாம், அவன் அம்மாவை வைத்து இவளிடம் பெண் கேட்டிருக்கிறான். நான் வேகமாக அவளிடம் சென்றேன்.
  "அவன் என்ன சொன்னான்?"
   "நீ ஏன் கேக்குற?"
  "எனக்கு தான் கேக்க உரிமை இருக்கு" அந்த கோபத்திலும் அவள் முகத்தில் சிரிப்பு.
  "என்ன கல்யாணம் பண்ணணுமாம்"
  "நீ என்ன சொன்ன?"
  "திட்டி விட்டுட்டேன்"
   எனது முகத்தில் கோபம் குறைந்ததைக் கண்டு அவளும் சிரித்தாள்.


              மீண்டும் எங்கள் மொட்டை மாடி சிரிப்பு தொடர்ந்தது. சிறிது நாட்களில்   அண்ணனின்  திருமணம் காரணமாக  ஒருவாரம் விடுமுறை எடுத்திருந்தேன். மீண்டும் வகுப்பிற்கு செல்லும் முன் பிரின்ஸ்பால் அறைக்கு சென்று இருந்தேன். உள்ளே அவள். தந்தையுடன். அழுது வீங்கிய முகம். எனக்கு ஒரே குழப்பம். நான் அவளிடம் "என்ன ஆச்சு?" என்றேன். "உனக்கு ஒன்றும் தெரியாதா?  பேசாம போ" என்றாள். மிகுந்த கவலையுடன் வகுப்பிற்கு வந்தேன். பிறகு தான் தெரிந்தது அந்த பையன் அவனது அம்மாவுடன் இவள் வீட்டுக்கே சென்று விட்டான் என்று. அடுத்த இரண்டு மூன்று தினங்கள் அவள் கல்லூரிக்கு வரவில்லை.

  மூன்று தினங்கள் கழித்து ஒரு மாலை நேரம். வீட்டின் வாசலில் கதையடித்துக் கொண்டு இருந்தோம். அவளது தந்தையுடன் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு அவள் வந்தாள். எங்கள் வீட்டின் அருகில் வந்ததும் என்னைப் பார்த்து நின்றாள். நானும் அருகில் சென்றேன். "நான் ஹைதராபாத் போறேன். அங்க ஒரு இன்டர்மீடியேட் காலேஜ்ல ஜாயின் பண்ணிட்டேன்" என்றாள். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. "ஓ.கே. ஆல் தி பெஸ்ட். நல்லா படி" என்றேன். அவள் தந்தையும் வரேன் தம்பி என்று விடை பெற்று கிளம்பினார். சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தாள், கையை ஜடையில் வைத்துக் கொண்டே. அன்றும் இரட்டை ஜடை. எனக்கு பொல பொல வென கண்களில் நீர் வழிந்தது. .

Wednesday, September 22, 2010

இன்டர்மீடியேட் வயசு

   


        இங்கு வந்து சேர்ந்த புதிதில் நெல்லூர் என்னை இவ்வளவு மயக்கும் என எதிர் பார்க்கவே இல்லை. அப்பாவிற்கு ஆந்திராவில் வங்கிப் பணி. கடப்பாவிற்கு அருகே ஒரு சிறு நகரத்தில் அப்போது இருந்தோம். அதை நகரம் என்று சொல்ல முடியாது. முழுவதும் பூசப் படாத வீடுகள், புழுதி பறக்கும் சாலைகள், எப்போதாவது வந்து செல்லும் ஓட்டை நகரப் பேருந்துகள், அழுக்கு படிந்த எனது பள்ளி தவிர வேறு எதையும் அறிந்தது இல்லை. பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் திடீரென்று ஒருநாள்  "இன்டர்மீடியேட் படிக்க நெல்லூர் போறியா?" என கேட்டார்கள். நண்பர்கள் நெல்லூர் பற்றி மிகக் கவர்ச்சியான பிம்பத்தை ஏற்படுத்தி இருந்தார்கள்.அந்தக் கனவுகளோடு உடனே சரி சொன்னேன்.

   இன்டர்மீடியேட் என்பது நம்ம ஊரில் +1, +2 போல. இரண்டு வருடம் படிக்க வேண்டும். அதன் பிறகு தான் கல்லூரியில் சேர முடியும். நம்ம ஊரில் ஈரோடு, சேலம் மாவட்டங்கள் பள்ளிகளுக்கு எப்படி புகழ் பெற்றவையோ அது போல ஆந்திராவில் நெல்லூர். வசதி இருப்பவர்கள் ஹைதராபாத் செல்வார்கள்.

     ஆனால் நெல்லூர் வந்து சேர்ந்த பின் அதன் பிரம்மாண்டம் என்னை மிரட்டியது. யாரிடமும் பேசக் கூட பயமாக இருந்தது.  முதல் மூன்று மாதங்களில் பலமுறை யாருக்கும் சொல்லாமல் வீட்டுக்கு ஓட முயற்சி செய்தேன். தனியாக போக பயமாக இருந்ததால் முயற்சி கைவிடப் பட்டது.


     அங்கு விடுதிகள் வித்தியாசமாக இருக்கும். ஊருக்குள் வீடுகளை வாடகைக்கு எடுத்து அவற்றில் மாணவர்களை தங்க வைத்து விடுவர். தெருவின் கடைசியில் இருக்கும் வீடுகளை மொத்தமாக பிடித்து, அதில் மாணவிகள். அங்கு மட்டும் ஒரு காவலாளி இருப்பார். நான் இருந்த வீட்டில் மொத்தம் எட்டு பேர். முதல் நாள் பற்பசை கடனாக கேட்ட நண்பனுக்கு முறைத்துக் கொண்டே கொடுத்து விட்டு அதை வாங்கி திரும்ப பெட்டியில் பூட்டியது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனால் இரண்டு வருடம் முடியும் போது எட்டு பேருக்கும் ஒரே சோப்பு தான் என்பது வேறு விஷயம்.

  வந்த புதிதில் மறுநாளே தேர்வு இருப்பது போல வகுப்பு விட்டு வந்தவுடன் படிக்க ஆரம்பித்து விடுவேன். யாரிடமும் பேச கூச்சமாக இருக்கும். என் அறையில் இருக்கும் மற்றவர்களும் என்னிடம் அவ்வளவாக என்னிடம் பேச மாட்டார்கள். அவர்களுக்குள் நன்றாக பேசிக் கொள்வர். ஆனால் அது எல்லாம் மூன்று மாதம் தான். மூன்றாவது மாதம் ஒரு நாள். என் அறையில் ஒருவனுக்கு டைபாய்டு காய்ச்சல். கண் விழிக்க முடியாமல் படுத்துவிட்டான். அறை நண்பர்கள் அவனை கவனித்துக் கொண்ட விதம் என்னை பாதித்தது. வாந்தி எடுத்ததை கூட அருவருப்பின்றி சுத்தம் செய்தனர். இதுவரை வீடு மட்டுமே உலகம், வீட்டில் மட்டுமே பாசம் என்று நினைத்த என்னை இது ஏதோ செய்தது. மனிதர்களின் புதிய பரிமாணங்களை காட்டியது. வீட்டில் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் நம்மை ஏமாற்றுபவர்கள் என நினைத்திருந்த எனது நினைப்பில் மரண அடி. மெதுவாக அனைவரிடமும் பேச ஆரம்பித்தேன். சாமியார் பேச ஆரம்பிக்கிறான் என அவர்களுக்கும் சந்தோசம். அப்படியே மெதுமெதுவாக ஆரம்பித்த நட்பு முஸ்தப்பா முஸ்தப்பா ரேஞ்சுக்கு சென்று விட்டது.  அத்தனை நாள் எடுத்த  சாமியார்  பேரை ஒரே நாளில் மாற்ற வேண்டு என்பது போல சேட்டை செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பித்தோம். பக்கத்து வீட்டில் இருக்கும் தென்னை மரத்தில் காய் திருடுவது, வகுப்பை கட் அடித்தி விட்டு திருப்பதி, சென்னை என ஊர் சுற்றுவது, என நட்பின் இலக்கணத்திற்கு உரிய அனைத்தையும் செய்தோம். எங்கள் முயற்சி வீண் போக வில்லை. வெகு சீக்கிரத்தில் அந்த வீட்டு பசங்களா? உருப்புடாத பசங்க என்ற நல்ல பெயர் வந்து சேர்ந்தது. நண்பனுக்காக லோக்கல் நெல்லூர் வாலிபர்களிடம் சண்டைக்கு போய் போலிஸ் ஸ்டேஷனில் இருந்தது இதில் மகுடம் வைக்கும் நிகழ்வு.    இப்படியாக இனிதே முதல் வருடம் நிறைவுற்றது. இரண்டாம் வருடம் வந்து விட்டோம். முதல் வருடம் வேறு மாணவர்கள் சேர்ந்து விட்டார்கள். மொழிப் பாடங்களில் இருவருக்கும் சேர்ந்தே வகுப்பு நடக்கும். எங்கள் கோஷ்டியைப் பற்றி அனைவருக்கும் தெரியுமாதலால் எங்களிடம் பயத்துடனே ஜூனியர்கள் பழகுவார்கள். நாங்கள் முதல் பெஞ்சில் தான் அமர்வோம். வகுப்பை கவனிக்க அல்ல. டீச்சருக்கு டார்ச்சர் கொடுக்க. அது போல வகுப்பை விட்டு வெளியேறும் போதும் கடைசி பெஞ்ச்சை விட முதல் பெஞ்ச் தான் எளிது.

    அன்றும் அப்படி முதல் பெஞ்சில் உக்காந்து இருந்த போது தான் அவள் வந்தாள். முதலில் பார்க்கும் போது பல்பு லாம் எரியவில்லை. ஆனால் அது தான் நான் வாங்கப் போகும் முதல் பல்பு என அப்போது தெரியவில்லை. தொடர்ச்சி அடுத்த பாகம்.....

  டிஸ்கி: பதிவுலகில் நான் மிகவும் ரசிக்கும் எழுத்துகளில் ஒன்று, அண்ணன் கே.ஆர்.பி. செந்தில் அவர்களது எழுத்து. அவரது தீராக் காதல் பாதிப்பில் உருவான புனைவு இது.  இன்ஸ்பிரேஷன் என நான் சொல்லிக் கொண்டாலும் காப்பி காப்பி என யாரோ கத்துவது காதில் கேட்கிறது. பதிவுல இதுலாம் சாதாரணம்பா.

Monday, September 20, 2010

தவறான மருத்துவத் தகவல்கள் , உயிரைப் பறிக்கும் ஆபத்து - கட்டாயம் தவிர்க்க வேண்டிய பதிவுகள்.

    தவறான மருத்துவப் பதிவுகள் பற்றிய பதிவில், எனது கோபம் தெரிகிறது என நண்பர்கள் கூறி இருந்தனர். அவரது ஒரு பதிவில் தான் முரண்பாடு என நினைக்கின்றனர். உண்மை அப்படி அல்ல. இதை பொறுமையாகப் படிக்கவும், நாம் ஏமாற்றப்பட்ட பல விஷயங்கள் உங்களுக்கு புரியும்.  

