வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Saturday, September 25, 2010

இன்டர்மீடியேட் வயசு - பாகம் இரண்டு




  அன்றும் அப்படி தான் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தோம். வகுப்புக்குள் செல்லும் அனைவரும் எங்களைத் தாண்டி தான் செல்ல வேண்டும். என் நண்பர்கள் உள்ளே  நுழையும் பெண்களை கிண்டல் செய்து கொண்டே இருந்தனர். மத்த விஷயங்களில் பயங்கர சேட்டை செய்யும் நான் பெண்கள் என்றாலே ஓடி ஒளிவேன். சிறுவயதில் இருந்தே கூச்சம். அதனால் அமைதியாக இருந்தேன். அப்போது தான் அவள் வந்தாள். எங்களுக்கும் கரும்பலகைக்கும் இடையில் உள்ள இடைவெளியில் கரும்பலகையின் எழுத்துக்களை அழிக்கும்படி அதை ஒட்டி வந்தாள். அப்படி அவள் சென்றதில் இருந்தே அவளுக்கு எங்கள் மீது இருந்த பயம் புரிந்தது. வெள்ளை நிற சுடிதார், இரட்டை ஜடை போட்டிருந்தாள். பொதுவாக பள்ளியில் தான் இரட்டை ஜடை போட்டு வருவார்கள். இன்டர்மீடியேட் கல்லூரியில் இரட்டை ஜடை போட்டு வந்து நான் பார்த்தது இல்லை. என்னையும் மீறி "யார்டா இரட்டை ஜடை போட்ட ஸ்கூல் பொண்ண உள்ள விட்டது?" என்று உரக்க கூறி விட்டேன். சடாரென்று திரும்பினாள். கண்களில் கோவம் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது. அவள் முறைத்த உடனே நம்ம இரத்தத்தின் இரத்தங்களுக்கு இரத்தம் சூடாகிவிட்டது. "ஏய் என்ன முறைக்குற?" என்று எழுந்துவிட்டனர். என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை. விறு விறு என வகுப்புக்குள் சென்று விட்டாள். எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. விடுங்கடா, விடுங்கடா என அவர்களை சமாதானம் செய்தேன்.

    என் நண்பர்களுக்கோ பயங்கர ஆச்சரியம். அதுவரை நான் எந்த பெண்ணையும் கண்டுகொண்டதே இல்லை. முதல் முறையாக ஒரு பெண்ணை கிண்டல் செய்துள்ளேன். அதுவும் அவள் முறைத்ததற்கு கோவம்  வரவில்லை. இதற்கு ஒரு வாரத்திற்கு முன் தான் தியேட்டரில் முறைத்தான் என்று லோக்கல் நெல்லூர்காரனிடம் சண்டைக்கு போய் போலிஸ் வந்து சமாதானப் படுத்தும் அளவு சென்றது. அனைவரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தனர். ஹி ஹி ஹி என கேவலமாக சிரித்து  வைத்தேன்.

     மறுநாள் காலை ஏழு மணி இருக்கும். எங்கள் வீட்டின் மொட்டை மாடியில் பல் துலக்கிக் கொண்டு இருந்தேன். திடீரென்று "டேய் சுமன் சீக்கிரம் வாடா, உன் ஆளு போறா" என்று பயங்கர சத்தமாக கத்தினான் நண்பன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. வேகமாக எட்டிப் பார்த்தேன். அவள் என் வீட்டின் வாசல் வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தாள். கரெக்டா நான் எட்டிப் பார்க்கும் நேரம் பார்த்து மாடியைப் பார்த்து விட்டாள். மீண்டும் ஒரு முறைப்பு. பிறகு தான் தெரிந்தது. எங்கள் தெருவின் இறுதியில் இருக்கும் வீடுகளில் உள்ள பெண்கள் விடுதியில் தான் அவள் தங்கியிருக்கிறாள் என்று. தினமும் இந்த வழியாக தான் கல்லூரிக்கு வரவேண்டும். பிறகென்ன தினமும் ஏழு மணிக்கு மொட்டை மாடியில் இருந்து முறைப்பு தரிசனம் பெற்றேன். கொஞ்ச நாள் கழித்து சிறிது தைரியம் வந்த உடன் "கண்கள் இரண்டால்" ஜெய் போல மண்டையை ஆட்டிக் கொண்டே சிரித்தேன். சில நாட்கள் முறைப்பாள். சில நாட்கள் சிரிப்பாள். 

      ஒருநாள் மொட்டை மாடியில் நின்று அவளை எதிர்பார்த்து வாயில் பிரஷுடன் நின்று கொண்டிருந்தேன். அவள் வழக்கமாக வரும் நேரத்திற்கு வரவில்லை. நான் சாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன். சிறிது நேரம் கழித்து வந்தாள். ஆச்சர்யம். ஒரு ஜடை போட்டு அழகாக ரோஜாப்பூ வைத்திருந்தாள். மாடியைப் பார்த்துக் கொண்டே வந்தாள். எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. சைகையாலே சூப்பர் என்று சொன்னேன். சிரித்துக் கொண்டே ஓடிவிட்டாள். அன்று முழுவதும் மந்திரித்து விட்ட கோழி போலவே சுற்றினேன். அதன்பிறகு அவள் வேற வேற ஹேர் ஸ்டெயிலில் வருவதும் நான் மாடியில் இருந்து கமென்ட் தருவதும் தொடர்ந்தது.

