வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Sunday, August 29, 2010

தாயே! உன்னைத் தலை வணங்குகிறேன்

  இப்போது ஒரு புது டிரண்ட் உருவாகியுள்ளது. ஆங்கில மருத்துவத்தை குறைகூறி மாற்று மருத்துவத்தை புகழ்ந்தால் முற்போக்காளர், சிந்தனைவாதி, தமிழ்ப்பற்று உடையவர், அறிவாளி, இன்னும் பல.....
இது நிச்சயமாக அவர்களுக்கான பதிவு அல்ல. மிச்சம் இருக்கும் சிந்திக்க தெரியாதவர்களுக்கு... (சிந்தனையாளர்கள் மன்னிக்கவும், அவர்கள் இத்துடன் கழண்டு கொண்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.)
ஆங்கில மருத்துவத்தின் நன்மைகள் மறைக்கப்பட்டு ஒரு சார்புள்ள கருத்துகள் அதிகம் வெளிவரும் நேரத்தில், மற்றவற்றின் முகத்திரையை கோபத்துடன் கிழிக்கும் பதிவு.  இனி கோபத்தின் வெளிப்பாடு.....

     மாற்றுமருத்துவ  வக்கீல்களால் அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் வார்த்தை "ஆங்கில மருத்துவம் கெமிக்கல்ஸ்". தெரியாம தான் கேக்குறேன், லைசின் கார்போஹைட்ரேட்னு கெமிக்கல் உள்ள அரிசிய H2O கெமிக்கல்ல போட்டு 100C ல கொதிக்கவச்சு சோறு சாப்பிடுறீங்களே அது கெமிக்கல் இல்லையா?   சிட்ரிக் ஆசிட் ல சோடியம் குளோரைட சேத்து ஊறுகாய் போட்டா கெமிக்கல் இல்ல. ஆங்கில மருந்துகள் செவ்வாய் கிரகத்திலா செய்யப்படுகிறது? இங்கு உள்ள மூலப் பொருட்கள் வைத்து தானே. பனை மரத்தில் இருந்து காய்ச்சி வடிக்கும் பனை வெல்லம் இயற்கை. டிஜிடாலிஸ் இலைகளில் எடுக்கப்படும் டிகாக்சின் கெமிக்கல். உங்களுக்கு புரியாத பேர்ல இருந்தா அது கெமிக்கலா? சாணிகுள்ள கிழங்க வச்சு சுட்டு எடுக்குற மஞ்சள் இயற்கை. ஆனா லேப்ல சுத்தமா தயாரிச்சா கெமிக்கல். பாராசிட்டமால் கெமிக்கல்னா பனை வெல்லமும் கெமிக்கல் தான், திங்குற சோறு கூட கெமிக்கல் தான். அப்ப நீங்க சொல்ற, சாணிகுள்ள சுட்டு, நெருப்புல உருக்குற மாற்று மருந்துகள் எல்லாமே இதைவிட மோசமான கெமிக்கல் தான்.
            காலராவிற்கு கொய்னா இலையில் மருந்து உண்டு. ஓவ்வொரு இலையிலும் சிறிது அளவு இருக்கும் மருந்துப் பொருளை பெற கொய்னா இலைகளை அதிக அளவில் தின்று, அந்த இலையில் உள்ள மற்ற பொருட்களால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளைப் பொறுத்துக் கொள்வோம். ஆனால், காலராவிற்கான மருந்தை மட்டும் அந்த இலையில் இருந்து தனியே பிரித்து எடுத்து தந்தால் உண்ண மாட்டோம். ஏனென்றால் அது கெமிக்கல்.
      அடுத்து பக்கவிளைவு. ஆங்கில மருந்துகள் பக்கவிளைவு இருப்பவையாம். மற்ற மருந்துகள் பக்கவிளைவு இல்லாதவையாம்.  சூரணம், கசாயம், லேகியம், பொடி, உருண்டைன்னு 1008 ஐட்டம் இருக்கு. சந்தோசம். ஆனா அதுல எதாவது ஒன்னே ஒன்னுக்கு பக்கவிளைவுகள் வரலன்னு நிரூபிச்ச ஆதாரம் இருக்கா? இல்ல இது தான் பக்க விளைவுன்னு சொல்ல ஆய்வுகள் இருக்கா? கேட்டா, கடவுள் கொடுத்த வைத்திய முறையாம். சந்தேகப்பட கூடாதாம். காமெடியா இல்லை? இது வர என்ன பக்க விளைவுனு ஆய்வு செஞ்சது இல்ல. அத கண்டுபிடிக்க முயற்சி பண்ணுனது கூட இல்ல.  பக்க விளைவுகள் என்ன என்று தெரியாத மருந்துகளை, பக்க விளைவு இல்லாத மருந்து என்று சொல்வது, பித்தல்லாட்டதின் உச்சம். தண்ணீரை அதிகமாக குடித்தாலே பக்கவிளைவு வரும். இவங்க தாத்தா இவருக்கு காதுக்குள்ள சொன்ன மருந்துல என்ன என்ன இருக்கபோதோ? (பெயருக்கு ரெண்டு பேருக்கு மருந்த குடுத்து, ஆய்வு செஞ்சு  நானும் மருந்து நானும் மருந்துன்னு வான்ட்டடா வார மருந்துகளும் அதிகமா இருக்கு)