        அடிப்படை அறிவே இல்லாமல், இயற்கை வைத்தியம் என்ற பெயரில், எந்த ஒரு குறையும் இல்லாத மூன்று மாத குழந்தைக்கு விளக்கெண்ணெய், இன்னும் சில பொருட்களை கொடுத்து, intestinal oobstruction   ஏற்பட்டு, அந்தக் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றி தெரியுமா? இறுதி முயற்சியாக அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப் பட்டது. வாழ்நாள் முழுவதும் அரைக் குடலுடன் வாழப் போகும் அந்தக் குழந்தையின் முகத்த்தில் இவர்களால் விழிக்க இயலுமா?

       சிவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்பதைப் போல இயற்கை வைத்தியத்தில் பக்க விளைவு இல்லை என்பவர்களே இதை என்ன சொல்வீர்கள்?

          விளக்கெண்ணெயின் பக்க விளைவுகளைப் பற்றி அறிவீர்களா? அன்றாடம் உபயோகப்படுத்தும் மஞ்சளுக்கும் டைபாய்டு காய்ச்சலுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா? உப்பில் இருந்து மிளகாய் வரை அனைத்துப் பொருட்களும் பக்க விளைவு கொண்டவை என்பது தெரியுமா?

   ஒரு நோயாளியின் மருத்துவ அறிக்கையின் சுருக்கத் தமிழாக்கம் -  "அறுபது வயது சர்க்கரை நோயாளி சாப்பிடாமல் சர்க்கரை குறை நிலைக்குச் சென்று சுயநினைவின்றி விழுந்துவிட்டார். அவரைக் காப்பற்ற சர்க்கரைக் கரைசலை வாயில் ஊற்றினார் அவரது மனைவி. (சுய நினைவின்றி இருப்பவருக்கு வாய் வழியே எதுவும் கொடுக்க கூடாது என்ற அடிப்படை மருத்துவ அறிவு எத்தனை பேருக்கு தெரியும்?) அது புரையேறி aspirated pneumonia உருவாகி அவரது உயிரைப் பறித்தது."  இது போன்ற மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில் சர்க்கரை நோயாளியை சாப்பிடாமல் உபவாசம் என்ற பெயரில் பட்டினி இருக்கச் சொல்வது எத்தனை பேரின் உயிரைப் பறிக்குமோ? இதெல்லாம் என்ன விளைவு வைத்தியரே? (குறைவான அளவு உணவை அடிக்கடி உண்பதே சர்க்கரை நோய்க்கு ஏற்றது என்பது நண்பருக்கு தெரியுமோ என்னவோ?)

  உடலில் வியர்வை எப்படி உருவாகிறது என நெட்டில் படிக்கவும் நண்பரே. உடலில் இருந்து வெப்பம் வெளியேற முடியாத நிலையில் வியர்வை உற்பத்தி ஆகி வெப்பத்தை சமன் செய்கிறது. வியர்வையில் எவ்வளவு சோடியம், எவ்வளவு குளோரைடு உள்ளது என அனைத்தும் நெட்டில் கிடைக்கும். அறிவியல் இப்படி இருக்க வாழை இலையை சுற்றிக் கொண்டு படுத்தால் வியர்க்குமாம், கெட்ட நீர் வெளியேறுமாம். கேக்குறவன் கேனையனா இருந்தா வியர்வைல.....வேணாம், விட்ருங்க.   சிமென்ட் சாக்கு தெரியுமா/ அதை கட்டிக் கொண்டு படுத்துப் பாருங்கள். இதைவிட அதிகமாக வேர்க்கும்.

   வியர்வை எப்படி உருவாகும்? வியர்வையில் உள்ள பொருட்கள் என்ன? என்பது போன்ற அறிவியல் கருத்துகள் நிருபிக்கப்பட்ட பிறகும் "கெட்ட நீர் வெளியேறிவிட்டது" என்று மோசடி செய்யும் உங்களை என்னவென்று சொல்வது? இதற்குப் பெயர் தான் மருத்துவ அறிவை வளர்ப்பதா? (வெப்பம் கூடினால் சுரப்பி வியர்வையை சுரக்கும், மற்றபடி வாழை இழைக்கும், சிமென்ட் சாக்கிற்கும் அதற்கு வித்தியாசம் தெரியாது)

   கரையான்களும், பாம்புகளும் எச்சமிட்ட புற்றுமண்ணை உடலில் பூசினால் இன்பெக்க்ஷன் வராதா? நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களின் காயத்தில் மண் பட்டால் சீழ் பிடிக்காதா?

  இங்கு அனைத்தும் ஆய்வுக்கு உட்பட்டவை. ஆயிரம் வருடங்களாக இருப்பதாலேயே கேள்விகள் இன்றி ஒத்துக் கொள்ள முடியாது. உடன்கட்டை ஏறுதல் கூட ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இருந்தது.

  பால் சாப்பிட்டால் காம எண்ணம் தலை தூக்குமாம், நீங்கள் பெரிதும் மதிக்கும் காந்தி அடிகள் இறுதிவரை பால் தான் சாப்பிட்டார், அவருக்கும் தூக்கிக் கொண்டே இருந்ததோ காம எண்ணம்? உடலுக்கு தேவையான பெரும்பான்மை விட்டமின்கள் பாலில் இருக்கின்றன என்பது +2 மாணவர்களுக்கு கூட தெரிந்த நிலையில், நண்பருக்கு தெரியாதது சோகமே.(பாலைப் பற்றி பதிவுத் தொடரே எழுதலாம்) வைட்டமின் B12 பற்றி தெரியுமா? சைவ உணவு உண்பவர்களுக்கு B12 கிடைக்க ஒரே வழி பால் தான். நாசிசம் பாசிசம் போல food faddism ஆபத்தான விஷயம். தெரிந்தோ தெரியாமலோ அதைப் பரப்புகிறீர்கள் நண்பரே. இது போல சொல்லிக் கொண்டே போகலாம் நண்பரே.

  மருத்துவப் பதிவுகளை எழுதுவதும் அவற்றைப் பற்றி கேட்டால், அந்த புத்தகத்தில் போட்டுருக்கு, எனக்கு தெரியாது என பொறுப்பை தட்டிக் கழிப்பதும் சரியான விஷயம் அல்ல நண்பரே. மற்ற உயிரை ம... ராக மதிக்கும் குணம்.

 உண்மையிலேயே இயற்கை மருத்துவத்திற்கு நன்மை செய்ய நினைத்தால், அதை நான்கு பேருக்கு பரப்ப நினைத்தால், மூளை கட்டி குணமானதை ஆதாரத்துடன் நிரூபியுங்கள், நோபல் பரிசு வாங்கும் அளவு மருத்துவ உலகில் பெரும் புரட்சியாக அது இருக்கும். அதை விட்டுவிட்டு "இந்த நோட்டிசை மூவாயிரம் காப்பி பிரிண்ட் செய்த கர்நாடககாரருக்கு தங்கப் புதையல் கிடைத்தது, கிழித்துப் போட்டவர் இரத்தம் கக்கி செத்தார்" என்று வரும் பிட் நோட்டிஸ் போல ஆதாரம் இல்லாமல் ப்ளாக் எழுத வேண்டாம். எப்படி குணம் ஆனது என்று அறிவியல் ரீதியில் விளக்க முயன்றால் அது நல்ல விஷயம். இல்லையென்றால், பிரார்த்தனை கூட்டத்தில் கண் தெரியாதவருக்கு பார்வை கொடுக்கும் முறைக்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை.

   மருத்துவ பதிவு எழுதும் முன், சில விசயங்களை யோசித்துக் கொள்ளுங்கள்,
அ) தாங்கள் கூற வந்தது சரியான கருத்தா?
ஆ) அதில் நம்பகத் தன்மை எவ்வளவு உள்ளது
இ) இதனால் மற்றவருக்கு துன்பம் வருமா?
ஈ) மருத்துவ அறிவு வளருமா?
உ) அதைப் பற்றி சந்தேகம் கேட்டால் நம்மால் விளக்க முடியுமா?
         பதிவை எழுதும் முன் சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதில் ஒரு கேள்விக்கு பதில் வரவில்லை என்றாலும் எழுத வேண்டாம். பரபரப்புக்காக எழுத வேண்டும் என்றால் எந்திரன் பற்றி பதிவு எழுதி விட்டுப் போங்களேன். யாருக்கும் நஷ்டம் இல்லை. உங்களது பதிவால் ஒரு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் அந்தப் பாவம் உங்களையே சாரும்.

       பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள், யார் என்ன சொன்னாலும் ஆ!!!!!! என்று கேட்காமல் அதன் உண்மை தன்மையை யோசியுங்கள். மருத்துவ சந்தேகங்களைப் பற்றி தகுதியான நபர்களிடம் விளக்கம் பெறவும். படித்தவர்களிடமே மருத்துவ அறியாமை பரவி உள்ள நிலையில் (kidneyக்கும் testisக்கும் வித்தியாசம் தெரியாத பயபுள்ளக இருக்க ஊருண்னே இது) கருப்பை எடுத்தால் மாதவிலக்கு வரலாம் என்று காதில் பூ சுத்தலாம், வியர்வையில் கெட்ட நீர் வெளியேறும் என பூமாலையே சுற்றலாம்.

 டிஸ்கி:  இதில் நான் எந்த லிங்க்கும் கொடுக்கவில்லை. இதில் சந்தேகம் உள்ள வார்த்தைகளை நெட்டில் சர்ச் செய்து பாருங்கள். தேவைக்கு அதிகமாகவே விஷயம் கிடைக்கும். 

Sunday, September 19, 2010

கழுத்தைச் சுற்றிய பாம்பு - என்னது நானு யாரா-வின் தவறான மருத்துவத் தகவல்கள்

 அன்பு நண்பர் வசந்த குமாருக்கு, 


  தங்களது "என்னது நானு யாரா?" வலைப்பக்கத்தைப் பார்த்தேன். அதில் உள்ள  கருத்துகளின் அபத்தங்களை உங்களுக்கு தெரியப்படுத்தவே இந்தப் பதிவு. (எதிர் பதிவு போடும் அளவு நம்ம பெரிய ஆளு ஆயிட்டோம். என தாங்கள் சந்தோசப் படுவது எனக்குத் தெரிகிறது. "பெரிய ஆளு" ஆனதற்கு வாழ்த்துக்கள். ஹேப்பி வயசுக்கு வந்த டே) 


        மருத்துவ சம்பந்தமான பதிவுகள் அனைத்தையும் நான் படிக்காமல் விடுவதில்லை என்றாலும், உங்களது பதிவுகளை நான் படிப்பது இல்லை. காரணம், அவலில் தேங்காய் இட்டால் ரெசிப்பி , நாலு பழங்களை நறுக்கி போட்டால் சாலட் போன்ற யாருக்கும் தெரியாத விஷயங்களை நீங்கள் எழுதுவதைப் படித்ததில் இருந்து நேரத்தை வீணாக்க வேண்டாம் என்ற நல்ல எண்ணம் தான். என்றாலும் உங்களது  "அப்பாடி! மாதவிடாய் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைச்சதுங்க!" என்ற பதிவை படித்துப் பாருங்கள் முழுவதும் தவறான கருத்துகள் மக்களிடம் சேர்க்கப் பட்டிருக்கின்றன என என் நண்பர் கேட்டதால் படித்தேன். மிகுந்த அதிர்ச்சி.