  ஒரு திங்கள் கிழமை. அவளுடன் அவள் வகுப்பிலேயே படிக்கும் மாணவன் ஒருவன் அவன் அம்மாவுடன் அன்று கல்லூரி வாசலில் நின்று கொண்டிருந்தான். நாங்கள் என்ன விஷயமாக இருக்குமென்று யோசித்துக் கொண்டே உள்ளே வந்து உட்கார்ந்து விட்டோம். சிறிது நேரத்தில் இவள் பயங்கர கோவமாக வந்தாள். அதற்குள் விஷயம் வகுப்பிற்குள் பரவி விட்டது. அதாவது அவனுக்கு இவளை பிடித்து விட்டதாம், அவன் அம்மாவை வைத்து இவளிடம் பெண் கேட்டிருக்கிறான். நான் வேகமாக அவளிடம் சென்றேன்.
  "அவன் என்ன சொன்னான்?"
   "நீ ஏன் கேக்குற?"
  "எனக்கு தான் கேக்க உரிமை இருக்கு" அந்த கோபத்திலும் அவள் முகத்தில் சிரிப்பு.
  "என்ன கல்யாணம் பண்ணணுமாம்"
  "நீ என்ன சொன்ன?"
  "திட்டி விட்டுட்டேன்"
   எனது முகத்தில் கோபம் குறைந்ததைக் கண்டு அவளும் சிரித்தாள்.


              மீண்டும் எங்கள் மொட்டை மாடி சிரிப்பு தொடர்ந்தது. சிறிது நாட்களில்   அண்ணனின்  திருமணம் காரணமாக  ஒருவாரம் விடுமுறை எடுத்திருந்தேன். மீண்டும் வகுப்பிற்கு செல்லும் முன் பிரின்ஸ்பால் அறைக்கு சென்று இருந்தேன். உள்ளே அவள். தந்தையுடன். அழுது வீங்கிய முகம். எனக்கு ஒரே குழப்பம். நான் அவளிடம் "என்ன ஆச்சு?" என்றேன். "உனக்கு ஒன்றும் தெரியாதா?  பேசாம போ" என்றாள். மிகுந்த கவலையுடன் வகுப்பிற்கு வந்தேன். பிறகு தான் தெரிந்தது அந்த பையன் அவனது அம்மாவுடன் இவள் வீட்டுக்கே சென்று விட்டான் என்று. அடுத்த இரண்டு மூன்று தினங்கள் அவள் கல்லூரிக்கு வரவில்லை.

  மூன்று தினங்கள் கழித்து ஒரு மாலை நேரம். வீட்டின் வாசலில் கதையடித்துக் கொண்டு இருந்தோம். அவளது தந்தையுடன் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு அவள் வந்தாள். எங்கள் வீட்டின் அருகில் வந்ததும் என்னைப் பார்த்து நின்றாள். நானும் அருகில் சென்றேன். "நான் ஹைதராபாத் போறேன். அங்க ஒரு இன்டர்மீடியேட் காலேஜ்ல ஜாயின் பண்ணிட்டேன்" என்றாள். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. "ஓ.கே. ஆல் தி பெஸ்ட். நல்லா படி" என்றேன். அவள் தந்தையும் வரேன் தம்பி என்று விடை பெற்று கிளம்பினார். சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தாள், கையை ஜடையில் வைத்துக் கொண்டே. அன்றும் இரட்டை ஜடை. எனக்கு பொல பொல வென கண்களில் நீர் வழிந்தது. 



.

12 comments:

கருடன் said...

நல்லா இருக்கு பிரதர்...

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல கதை.இதை வாரமலர் இதழுக்கு அனுப்பலாமே.

ஒரே ஒரு பிழையை மட்டும் சரி செய்யவும்.

பல் விலக்கிக் கொண்டு இருந்தேன் ...

துலக்கி

அலைகள் பாலா said...

//நல்லா இருக்கு பிரதர்...///

நன்றி டெரர்....

அலைகள் பாலா said...

@சி.பி.செ
பேச்சு வழக்குல வரட்டும் என்று அப்படி எழுதினேன் சார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!

சிவராம்குமார் said...

நல்லா இருக்கு பாலா!

Chitra said...

மென்மையான உணர்வுகளை அழகுற வெளிப்படுத்தி இருக்கும் சம்பவம்.

அலைகள் பாலா said...

@ //சிவராம்குமார் said...//

நன்றி சார்.

அலைகள் பாலா said...

//மென்மையான உணர்வுகளை அழகுற வெளிப்படுத்தி இருக்கும் சம்பவம்.//
இவனுக்குள்ளயும் ஏதோ ஒன்னு ஒளிஞ்சு இருக்கு பாரேன்.

ஹா ஹா ஹா. சும்மா ஜோக்.

நன்றி அக்கா.

எம் அப்துல் காதர் said...

அருமையா எழுதி இருக்கீங்க பாஸ்! வாழ்த்துகள்!!

அலைகள் பாலா said...

நன்றி பாஸ்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் ஸ்டோரி... (ஸ்டோரி தானே... ஜஸ்ட் கிட்டிங்...)

Honestly, nice write up

Unknown said...

எப்படியோ ஒரு பெண்ணை தொரத்தி விட்டுடீங்க..