  பதிவுகளைப்
      பாசிடிவ் பதிவுகள் (மக்களுக்கு தேவையான கருத்து உள்ளவை),
      நியுட்ரல் பதிவுகள் (மொக்கை பொழுதுபோக்குப் பதிவுகள்),
     நெகடிவ் பதிவுகள் (மக்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்பவை)
     எனப் பிரித்தால், தங்களது அந்தப் பதிவு சத்தியமாக நெகடிவ் பதிவுகளுக்கு கீழ் வருகிறது.


    அந்தப் பதிவின் ஆரம்பம் முதல் கடைசிவரை அனைத்தும் அபத்தம், அறியாமையின் உச்சம். கருப்பை நீக்கியவர்களுக்கு மாதவிடாய் எப்படி வரும் என்று கேட்டால் ஒரு லிங்க் கொடுத்தீர்கள். அது " Menstruation - Is it Really Necessary?". என்ற தலைப்பிலான கட்டுரை.(கேட்ட கேள்விக்கும் குடுத்த லிங்க்க்கும் என்ன ஒரு தொடர்பு) அதில் எந்த இடத்திலும் கருப்பை இல்லாதவர்களுக்கு மாதவிடாய் வரும் என்று குறிப்பிடவே இல்லை. மாதவிடாய் என்பதே கருப்பையில் இருந்து வெளியேறும் இரத்தம் தான். கருப்பை இல்லாமல் அது வர வாய்ப்பே இல்லை.  நமது  உடலைப் பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் மருத்துவப் பதிவு எழுதும் தங்களுக்கு பனிரெண்டாம் வகுப்பு பயாலஜி புக்கை பரிசாக அனுப்ப நினைத்துள்ளேன். (இந்த இடத்தில் டாக்டர் நீங்க +2 பாஸ் பண்ணீட்டிங்க காமெடி நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பாகாது) .


  அந்தப் பதிவில்   
       "////1983 மார்ச் மாசம் எனக்கு Tubal Pregnancy-க்காக, முதல் ஆபரேஷன் நடந்தது. Fallopian Tube-ல ஒன்னு வெடிச்சிடுச்சி. 45 நாள் கருவோட அந்த ட்யூபை வெட்டி எடுத்திட்டாங்க.////"
    என எழுதிருக்கீங்க.
   நீங்கள் இங்கு குறிப்பிட்டு உள்ள "Ruptured ectopic pregnancy" -யின் முழு வீரியம் தெரியுமா? அந்த நோயாளியைப் பக்கத்தில பார்த்திருக்கிங்களா? உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் ஆள் அவுட்.
   ஆங்கில மருத்துவத்தில் இதைக் கண்டறிய ஸ்கேன் செய்து பார்ப்போம். ectopic pregnancy Rupture ஆகி விட்டது எனத் தெரிந்து விட்டால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றுவோம். உங்கள் வைத்திய முறையில் எப்படி இதைக் கண்டு பிடிப்பீர்கள்? வெத்தலைல மை தடவியா? அப்படியே கண்டு பிடிச்சு என்ன பண்ணுவிங்க? வாழை இலைல சுத்தி படுக்க வச்சா சரி ஆகிடுமா? அநியாயமா ஏன் ஒரு உயிரை கொல்லப் பாக்குறிங்க? 


      சென்னை பொது மருத்துவமனையில் தினமும் ஒரு Ruptured ectopic pregnancy யாவது வருகிறது. உங்களை அழைத்துச் செல்கிறேன். அவர்களில் ஒரே ஒருவரை உங்கள் மருத்துவ முறையால் காப்பற்ற இயலுமா? ஒரு மணி நேரத்திற்குள் விரைந்து செயலாற்ற வேண்டும். இல்லை என்றால் ஒரு தாயின் உயிரை பறித்தவர் என்ற பழி வந்து சேரும். உடனடியாக நான் மருத்துவர் இல்லை என்று மேதாவியாக தப்பிக்கப் பார்க்காதீர்கள். நீங்கள் பரிந்துரைக்கும் மருத்துவ முறையில் உள்ள மருத்துவர் யார் வேண்டுமானாலும் காப்பாற்றிக் கொடுக்கட்டும் பார்க்கலாம். உங்களால் முடியாது. தேவை இல்லாமல் அந்தத் தாய் தான் உயிரிழப்பார். ஓப்பனா கேக்குறேன். Ruptured ectopic pregnancy-க்கு அறுவை சிகிச்சை தப்புன்னு சொல்ற உங்க மருத்துவ முறை எப்படி இத சரி பண்ணி உயிரை காப்பாத்தும்?  


     உங்களது பதிவு ஏற்படுத்திய நச்சு விளைவை மேலோட்டமாகப் பார்க்காதீர்கள். ஒரு Ruptured ectopic pregnancy நோயாளி பதிவைப் படித்து விட்டு வெறும் பழம் மட்டும் சாப்பிடுகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அவளின் கதி என்ன? அந்தப் பாவம் முழுவதும் உங்களைச் சாரும். 


   அறுவை சிகிச்சை பண்ணியதால சளி இருமல் வந்துச்சாம். இந்த பதிவ படிக்கிற மக்களே, உங்களுக்கு தெரிஞ்சு எத்தனையோ பேர் அறுவை சிகிச்சை பண்ணிருப்பாங்க. அல்லது நீங்களே பண்ணிருப்பிங்க. உங்கள்ல எத்தனை பேருக்கு சளி இருந்துகிட்டே இருக்கு? அறுவை சிகிச்சை பண்ணாத மக்களே உங்கள்ல எத்தனை பேருக்கு சளி இல்ல? 
    இப்படிப் பட்ட கருத்துக்கள் அறியாமையின் உச்சம். உங்களது அறியாமையை இப்படி பப்ளிக்கா காட்டாதிங்க. 


     அநோரேக்சியா நெர்வோசா (anorexia nervosa) பற்றி தெரியுமா? இளம்பெண்கள் குண்டாகக் கூடாதுன்னு சாப்பாட குறைச்சுடுவாங்க. அப்ப அவங்க உடம்புல சத்து குறைவால மாத விலக்கு வராம போய்டும். மாடலிங் துறையில் இருக்கும் இளம்பெண்களிடம் இருக்கும் வியாதி இது. நெட்ல படிச்சுப் பாருங்க. மூணு நாள் தூங்காம படிக்கலாம். அவ்ளோ மேட்டர் கிடைக்கும். நீங்க சொல்றதும் இது போல மன வியாதி தான். (பைத்தியம்னு சொல்வாங்களே அதுவா? அவ்வ்வ்வ்)
   
   அடுத்த பதிவு இவரது வைத்திய முறையால் மூளைக் கட்டி குணம் ஆச்சாம். அந்த பதிவின் சாரம் இது தான். இவருக்கு தெரிந்த ஒருவருக்கு மூளையில் கட்டி இருந்ததாம்(8.2செ.மி நீளம்.). ஆங்கில வைத்திய முறையில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி விட்டார்கள். நம்ம ஹீரோ அவரை ஒரு மாற்று மருத்துவமனையில் சேர்க்கிறார். அவருக்கு குணமாகி விட்டது. அதாவது அந்த மருத்துவர் உனக்கு சரியாகி விட்டது எனக் கூறுகிறார். (நன்றாக கவனிக்கவும். குணமடைந்ததிற்கு எந்த ஆதாரமும் இல்லை) அவ்ளோ தான். ஆனால் திரும்ப ஸ்கேன் எடுத்து பார்த்து கட்டி கரைந்து விட்டதா என உறுதி செய்ய மாட்டார். அதற்குள் முழுவதுமாக குணம் ஆகி விட்டதாக பதிவு போடுவார். இதில் ஒரு காமெடி என்ன தெரியுமா? அவர்கள் செய்தது symptomatic treatment. அதாவது நோயை குணப்படுத்தாமல் நோயின் வெளிப்பாடுகளை தீர்ப்பது. அதையே தான் ஹீரோ என்டரிக்கு முன்பு பாராசிட்டமால் செய்து வந்தது. என்ன...........? அதன் விலை எழுபத்தைந்து பைசா. ஹீரோ செய்த வைத்தியத்தின் விலை இருபது ஆயிரம். உங்க வைத்திய முறை ரொம்ப செலவு கம்மி தலைவரே. (பாவம் அந்த நோயாளி. என்னைக்கு அந்த கட்டி வெடிக்கப்போதோ? அதற்குள் ஸ்கேன் செய்து கட்டியின் தற்போதைய நிலையை கண்டறிந்து, அவர்  சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொள்கிறேன்.)


  மருத்துவம் என்பது நீங்கள் விளையாட நினைக்கும் மைதானம் அல்ல. அது உயிர் காக்கும் தொழில். தப்புத் தவறாக தங்களுக்கு தெரிந்த அரைகுறை மருத்துவ விசயங்களை பதிவுகளாகப் போட்டு, பலரின் வாழ்க்கையை நாசமாக்க வேண்டாம். சரியாகத் தெரிந்தால் போடுங்கள், இல்லையேல் விட்டு விடுங்கள். அது தான் மிகப் பெரியத் தொண்டு.


  உங்களது முதல் பதிவிலேயே நான் மருத்துவன் இல்லை எனக் கூறிய தாங்கள், சிரிப்பு போலிஸ் அவர்களது பதிவின் பின்னூட்டத்தில் 
///
என்னது நானு யாரா? சொன்னது…
//யாராவது அடிக்க வந்தா என்னை காப்பாத்திகிறதுக்கு ஏதாச்சும் இயற்க்கை வைத்தியம் உண்டா பங்காளி?// //தெரியாதுன்னு சொல்லுங்க. முடியாதுன்னு சொல்லாதிங்க. ஐயோ ஒரு ஞான சூநியத்துகிட்ட வந்து மாட்டிக்கிட்டனே(ஒருவேளை போலி டாக்டரா இருக்குமோ?)// போலி டாக்டரு இல்ல! ஜாலி டாக்டரு! ஒருத்தரு அடிப்பட்டா, ஒரு பேஷண்ட் எனக்கு கிடைக்கும் இல்ல! அதனால நான் ஜாலி டாக்டரு! அடிப்படறதுக்கு பயம்னா பேசாம எதிர் கட்சி ஆளுங்க கிட்ட சரண்டர் ஆக வேண்டியது தானே?
  மருத்துவராக மாற நினைப்பது ஏன்? தன்னைத் தானே டாக்டர் என அழைத்துக் கொள்கிறீர்களே? (ரமேஷ் அண்ணா, விளம்பரத்துக்கு இன்னும் காசு வரல அனுப்பி வைங்க.)


   ஆங்கில மருத்துவம் கொல்கிறது என் வரிக்கு வரி சொல்லும் உங்கள் பதிவில் இரத்தக் கொடை, கண் தானம் பற்றிய அறிவிப்புகள் உள்ளன. எப்ப பங்காளி இயற்கை வைத்தியத்தில இரத்தம் ஏற்றுவதையும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையையும் சேர்த்தாங்க? ஏன் பங்காளி இரட்டை வேடம்? 


    ஆங்கில மருத்துவம் பற்றிய கேள்விகளுக்கு எனது பதிவில் விரிவான விளக்கம் அளித்து இருந்தேனே. அதைப் பற்றி தங்களால் ஒரு வார்த்தை கூட பேச முடிய வில்லையே. 


   உங்களது பதிவு மருத்துவ அறிவை வளர்க்கவில்லை. அறியாமையை தான் வளர்க்கிறது. அதில் உள்ள அபத்தங்களை இது போல பட்டியல் இட்டுக் கொண்டே சென்றால் படிப்பவர்களுக்கு மூச்சு முட்டிவிடும். அதனால் இத்துடன் முடிக்கிறேன்.  நீங்கள் கூற வந்த நோக்கம் நல்லதாக இருந்தாலும் கருத்துகள் சரி இல்லை. எனவே வேண்டாம். விட்ருங்க.


      ஆன்மீகத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள், நான் ஒன்றும் கேட்க மாட்டேன், ஏனென்றால் அது எனக்கு தெரியாது, அது எனக்கு பிடிக்காது, அது எனக்கு தேவை இல்லை. ஆனால் மருத்துவத்தைப் பற்றி தப்பும் தவறுமாக எழுதினால் எனக்கு கட்டாயம் கோவம் வரும், ஏனென்றால், அது எனக்குத் தெரியும், அது எனக்கு பிடிக்கும், அது எனக்கு தேவையான விஷயம்.


    தாங்கள் எப்போதும் போல, "அவலில் தேங்காய் போட்டு செய்யும் ரெசிப்பிகள்", "பழத்தை நறுக்கிப் போட்டால் சாலட்" போன்ற யாருக்கும் தெரியாத விசயங்களை எழுதிக் கொண்டு இருங்கள். தேவை இல்லாமல் மருத்துவ கருத்து என்ற பெயரில் கீரை விற்க வேண்டாம். இன்னொரு சேலம் சித்த மருத்துவராக, மான்கறி விஜயகுமாராக உருவாக வேண்டாம். அது பலரின் வாழ்கையைப் பாதிக்கும்.


 உங்க பாணியிலேயே பதில் சொல்வதானால், பங்காளி உங்க சரக்கு எல்லாம் சரி இல்ல. டூப்ளிகேட். கள்ள சாராயம். வேணாம் விக்காதீங்க.


டிஸ்கி: நண்பரே! உங்கள் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த கோபமும் இல்லை. இது கருத்து மோதலே.


      

Saturday, September 18, 2010

உலகத்திலேயே காஸ்ட்லியான பொழுது போக்கு

நிகழ்ச்சி 1:

      சனிக்கிழமை இரவு பதினொன்றரை மணி. தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்குள் ஒரு ஸ்ட்ரெச்சர் வேகமாக நுழைந்தது. அதன்மேல் சுயநினைவின்றி ஒருவன். மேலோட்டமாகப் பார்த்தால் காயம் ஒன்றும் இல்லை. பின்னாலேயே ஒரு பெண், சுமார் முப்பது வயது இருக்கும். சேலை முழுவதும் இரத்தக் கறை. அழுது கொண்டே வந்தாள்.
 "கீழ விழுந்துட்டார் சார். தலைல அடி பட்டுருச்சு. இரத்தமா வருது" 

                  அவனது தலையை தூக்கிப் பார்த்தால், பின் மண்டையில் இருந்து இரத்தம் பீச்சி அடித்துக் கொண்டிருந்தது. ஆர்ட்டரி கட். ஹெவி பிளீடிங். ஸ்ட்ரெச்சர் முழுவதும் அவனுக்கு கீழே இரத்தம். உடனடியாக தையல் இட வேண்டும். ஒரு மருத்துவர் தையல் இடும் வேலையை கவனிக்க, மற்றொரு மருத்துவர் கூட வந்த பெண்ணிடம் ஹிஸ்டரி கேட்க ஆரம்பித்தார்.

   "என்ன ஆச்சுமா?"
   "கீழ விழுந்துட்டார் சார்."
   "வண்டில இருந்தா?"
   "இல்ல சார் வீட்ல, கதவுல இடிச்சுட்டார்"......................
    உரையாடல் தொடர்ந்தது. மற்றொரு பக்கம் சிகிச்சையும். பின்மண்டையில் ஆங்கில "U" வடிவில் பெரிய காயம். தையல் இட்டு இரத்தப் போக்கை நிறுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது. ஒருவழியாக தையலிட்டு முடித்த பின் மீண்டும் எங்கிருந்தோ இரத்தம் வழிந்தது. தலை முழுவதும் முடியை நீக்கிப் பார்த்தால், நடுமண்டையில் "S" வடிவில் மற்றொரு காயம். மற்றும் சில சிறுசிறு காயங்கள். அனைத்திற்கும் மருந்திட்டு சரி செய்ய கிட்ட தட்ட ஒருமணி நேரம் ஆனது. இன்னும் அவனுக்கு சுயநினைவு திரும்பவில்லை.
  
          "அல்கஹாலிக் டாக்டர். குடிச்சுட்டு வீட்ல இருக்க கதவுல மோதி படில உருண்டு விழுந்துட்டாராம்" சக மருத்துவர் கூறினார். அவன் கொத்தனாராக வேலை செய்கிறானாம். ஒரு நாளைக்கு முன்னூறு சம்பளம். பொழுது போக்கிற்கு எப்போதாவது குடிப்பானாம். அன்று குடித்துவிட்டு வரும் போது கதவில் இடித்திருக்கிறான். அந்த கதவில் இரும்புக் குமிழ்கள் இருந்திருக்கின்றன. அதனால் பலத்த அடி. இன்னும் சுய நினைவு திரும்பாததன் காரணம், ஒருவேளை குடித்ததால் இருக்கலாம், அல்லது மூளையில் இரத்தக்கசிவு, காயம் இருக்கலாம். அதனால் சி.டி ஸ்கேன் செய்யப்பட்டது. நல்லவேளை. அது நார்மல். ஓரிரு தினங்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தால் போதும். எனினும் மறுநாள் காலை இரத்தக் கறை படிந்த அதே சேலையுடன் கேண்டினில் டீ வாங்கிய அவனது மனைவியைப் பார்க்கையில் கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. "கண்ணு முழிச்சுட்டார் சார்." என்றாள் சிரிப்புடன். 

நிகழ்ச்சி 2:

        அந்த நகரின் பிரபல ஹோட்டல் உரிமையாளர் அவர். உடல்நிலை சரி இல்லாததால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அப்போது பணியில் இருந்த மருத்துவர் எனது நண்பர். அவரை சந்திக்கச் சென்ற போது எதேச்சையாக ஹோட்டல் உரிமையாளரை அங்கு காண நேர்ந்தது. கட்டிலில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில். அவரது படுக்கை முழுவதும் கோழை, எச்சில். தனக்குத் தானே பேசிக்கொண்டும் ஏதேதோ வார்த்தையில் திட்டிக் கொண்டும் வானத்தைப் பார்த்து காறி உமிந்து கொண்டும் இருந்தார். அது அவர் மேலேயே விழுந்தது.

      "அல்கஹாலிக் வித்ட்ராயல். டெலிரியம் அண்ட் டிரமன்ஸ்-க்கு போய்ட்டார்." நான் அவரையே பார்ப்பதைக் கண்டு எனது நண்பர் என்னிடம் கூறினார். (டெலிரியம் அண்ட் டிரமன்ஸ் பற்றி தனிப் பதிவே எழுதலாம். விவரம் வேண்டும் நண்பர்கள் லிங்கைப் பார்க்கவும். வலையில் தேடினாலும் கிடைக்கும்.) அவர் படுத்திய பாட்டிற்கு, அவரது மனைவி வந்து பார்ப்பதே இல்லையாம். மகன் வெளிநாட்டில். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. அவரது ஹோட்டல் மேனேஜர் வந்து பில் செட்டில் செய்து விடுவாராம். இது எதுவும் புரியாமல் அவர் தனக்குத் தானே புலம்பிக்கொண்டு இருந்தார்.

     ஒரு பொது அறிவு கேள்வி. ஒரு குவாட்டரின் விலை என்ன?  அறுபது ரூபாய்?, எழுபது ரூபாய்? அட மேக்ஸிமம் நூறு, ஆயிரம் ரூபாய்?

            . நிகழ்ச்சி 1ன் படி, அந்த கொத்தனாருக்கு தையல், சி.டி ஸ்கேன், அட்மிஷன், ரூம் சார்ஜ், மருந்து, மாத்திரை அவனை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் செலவு என எப்படியும் அவனது ஒரு மாத சம்பளத்தை விட அதிகம் செலவு ஆகிவிடும். இது போக இன்னும் சில தினங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாது. தலை முழுவதும் மொட்டை வேறு. காயம் ஆறினாலும் தழும்பு இருக்கும். எப்படியும் இரண்டு மாத சம்பளம் காலி. இதே நிகழ்வு சாலை விபத்தாக இருந்தால்,.... வேறு விலை.

      நிகழ்ச்சி 2-ன் படி, ஊரில் மதிக்கப்படும் அவர், அஃக்றினை போல மானமிழந்து, மதிகெட்டு, மனைவியும் பார்க்க விரும்பாமல் எல்லோருக்கும் பொல்லனாக கை கால்கள் கட்டப்பட்டு இருப்பது.

              இப்போது சொல்லுங்கள் உலகில் காஸ்ட்லியான பொழுதுபோக்கு எது?
  ச்சே. யோசிச்சா ஒரே டென்ஷன் பா.  மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்.

அப்படியே  ஓட்டும் போடுங்க பா.
   

Wednesday, September 15, 2010

கல்வி புரோக்கர்கள் எதற்கு?

      
   

           தனியார் பள்ளி வாகனம் மோதி மாணவன் பலி. ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்குத் தீவைத்தனர் - இந்த செய்தியை இரண்டு தினங்களாக தினசரிகளில் பார்த்து இருப்பீர்கள். இதில் எனக்கு சில சந்தேகங்கள்.

        ஏன் பள்ளிக்கு தீ வைத்தனர்?
                     அ) மாணவன் இறந்ததால்
                    ஆ) அதிக கட்டணம் வசூலித்ததால்
                     இ)  இரண்டுக்கும் சேர்த்து

  அ) மாணவன் இறந்ததால் - அப்ப போலிஸ் வேன் மோதி இறந்தால் போலிஸ் ஸ்டேசன எரிப்பீங்களா? ஆம்புலன்ஸ் மோதுனா ஹாஸ்பிட்டல எரிக்கனும்.  பள்ளி தாளாளர் நம்பியார் மாதிரி இடது உள்ளங்கைல வலது கையை வைத்து சுத்திக் கொண்டு, "அவன கொன்னுடு"னு ஆர்டர் போட்டாரா? அவர் வீட்ட ஏன் அடிச்சு நொறுக்குறீங்க? டிரைவர் செஞ்ச தப்புக்கு அவர் என்ன செய்வார்? "ஆக்ஸிடன்ட் செய்ய மாட்டேன்னு எழுதிக் குடு" அப்படி எழுதி வாங்கிட்டா வேலைல சேர்க்க முடியும்? ஒரு டிரைவர் செய்த தவறுக்கு மொத்த பள்ளியையும் எரிக்கலாமா? தனி மனித தவறுக்கு நிறுவனத்தை எரிக்கலாமா? அப்படி பண்ணனும்னா "துட்டுக்கு ஓட்டு" தமிழ்நாட்டுக்கு தீ வைங்க முதல்ல.

 ஆ) அதிக கட்டணம் வசூலித்ததால் - உன்ன யாரு இங்க படிக்க வைக்க சொன்னா? காசு அதிகம்னு தெரியுதுல? உனக்கு பிடிச்ச இடத்துல சேர்த்துக்கோ. பார்க் ஷெராட்டன்ல சாப்பிடனும்னா பில் கட்டி தான் ஆகணும். சாப்பிட்டு முடிச்சு பில் அதிகமா வந்தா ஹோட்டலுக்கு தீ வைப்பீங்களா? என் மகன்/மகள் ஸ்டேட் ரேங்க் எடுக்கணும்னு தான அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி எல்லாத்தையும் விட்டுட்டு புரோக்கர்கள் நடத்தும் பள்ளிகள்ல சேர்க்குறீங்க? விளம்பரம் பண்ற ஸ்கூல் தான் நல்ல ஸ்கூல். இரண்டாயிரம் பேர் படிச்சு மூணு பேர் ஸ்டேட் ரேங்க் எடுத்துருப்பான். அப்ப மீதி 1997 பேர் கதி?
    
        அந்த பள்ளி தாளாளர் உங்கள வேற பள்ளில சேர கூடாது, இங்க தான் படிக்கணும்னு சொல்லி அதிகம் வாங்குனா நீங்க பண்றது ஓ.கே. நான் இங்க தான் படிக்க வைப்பேன், நான் கொடுக்குற பணத்த தான் வாங்கணும்னா, அது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?

  இ) இரண்டிற்கும் சேர்த்து - ஒரு பள்ளி அதிகக் கட்டணம் வாங்கியதைக் கண்டிக்க நமக்கு ஒரு சிறுவனின் உயிர் தேவைப் படுகிறது. யாராவது உயிர் இழந்தால் தான் நமக்கு சொரணையே வரும்? அவன் இறந்திருக்காவிட்டால் நவத் துவாரங்களையும் அடைத்துக் கொண்டு கேட்கும் பணத்தை கொடுத்துக் கொண்டு இருப்பீர்கள். ரஞ்சிதா புகழ் நித்தியை திட்டும் போது அங்கு சென்ற படித்த கூமுட்டைகளையும் சேர்த்து தானே திட்டினோம். பள்ளியை திட்டும் போது, அதை வளர்த்து விட்ட பெற்றோரையும் சேர்த்து தானே திட்ட வேண்டும்?


   
        ஒரு பக்கம் பி.எட் முடித்து வேலை இல்லாமல் நிறைய பட்டதாரிகள். மற்றொரு பக்கம் எல்.கே.ஜி. அட்மிஷன்க்கு லட்ச ரூபாய் நன்கொடை. ஏன் இந்த முரண்பாடு?
 
          பள்ளி என்பது நிர்வாகம், ஆசிரியர் என இரு பகுதிகளைக் கொண்டது. நிர்வாகம் மட்டுமே மாறாதது. ஆசிரியர்கள் மாறிக் கொண்டே இருப்பர். ஆனால் ஆசிரியர்களே உங்கள் குழந்தைக்கு கிடைக்கும் கல்விக்கு பொறுப்பானவர்கள். நிர்வாகத்திற்கும் கல்விக்கும் சம்பந்தமே இல்லை. பள்ளி ஓனரா உங்க குழந்தைக்கு சொல்லித் தர போறார்? உங்கள் குழந்தைக்கு கற்பிக்கும் ஆசிரியருக்கு மிஞ்சி போனால் நாலாயிரம் ரூபாய் சம்பளம். அவர் வெளியேறினால் அதே நாலாயிரத்திற்கு மற்றொரு பி.எட் படித்தவர். இதில் பள்ளியின் தரம் என எதைக் கூறுவீர்கள்? ஆசிரியரையா? அல்லது நிர்வாகத்தையா? கண்டிப்பாக ஆசிரியர் தான். அப்புறம் எதற்கு நிர்வாகத்திற்கு மதிப்பு தருகிறீர்கள்?     ஏனென்றால் வறட்டு கவுரவம். இது மட்டுமே அனைத்திற்கும் காரணம். பணம் கட்ட முடியாத, அல்லது கட்ட வொர்த் இல்லாத பள்ளிகளில் சேர்த்து விட்டு, என் பையன் அங்கு படிக்குறான் என பீற்றுவது. பின் பள்ளியை எரிப்பது. அப்பள்ளியில் இருந்து நல்ல ஆசிரியர் விலகி ஒரு சிறிய பள்ளியில் சேர்கிறார், அல்லது ஆரம்பிக்கிறார் என்றால் உங்கள் குழந்தைகளை அங்கு சேர்ப்பீர்களா?

   என் தந்தை சேர்த்தார் (அவரும் ஆசிரியர் தான்). வேலை இல்லாத பட்டதாரி ஆசிரியர்கள் நான்கு பேர் சேர்ந்து ஆரம்பித்த பள்ளியில், அவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அந்தப் பள்ளியின் முதல் வருடத்திலேயே என்னை சேர்த்தார். அவர்கள் என்னை மருத்துவராக்கி அழகு பார்த்தனர்.  என்னுடன் அப்பள்ளியில் படித்த அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்றனர்.  (மிக மிகக் குறைந்த கட்டணத்தில்)

  பெற்றோரின் கவனத்திற்கு,
    ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் கட்டும் பணத்தில் எச்சம் மட்டுமே உங்கள் குழந்தைகளுக்கு கல்வி தரும் ஆசிரியர்களுக்கு செல்கிறது. மற்றவை ஏ.ஸி அறையில் இருக்கும் கல்வி புரோக்கர்களுக்கே செல்கின்றன. 

        குழந்தைகளை கவனிக்காமல் விடும் பாவத்திற்கு பெரிய பள்ளியில் சேர்த்து நிறைய பணம் கட்டி பரிகாரம் தேட முயற்ச்சிக்க வேண்டாம். எத்தனை பெரிய பள்ளியாக இருந்தாலும் உங்கள் அன்பும், கவனிப்பும் இல்லை என்றால் எல்லாமே வேஸ்ட்.

     எல்.கே.ஜி.யிலேயே உங்கள் குழந்தையின் தலையில் பணத்தை கட்டி  ரேசில் ஓடும் குதிரை ஆக்கிவிடாதீர்கள். கல்வி என்பது பாடப்புத்தகம் மட்டும் அல்ல.  பள்ளிக்கு வெளியே கல்வியைக் காட்டுங்கள்.  பெரிய பள்ளி என்று அதிகமாக செலவு செய்து ரிட்டனை உங்கள் குழந்தையிடம் எதிர்பார்த்து, அவர்களிடம் பொறுப்பை திணித்து, பள்ளி வாழ்க்கையை, இளமைப் பருவத்தை நரகமாக்காதீர்கள்.


 
  வேலை இல்லாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்,
           தயவு செய்து பண முதலை பள்ளிகளிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் .மனசாட்சிக்கு பிடிக்காமல் வேலை செய்யாதீர்கள். முடிந்த வரை கூட்டாக சேர்ந்து பள்ளி ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். இல்லை எனில் பகுதி நேரமாக சில மாணவர்களை தத்து எடுத்து நல்ல மதிப்பெண் பெற வையுங்கள். அடுத்து கூட்டம் தானாக உங்களைத் தேடி வரும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஏதேனும் உதவி கேட்டால் செய்யுங்கள். பி.எட் முடித்து வேலைக்கு செல்லாமல் இருக்கும் குடும்பத் தலைவிகளே, உங்களுக்கு வருமானம் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிறைய குழந்தைகளுக்கு உங்களது உதவி தேவைப் படுகிறது. ஆத்ம திருப்ப்திக்காக பகுதி நேரமாகவாது சொல்லிக் கொடுங்கள்.

  பெரிய புகழ் பெற்ற பள்ளி என்று, கல்வி புரோக்கர்களிடம் சிக்கி அவதிப் படுவதை விட சிறிய பள்ளிகளில் சேர்ந்து நேரடியாக ஆசிரியர்களின் உதவியை பெறலாம். இதனால் திறமை உள்ள ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

   பள்ளிகளை எரிப்பதால் பிரச்சனை தீரப் போவது இல்லை.  "எங்க அப்பா ஸ்கூல்க்கு தீ வச்சார். அதனால நான் புது ஸ்கூல்ல சேர போறேன்" என்று உங்கள் குழந்தைகள் சொல்லும் கேவலமான நிலைக்கு தான் இட்டுச் செல்லும்.

       பெற்றோரும் ஆசிரியரும் ஒரே சமுதாயத்தில் அருகருகே இருக்கும் போது, இடையில் கல்வி புரோக்கர்கள் எதற்கு?
    
   

    

Monday, September 13, 2010

போதும் பொண்ணு - போதும்டா கொடுமை சாமி!!!போன வருடம் அக்டோபர் மாதம் என்று நினைக்கிறேன். மதுரை இராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் நல வார்டில் பணி. அன்று ஞாயிற்றுக் கிழமை. மதியம் இரண்டு மணி இருக்கும். அவசர சிகிச்சை பிரிவிற்கு வேகமாக ஒரு ஆட்டோ வந்தது. ஒரு பாட்டி போர்வையால் மூடப்பட்ட ஒரு பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்தார். வழக்கம் போல ஏதாவது சளி காய்ச்சலாக இருக்கும் என்று நான் அந்த பாட்டி வருவதை பார்த்துக் கொண்டே இருந்தேன். குழந்தையை கட்டிலில் கிடத்தி விட்டு, அந்தப் பாட்டியிடம்,
  "பாப்பாவிற்கு என்ன பண்ணுது பாட்டி?"
   "பாம்பு கடிச்குருச்சு. ஒரு கால் வீங்கிடுச்சு சாமி"
     போர்வையை விலக்கிப் பார்த்தேன். வலது முழங்காலுக்கு கீழே முழுவதும் வீங்கி கறுத்து, நீர் வழிந்து கொண்டு இருந்தது. எனக்கு பேரதிர்ச்சி. கோபத்தில் அந்த பாட்டியை திட்ட ஆரம்பித்தேன்.
   "கொஞ்சமாவது அறிவு இருக்கா? கால் அழுகி போற மாதிரி இருக்கு. இவ்ளோ நாள் வீட்ல வச்சு என்ன பண்ணிக்கிட்டு இருந்திங்க?"
  "இன்னைக்கு காலைல தான் கடிச்சுது சார். உடனே தூக்கிட்டு வர்றேன்." பாட்டி அழுக ஆரம்பித்தது.
   நிச்சயமாக தெரியும் இது நடந்து மூன்று நான்கு நாட்கள் ஆகிருக்கும். இனிமேல் இந்த பாட்டியிடம் உண்மை வராது. பேசி நேரத்தை வீணடிக்காமல் சிகிச்சையை ஆரம்பிக்கலாம் என்று நினைத்து அந்தப் பாட்டியிடம், "பாப்பா இங்க இருக்கட்டும், முன்னாடி போய் பாப்பா பேரு சொல்லி சீட்டு பதிஞ்சிட்டு வாங்க" என்று அனுப்பினேன்.
      அந்த குழந்தையிடம்,
         "வலிக்குதா பாப்பா?"
         "லேசா வலிக்குது சார்"
        "உன் பேரு என்னடா?"
        "போதும் பொண்ணு"
      மதுரை பக்கம் இந்த பெயரை அடிக்கடி கேட்கலாம். வரிசையாக பெண் குழந்தை பிறந்து கொண்டே இருந்தால், கடைசிக் குழந்தைக்கு போதும் பொண்ணு என்று பெயர் வைத்தால் அடுத்து பையன் பிறக்கும் என்பது நம்பிக்கை.
     " என்னைக்கு பாம்பு கடிச்சுது?"
      " மூணு நாள் ஆச்சு சார்."
        "எங்க கடிச்சுது?"
      "வீட்டு பக்கத்திலேயே சார். விளையாடிகிட்டு இருக்கும் போது."
      "அப்புறம் என்ன பண்ணுனீங்க?"
 அந்த ஐந்து வயது குழந்தை என் கேள்விகளுக்கு அழகாக பதில் சொல்லிக் கொண்டே வந்தது. அது பேசுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல. வேதனையின் சாயல் முகத்தில் தெரிந்தாலும், அதை வெளிக்காட்டாமல் பொறுமையாக என்னிடம் பேசியது. அவ்வளவு அழகு. பாம்பு கடித்த உடன் அவளது பாட்டி, லோக்கல் நாட்டு வைத்தியர் கம் கோவில் பூசாரியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் கடித்த இடத்தில் கத்தியால் கீறி இரத்தத்தை வெளியேற்றிவிட்டு, விஷம் வெளியேறி விட்டது என்று வீட்டுக்கு அனுப்பி விட்டான். வீட்டிற்கு வந்த பின் கால் சிறிது சிறிதாக வீங்க ஆரம்பித்து இருக்கிறது. மீண்டும் அவனிடம் அழைத்துச் சென்ற போது மீண்டும் கீறி விட்டு, கொஞ்சம் இலைகளை மூலிகை என்று கொடுத்து அனுப்பி விட்டான். பாட்டியும் வீட்டில் தனக்கு தெரிந்த வைத்தியத்தை பார்த்திருக்கிறார். அதற்குள் மூன்று தினங்கள் ஓட, வீக்கம் அதிகமாகவே இங்கு அழைத்து வந்து இருக்கிறார்கள். இது கொடுமை என்றால் இதற்கு அடுத்து போதும் பொண்ணு சொன்னது மிகப் பெரிய கொடுமை.
  "உங்க அப்பா என்ன பண்றார்? அவராவது உன்ன முன்னாடியே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துருக்கலாம்ல?"
"எங்க அப்பாக்கு என்ன பிடிக்காது."
"ஏன் பிடிக்காது?"
"நா பையனா பிறக்கனும்னு நெனச்சாராம். ஆனா பொண்ணா பிறந்ததால பிடிக்காது. என்கிட்ட பேசவே மாட்டார்."
"அம்மா?"
"அவங்க இப்ப மாசமா இருக்காங்க. நிறை மாசம். வர முடியாதாம். கால பாத்து அழுதுகிட்டே இருந்தாங்க."

            எனக்கு வந்த கோவத்திற்கு அந்த அப்பனை வெட்டிக் கொல்லலாம் போல இருந்தது. ஆனால் கோவப் பட நேரம் இல்லை. காலில் நீர் கோர்த்து, இரத்தக் குழாயை அழுத்திக் கொண்டு இருப்பாதால் காலுக்கு இரத்தம் செல்லாமல் கால் அழுகிக் கொண்டு இருந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை நிபுணரை வரவைத்து, பேஸியாட்டமி எனும் சிறிய அறுவை சிகிச்சை செய்து அழுத்தத்தை குறைத்தோம். மீண்டும் இரத்த ஓட்டம் வந்துள்ளதா என அறிய டாப்ளர் ஸ்கேன் பண்ண வேண்டும். அன்று ஞாயிறு. விடுமுறை. அறுவைசிகிச்சை நிபுணர் அவரது நண்பரிடம் ஹேன்ட் டாப்ளர் மிசின் வாங்கி வந்து பார்த்தார். இரத்த ஓட்டம் வர வில்லை. இரத்தநாள அடைப்பை நீக்கும் மருந்துகள் செலுத்தப்பட்டன. செல்லுலைடிஸ்-க்கு ஆண்டிபையாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டன. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர் வாஸ்குலார் சர்ஜனை (இரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர்)  போனில் பிடித்தோம். அன்று அவருக்கு பணி இல்லை எனினும் குழந்தைக்காக வந்து பார்த்தார். மொத்த வார்டும் பம்பரமாக சுழன்றது. இந்த ரோஜாப் பூவை காப்பாற்ற வேண்டும் என்று.                          வாஸ்குலார் சர்ஜன் "எல்லாமே கேங்கிரீன் ஆயிடுச்சு, ஆம்புடேஷன் தான் பண்ணனும் போல. இல்லனா கேங்கிரீன் எக்ஸ்டன்ட் ஆகிட்டே இருக்கும்." எனக்கு கண்களில் நீர் வந்தது.
  "முதல்ல below knee amputation பண்ணலாம். முடிஞ்சவரை ட்ரை பண்ணலாம். அப்படியும் முடியலனா above knee பண்ணிக்கலாம்." வாஸ்குலார் சர்ஜன் சொன்னார். அறுவைசிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தோம். எனக்கு மனதே சரி இல்லை. இந்தப் பிஞ்சு இனி கால் இல்லாமல் எப்படி இருக்குமோ என்று. அட்லீஸ்ட் below knee யோடுபிழைத்து வந்து விடு மகளே. என அவளிடம் மனதுக்குள் கூறினேன். வார்டில் இருக்கப் பிடிக்காமல் ரெஸ்ட் ரூம்க்கு வந்தேன். அறுவை சிகிச்சை முடித்து சர்ஜனும் வந்தார். "above knee போயிடும் போல டாக்டர். சுத்தமா பிளட் சப்ளை இல்ல." என்றார்.

மறுநாள் போதும் பொண்ணைப் பார்த்தேன்.
 "எப்படி இருக்குடா? வலிக்குதா?"
 "வலி குறஞ்சுருச்சு சார். திரும்ப கால் வளந்துருமா சார்?"
  அவளிடம் எப்படி சொல்ல இதற்கு மேலும் கால் வெட்டப்படும் என்று. சிரித்துக் கொண்டே மழுப்பினேன். அவளுக்காக வாங்கிய சாக்லேட்டை அவளிடம் கொடுத்து விட்டு  நிற்க அங்கு நிற்க முடியாமல் வந்து விட்டேன்.
    அன்றில் இருந்து பதினைந்து நாட்களுக்கு சொந்த வேலை காரணமாக விடுமுறை எடுத்திருந்தேன். மீண்டும் பணிக்கு திரும்பிய போது போதும் பொண்ணு அங்கு இல்லை. என்ன நடந்திருக்கும் என்று தெரிந்ததால் அவளைப் பற்றி யாரிடமும் கேட்க வில்லை. போதும்டா கொடுமை சாமி!!.

 
  டிஸ்கி: இது என் மருத்துவ நண்பருக்கு நடந்த உண்மைச் சம்பவம்.

Friday, September 10, 2010

சுகரும் ஃபிகரும் பாகம் - 4

  முதல்  மூன்று பாகங்களிலும் சர்க்கரை வியாதியின் அடிப்படை விசயங்களைப் பார்த்தோம். இதுவரை நாம் தெரிந்து கொண்ட விசயங்களில் இருந்து ஒரு எளிய ரியல் டைம் எடுத்துக்காட்டு. டயாபடிஸ் இல்லாத நார்மல் உடல்

 காலை 8.00 மணி : 
         ஒரு வடை கொஞ்சம் பொங்கல்

        9.00 a.m
            உணவு குளுக்கோஸாக மாறி இரத்தத்தில் கலக்கிறது. இரத்த குளுக்கோஸ் அளவு கூடுகிறது.

          9.01 a.m
             உடனே இன்சுலின் செயல்பட்டு குளுக்கோஸை  சேமிக்கிறது/செலவழிக்கிறது.

           9.01 to 9.30
            இரத்த குளுக்கோஸின் அளவு கட்டுக்குள் வருகிறது.

           10.30 a.m
            உடல் இயக்கத்திற்கு குளுக்கோஸ் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதால் இரத்தத்தில் அதன் அளவு குறையத் தொடங்குகிறது. 

          10.31 a.m to 1.00 p.m
                       குளுக்கோஸை மீட்டு எடுக்கும் ஹார்மோன்கள் செயல்பட தொடங்கி இன்சுலின் சேமித்த குளுக்கோஸை மீட்டு இரத்தத்திற்கு அளிக்கின்றன.

         1.00 p.m
         அடுத்த சாப்பாடு. மீண்டும் அதே நிகழ்வு.


   இது போன்று தான் இரத்தத்தில் குளுக்கோஸ் சமநிலையாக வைக்கப்படுகிறது. உடலுக்கு தேவையான குளுக்கோஸும் வழங்கப்படுகிறது.

    சிகிச்சை பெறாத டயாபடிஸ் நோயாளியின் உடலில்  இது எப்படி நடக்கும்?

காலை 8.00 மணி
       ஒரு வடை கொஞ்சம் பொங்கல்

   9.00 a.m
      இரத்ததில் குளுக்கோஸின் அளவு கூடுகிறது.

   9.01 a.m
      இன்சுலின் இல்லாததால் ஹைபர்கிளைசீமியா வருகிறது ( முழு விளக்கத்திற்கு பாகம் மூன்றைப் பார்க்கவும்).
  
    9.01 to 9.30 a.m
          குளுக்கோஸை சேமிக்க முடிவதில்லை. இரத்தத்தில் அதிகமாக குளுக்கோஸ் இருப்பதால் இரத்தக் குழாய்கள் பாதிக்கப் படுகின்றன.  


 
9.30 to 10.00 a.m
       இரத்ததில் சர்க்கரை தொடர்ந்து அதிகரிக்கிறது. சிறுநீரில் வெளியேறுகிறது.

10.00 a.m
       உடல் இயக்கத்திற்கு பயன்படுத்தப் பட்டதாலும், சிறுநீரில் வெளியேறியதாலும் இரத்த குளுக்கோஸ் அளவு குறைகிறது.  

 10.30 a.m
     சேமிக்கப் படாததால் குளுக்கோஸை மீட்டு எடுக்கவும் முடிவதில்லை.

10.30 a.m-க்கு பிறகு
     குளுக்கோஸ் பற்றாக்குறையால் சோர்வு, தளர்ச்சி, மயக்கம் ஏற்படுகிறது.

        இந்த படத்தை கொஞ்ச நேரம் முறைச்சு பாத்தா நிறையா விஷயம் புரியும்.

  எனவே டயாபடீஸ் நோயாளி அதிக குளுக்கோஸ் மற்றும் குறைந்த குளுக்கோஸ் இரண்டாலும் அவதிப்படுவார். இரத்தத்தில் குளுக்கோஸ் சமநிலையாக இருக்காது. உடலுக்கும் தேவையான குளுக்கோஸ் கிடைக்காது. (குறிப்பு: நேரங்கள் எடுத்துக்காட்டுக்காக போடப்பட்டவை. நபருக்கு நபர் அவை மாறும்.)

  முதல் மூன்று பாகங்களில் விளக்கிய விசயங்களையே இங்கு எடுத்துக்காட்டாகத் தந்திருக்கிறேன். இதில் சந்தேகம் இருந்தால் அவற்றை படித்துப் பார்க்கவும். அப்படியும் தீர வில்லை என்றால், மெயில் அல்லது பின்னூட்டம் வழியாக தெரியப்படுத்தவும்.
 
  பிடித்து இருந்தால், நான்கு பேருக்கு இந்த பதிவு தெரிய வேண்டும் என்று நினைத்தால் ஓட்டுப் போடுங்கள்.
 சுகரும் ஃபிகரும் பாகம் -3
 சுகரும் ஃபிகரும் பாகம் -2
 சுகரும் ஃபிகரும் பாகம் -1

     
 

Monday, September 6, 2010

சுகரும் ஃபிகரும் பாகம் - 3

முந்தைய  பதிவுகள்,
சுகரும் ஃபிகரும் பாகம் - 1
சுகரும் ஃபிகரும் பாகம் - 2  தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் கலைச் சொற்கள்
    ஹைபோகிளைசீமியா(hypoglycaemia)
                - இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்த நிலை
    ஹைபர்கிளைசீமியா(hyperglycaemia)
                     - இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமான நிலை

     Sickness comes on horseback but departs on foot.  ~Dutch Proverb   நம் உடல் ஒரு அழகான வெனிஸ் நகரம்.
                     ஆம். உடலின் எல்லா செல்களும் இரத்த ஓட்டத்தில் ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டுள்ளன.
                    இரத்த ஓட்டம் என்றால் சாதாரண ஓட்டம் இல்லைங்க. வலது இதயத்தில் கிளம்பி, நுரையீரலுக்கு போய் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு, அப்படியே இடது இதயத்துக்கு வந்து, அங்கிருந்து பல பாகமாக பிரிந்து உடல் முழுவதும் சென்று, தேவையானவற்றை கொடுத்துவிட்டு, கழிவுகளை எடுத்துக்கொண்டு, சிறுநீரகத்தில் அந்தக் கழிவுகளை வெளியேற்றிவிட்டு, குடல் பகுதியில் இன்பாக்ஸ்-ல் வந்த உணவில் சத்துப் பொருட்களை உறிஞ்சி, கல்லீரலுக்கு போய் ஸ்பேம் செக் பண்ணிட்டு, திரும்ப வலது இதயத்திற்கு வந்தால்,..... ஸ்ஸ்ஸ் அப்பாடா! ஆனா ரெஸ்ட் கிடையாது. உடனே திரும்ப நுரையீரலுக்கு அனுப்பிவிடும் இதயம். இப்படி பிறந்ததில் இருந்து ஒரு செகண்ட் கூட ரெஸ்ட் எடுக்காம ஓடுறது தான் இரத்த ஓட்டம்.

               இந்த இரத்த ஓட்டத்தின் மூலமாக மட்டுமே அனைத்து செல்களுக்கும் குளுக்கோஸ் பரிமாற்றம் நடக்கிறது. அதனால், இரத்தத்தில் குளுக்கோஸ் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது.

              நம் கதையில், (கதை மறந்து விட்டால் ஒருமுறை பார்த்துக் கொள்ளவும்) வீட்டிற்கு தேவையான மளிகை, காய்கறி, பால் போன்ற பொருட்களை மாரிக்கண்ணு தான் வாங்கி வர வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவன் கையில் பணம் இருப்பது எவ்வளவு அவசியம்?

                   இரத்தத்தில் குளுக்கோஸ் அவசியம். ஓ.கே. அதிகமாக இருந்தால் என்ன ஆகும்?

             ஏற்கனவே நாம் சொன்னது போல,
   இரத்தத்தில் குளுக்கோஸ்- குடிகாரன் கையில் பணம்.
 ஒரு அளவுக்கு இருந்தா பிரச்சனை இல்ல. அதிகமா இருந்தா ஆப்பு தான்.

   நம்ம இரத்தத்தில இருக்க குளுக்கோஸ் யூரின்ல லீக் ஆகாம தடுக்குறது கிட்னி தான். ஓரளவுக்கு தான் அதனால தடுக்க முடியும். அதாவது சுமார் 180mg/dl வரை. அதுக்கு மேல இரத்த சர்க்கரை கூடினா "போய் தொலை. என்னால தடுக்க முடியல." என்று வழியனுப்பி வைத்துவிடும். போற குளுக்கோஸ் சும்மா போகாது. கூடவே உடம்புல இருக்க தண்ணீரையும் கூட்டிகிட்டு போகும். அதனால அதிகமா யூரின் போகும். யூரின் அதிகமா போறதால தண்ணீர் அதிகமா தவிக்கும். குளுக்கோஸ் அதிகமா போறதால, பசியும் அதிகமா எடுக்கும்.

 இப்போ அடுத்த எடுத்துக்காட்டு.

  யூரின்ல போற குளுக்கோஸ் - ஒயின்ஷாப் பார்ல செலவாகுற பணம்.

இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகமாக  இருந்தால் (ஹைபர்கிளைசீமியா) வேறு என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
   நாவறட்சி, அதிக முறை சிறுநீர் கழித்தல், இரவில் சிறுநீர் வருவதால் தூக்கமின்மை, உடலுக்கு தேவையான குளுக்கோஸ் வெளியேறுவதால் சோர்வு, தளர்ச்சி, உடல் எடையில் மாற்றம்,  அதிக குளுக்கோஸ் காரணமாக, நோய்த் தொற்று, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, மன உளைச்சல் - இவை உடனடியாக ஏற்படும்.

   நீண்ட காலமாக ஹைபர்கிளைசீமியா இருந்தால் இரத்தக் குழாய்கள், நரம்புகள் பாதிக்கப்படும். கண், சிறுநீரகத்தில் உள்ள மெல்லிய இரத்தக் குழாய்கள் பாதிக்கப் படுவதால் கண் பார்வைக் குறைபாடு, சிறுநீரக செயலிழப்பு ஏற்ப்படும். இதயம், மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்கள் பாதிக்கப் படுவதால் இதய அடைப்பு, பக்கவாதம் ஏற்ப்படும். நரம்புகள் பாதிக்கப் படுவதால் தலைசுற்றல், புற நரம்புகளில் வலி, எரிச்சல்  போன்றவை ஏற்ப்படும்
  இரத்தத்தில குளுக்கோஸ் அதிகமா இருந்தா இவ்வளவு வருமா? ஆவ்வ்வ்வ்......


.

நகைக்கடை விளம்பர டிஸ்கசனில் தப்பி வந்தவரின் மரண வாக்குமூலம்

 முஸ்கி: சத்தியமா இது கற்பனை தானுங்கோ.

  நகைக்கடை விளம்பரத்தின் டிஸ்கசனில் கலந்து கொண்ட ஒரு நபர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவர் மூலம் உலகிற்கு அதிர்ச்சி தரும் விஷயங்கள் கசிந்துள்ளன.  டிஸ்கசனில் நடந்ததாக அவர் கூறியதாவது.

விஜய் : சைலன்ஸ். யாரும் பேசக் கூடாது. டிஸ்கசன் ஆரம்பிங்க.

இயக்குனர் (பவ்யமாக) : பேசாம டிஸ்கசன் பண்ண முடியாது சார்.

விஜய்: ஒரு டாக்டர்க்கே சொல்லித்தரியா? தமிழ்நாட்டுல என்ன எதுத்து பேசுன மொத ஆள் நீ தான்.

உதவி இயக்குனர்: அது இல்ல சார்........

விஜய்: இரண்டாவது ஆள் நீ தான்.  

நகைக்கடை  ஓனர்: (மொபைலில்). ஹலோ யாரு தாவூத்தா? ஏக் மா தோ துக்கடா. இங்க ஒருத்தன் லொள்ளு பண்ணிகிட்டே இருக்கான்.................. இல்ல இல்ல. உடனே போட வேண்டாம். ஒத்து வரலைனா சொல்றேன்.


                    அழகா இருந்தாலே பொறாமை. பஸ் ஸ்டாப்ல ஏதோ ஒரு நாயி பண்ணுன வேலை

விஜய்: ண்ணா! இதுக்குலாம் கோவிச்சுகலாமா? வாங்கண்ணா நம்ம டிஸ்கசன்க்கு போலாம்.

இயக்குனர்: சார் முதல் ஷாட். நீங்க கார்ல இருந்து இறங்கி வரீங்க.

விஜய்: சூப்பர். உடனே ஓபனிங் சாங். இப்ப தான் விவேகா பேசுனார். "அரிசினா ஆட்டுக்கல்லு, மாவுனா தோசைகல்லு"னு சூப்பர் சாங் எழுதி வச்சுருக்கார்.

இயக்குனர்: விளம்பரமே 30 செகண்ட் தான். இதுல சாங் லாம் வைக்க முடியாது.

விஜய்: சாங் இல்லையா? கோக் விளம்பரத்துல வச்சாங்க. நல்லா என்ன ஏமாத்துறிங்க. நெக்ஸ்ட்?

இயக்குனர்: ஒரு ஸ்கூல்க்கு போய் அங்க இருக்குற மணிய பாக்குறிங்க. உடனே பிளாஷ்பேக்.

விஜய்: நா சொல்றேன். சின்ன வயசுல, ஸ்கூல் மணிய இரும்பு கடைல போட்டு, பேரிச்சம்பழம் வாங்கி சாப்பிட்டுறேன். அதனால ஊர விட்டு ஓடி வந்து தி.நகர்ல வெல்டிங் கடைல வேலை பாக்குறேன். அப்ப அசின் உங்க அப்பா, அம்மா யாருன்னு கேக்குது. உடனே ஊருக்குப் போறேன். என்னாத்த சொல்வேனுங்கோ. வடுமாங்கா ஊறுதுங்கோ.

இயக்குனர்: இதென்ன சிவகாசி ரீமேக்கா? கான்செப்ட்ட கேளுங்க சார். நீங்க பெல் அடிக்கும் போது வாட்ச்மேன் வந்து விஜய்னு சொல்றார்.

விஜய்: இந்த கான்செப்ட் சரி இல்ல சார். நகைக்கடை விளம்பரம் எப்படி இருக்கணும் னு நான் சொல்றேன் பாருங்க. வில்லன் நகையை கொள்ளை அடிச்சுட்டு ப்ளைட்ல தப்பிச்சு போறான். நான் சைக்கிள்ல விரட்டிகிட்டே போறேன். சரியான சேஸிங் சீன். அவன் இந்தியா பார்டர தாண்டும் போது சைக்கிள்ல முன் பிரேக் பிடிச்சு அப்படியே பறந்து பிளைட்குள்ள போயி நகைய காப்பாத்துறேன்.

  கேட்டுக்கொண்டிருந்த  ஒரு உதவி இயக்குனருக்கு திடீரென்று காக்கா வலிப்பு வந்து இழுக்கிறது. அவரை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு செல்கின்றனர்.

விஜய்: இந்த கான்செப்ட் சரி இல்ல போல. நீங்க சொன்னதே பண்ணலாம்.

இயக்குனர்: வாட்ச்மேன் விஜய்னு சொன்னது, தலைவாசல் விஜய்ய. அவர் தான் ஹெட்மாஸ்டர். உடனே கோவிச்சுக்கிட்டு நீங்க வந்த கார்லயே திரும்பி போயிடுறிங்க.

விஜய்: திரும்பி போறதுக்கு முன்னாடி ஒரு பஞ்ச் டயலாக் வச்சா நல்லா இருக்கும். நீங்க பிஸ்கட் செய்ய தான் தங்கம் வாங்குவிங்க, நாங்க பிரட் செய்ய, பிஸ்ஸா செய்ய, ஜாங்கிரி செய்ய, மசாலா கடலை செய்ய, கார சேவு செய்ய தங்கம் வாங்குவோம்.

  மற்றொரு உதவி இயக்குனர் மாடியில் இருந்நது குதிக்க, 108க்கு கால் பறக்கிறது. கொலைக் கேஸ் ஆகிவிடும் என அனைவரும் தலைதெறிக்க ஓட, டிஸ்கசன் முடிந்தது.

Sunday, September 5, 2010

வாங்க மறந்த புத்தகங்கள் - நூலாறு 2010


 வேலூர் கோட்டை மைதானத்தில் "நூலாறு 2010" என்று புத்தகக் கண்காட்சி நடக்கிறது. ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமா? சலங்கை கட்டிக் கொண்டு கிளம்பியாச்சு.

        பபாப்சி நடத்துவது போல பிரம்மாண்டம் இல்லை எனினும், நன்றாக இருந்தது. நான் போகும் போது சாரை சாரையாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன் வந்து கொண்டு இருந்தனர். வந்ததற்கு அடையாளமாக திருக்குறள், பாரதியார் கவிதைகளை வாங்கிக் கொண்டு இருந்தனர். ஒரு மாணவன் மட்டும் வயதுக்கு சம்பந்தமில்லாமல் "தி.மு.க உருவானது ஏன்?" போன்ற தலைப்புகளைப் பார்த்துக் கொண்டு இருந்தான். (பிற்காலத்தில் பிரபல பதிவராக வாய்ப்புகள் உள்ளது, வாழ்த்துக்கள் தம்பி). பெண் ஆசிரியர்களது பார்வை பெரும்பாலும் ரமணிச்சந்திரன், காஞ்சனா ஜெயதிலகர் போன்றோரின் புத்தகங்களின் மீதே இருந்தது.

                    பெரும்பான்மையான பதிப்பகங்களில் ஏற்கனவே பார்த்த புத்தகங்களையேப் பார்க்க முடிந்தது. புது வரவுகள் குறைவாகவே தென்பட்டன. ஒரு நல்ல விஷயம் சமையல் புத்தக்கங்களின் ஆதிக்கம் குறைந்து இருந்தது. ஆனால் அந்த இடத்தை ஆன்மீக மற்றும் மருத்துவ குறிப்பு புத்தகங்கள் அடைத்திருந்தன.

                         கல்லூரி மாணவர்களில் இருவகை.  சே, பிரபாகரன், பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் இன்னபிற ஒருவகை. பணக் கடவுள் வாரன் பபெட்,  இன்போசிஸ் நாராயண மூர்த்தி, என ஒருவகை. ஒருவகையினரை மற்ற வகையினர் கேவலமாக பார்த்துக் கொண்டனர்.

         மற்ற புத்தகக் கண்காட்சி போலவே இதிலும் நடுத்தர நவீனத்துவவாதிகளின் தொல்லை தாங்க முடியவில்லை.  (நடுத்தர வயதில், பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்று, குடும்பத்திலும் எதுவும் பிரச்சனை இல்லாத போது, அதுவரை மறந்து போன சமூகப் பொறுப்பு, இலக்கிய ஆர்வம் எல்லாம் பொத்துக் கொண்டு வருமே, அவர்கள் தான்.) ந.ந.வாதி1: "யாருக்குமே படிக்குற  ஆர்வமே இல்லப்பா"
ந.ந.வாதி 2: "எல்லாரும் டி.வி பாக்குரதுல தான் இன்டரஸ்ட் காட்றாங்க. ஏதோ நம்மள மாதிரி ஒன்னு ரெண்டு பேர் தான் புக் படிக்குறோம்."
ந.ந.வாதி1: "என் பையனுக்கு டெய்லி சொல்றேன் புக் படிடா னு. கேக்க மாட்டேன்றான்" ஆர்வ மிகுதியில் அவர்கள் வாங்கியப் புத்தகங்களை எட்டிப் பார்த்தேன். இயர்புக் சலுகை விலையில் எழுபது, சிவகாமியின் சபதம் முதல் பாகம் நக்கீரனில் மலிவு விலைப் பதிப்பு. ( கடைக்காரர் எவ்வளவோ சொல்லியும் இரண்டாம் பாகம் வாங்கவில்லை அவர். அடுத்த எக்சிபிசன்ல வாங்கிக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.) கவின்ஸ் மில்க் குடிங்க. வேகமா வளரலாம் என்று சொல்லலாம் என்று நினைத்தேன்.
            ஐம்பதில் தான் வாசிக்கும் பழக்கம் ஆரம்பிக்கிறது என்றால், அடுத்த தலைமுறையினருக்கு எப்படி அறிவுரை கூற முடியும்? நல்ல வேலை. சென்னை மதுரை போல, பெருமைக்கு புத்தகம் வாங்கும் கூட்டம் இங்கு அதிகமாக இல்லை.

        எப்போதும் போல, கிழக்கு, விகடன் பதிப்பகங்களில் கூட்டம் இருந்தது. விகடனில், சக்தி விகடனில் உருவி செய்த புத்தகங்களுக்கு 25% தள்ளுபடி வேறு. சில பதிப்பகங்களின் ஸ்டால்களுக்குள் நுழையவே முடியவில்லை. அவர்களின் தலைப்புப்படி பார்த்தால், உலகத்தில் அனைவரும் பணக்காரர்களாக, தன்னம்பிக்கை உடையவர்களாக, அனைத்து மொழிகளையும் தெரிந்தவராக, உடல் ஆரோக்கியம் உள்ளவராக ............... இன்னும் நிறைய உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


  
     ஏழாவது முறையாக "பெண் ஏன் அடிமையானாள்?" வாங்கினேன். இந்தமுறையும் யாருக்காவது பரிசாகக் கொடுத்தால் சந்தோசம் தான். (விலை 25/- ரூபாய் தாங்க ஹி ஹி ஹி). 

     மொத்தப் புத்தகங்களிலும் மதியின் அடடே!! கார்டூன்கள் தொகுப்பு மிகவும் கவர்ந்தது.நேரமும் பணமும் இருந்தால் படிங்க.    கல்லூரியில் படிக்கும் போது மெஸ் பீஸ் கட்ட வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்கள் வாங்கிவிட்டு, மூன்று வேளையும் தேநீர், வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு வெறித்தனமாக புத்தகங்கள் படித்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.  ஸ்டால்களில் நின்று கொண்டே முழுப் புத்தகத்தையும் படித்து விடுவோம். ஆனால் இப்போது புத்தகங்களின் மீதான அந்தக் கவர்ச்சி குறைந்துவிட்டது. வாசிப்பின் மீதான கவர்ச்சி அப்படியேத் தான் உள்ளது. என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தேன்.
   அலுப்பு தட்டும் ஒரே வகையான மோனோடோனஸ் புத்தகங்கள்.
   தெரிந்து கொள்ள சிறிதும் தேவை இல்லாத கருத்துகளைப் பற்றிய புத்தகங்கள்.
 ஆழ்ந்து செல்லாமல் நுனிப்புல் மேயும் புத்தகங்கள்,
  இதைவிட அதிகமாக நெட்டில் கிடைக்கிறதே என்ற எண்ணம்.
 அதியசமாக கிடைக்கும் ஒன்றிரண்டு நல்ல புத்தகங்களிலும் மலைக்க வைக்கும் விலை. 

   இப்போது புத்தகம் வாங்க வைத்திருக்கும் பணத்தில் சாப்பிடுகிறேன். என்னைப் போன்றே பலர் நினைக்கின்றனர் போல. அதனால் தான் கண்காட்சிக்கு வெளியில் டார்லிங் பேக்கரி ஸ்டாலில் நல்ல கூட்டம்.


       பழைய ஞாபகங்கள் நினைவுக்கு வர, தமிழ்ப் புத்தகக் கன்னி இழந்த கவர்ச்சியை மீண்டும் பெற்றால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்ற எண்ணத்துடன் வெளியேறினேன்.