    ஆனா முறையா ஆய்வு நடத்தி இது தான் விளைவு, இந்த டோஸ்க்கு மேல சாப்பிட்டா இந்த பக்க விளைவுன்னு சொல்ற ஆங்கில மருத்துவத்தில் "பக்க விளைவு பக்க விளைவு". நல்லா இருக்கு நியாயம். ஒரு குப்பை லாரி வீட்டுக்குள்ள இருக்க குப்பை கூடையை பார்த்து சிரிக்குதாம் "குப்பை, குப்பை"
        உலகத்தின் அனைத்து நோய்களையும் கண்டறிந்து, வகைப்படுத்தி, அவற்றின் "அறிகுறி, போக்கு" (symptoms & course of disease) ஆகியவற்றை ஆய்வு செய்து குணப்படுத்தும் முறைகளை உருவாக்கியது ஆங்கில மருத்துவம் தான்.
     ஆங்கில மருத்துவம் கூறும் முன் "உயர் இரத்த அழுத்தம்" என்று ஒரு வியாதி இருப்பது மற்ற மருத்துவத்திற்கு தெரியுமா? எதை வைத்து இரத்த அழுத்தத்தை அளந்தனர்? இரத்த சர்க்கரை அளவை, ஆங்கில மருத்துவம் இல்லாமல் மற்ற முறைகளில் கண்டுபிடிக்க இயலுமா? நோயை கண்டுபிடிக்க அடிப்படை கருவிகளே ஆங்கில மருத்துவம் வழங்கியது தான். பிறகு தான் நோய் யாருக்கு உள்ளது என்று பார்த்து வைத்தியம் செய்ய? நோயை கண்டுபிக்க துப்பில்லாத முறைகளா அதை குணப்படுத்த முடியும்?
    சர்க்கரை அளவு இது நார்மல், இரத்த அழுத்த அளவு இது நார்மல், இவை தான் அறிகுறி, இது தான் நோயின் போக்கு, என்று அனைத்தையும் கூறியது ஆங்கில மருத்துவம். ஆனால், சிகிச்சையை மட்டும் இவர்கள் கண்டுபிடித்து விட்டார்களாம் .  நீ அரிசி கொண்டு வா, நா உமி கொண்டு வரேன், ரெண்டு பேரும் ஊதி ஊதி ......... போ..டா......க்.............
 முதல்ல மற்ற மருத்துவ முறைல இரத்ததுல சக்கரை எவ்வளவு இருக்குன்னு கண்டுபிடிக்க கத்துக்கலாம். அப்புறம், சிகிச்சை செய்யலாம்.
          ஆங்கில மருத்துவம் ஏதோ நேற்று கண்டுபிடிக்கப் பட்டது போலவும், மற்றவை பூமி பிறந்து தொப்புள் கொடி வெட்டும் போதே இருப்பது போலவும் ஒரு பேச்சு.  பார் யுவர் ரெபரன்ஸ், ஆங்கில மருத்துவத் தந்தை ஹிப்போகிரேடஸ் பிறந்தது, கி.மு நானுறு. ஹோமியோபதி தந்தை ஹானிமன்  ஹோமியோபதி கருத்தை முன்மொழிந்தது 1796ல்.
   சாமியார் ஆவது போலவே இயற்கை வைத்தியர் ஆவது இப்போது  நல்ல பிசினஸ். ஏதவாது யுனிவர்சிட்டில ரெண்டு மாசம் படிச்சு ஒரு செர்டிபிகட் வாங்கி, அமைதிப்படை அம்மாவாசை மாதிரி எங்க தாத்தா வைத்தியர்னு சொன்னா போதும். பச்சரிசிய அரைச்சு குட்டி குட்டியா உருட்டி வச்சு பக்க விளைவு இல்லன்னு சொன்னா போதும். 
     கதவை திறந்து வைத்துவிட்டு, காற்றும் பெண்களும்  வராத நேரத்தில்,  புற்றுநோயை குணப்படுத்தி விட்டு, அந்த சாமியார் கண்ணை மூடிக்கொண்டு, "அவரைக் காயும், ஆட்டுப் புழுக்கையும் சேர்த்து அரைத்து, நாக்கு படாமல் நாலு நாள் நக்கு" என்று சொன்னது அல்ல ஆங்கில மருத்துவம்.
   நோயாளிகளுடன் இரவு பகலாக வருடக்கணக்கில் பழகி, நோயைக் கூர்ந்து கவனித்து, மைக்ராஸ்கோப் முதல் அனைத்திலும் நோயை சோதித்து, வாழ்நாள் முழுவதையும் மருத்துவத்திற்கு அர்ப்பணித்து, சில நேரங்களில் உயிரையும் இழந்து, கணக்கற்ற ஆய்வுகள் நடத்தி, கண்ணீரால் காத்த பயிரடா சர்வேசா!..... ஒரு  ஒரு சின்ன அசைவுக்கும் ஆயிரக்கணக்கில் ஆய்வு செய்யப்பட்டிருக்கும்.
  தெரியாமல் தான் கேக்குறேன். எந்த ஒரு மாற்று மருத்துவத்திலும்  "ஆஸ்த்மா, சர்க்கரை வியாதி னு ஒரு குறிப்பிட்ட லிஸ்ட்ல இருக்க வியாதிக்கே சிகிச்சை தருவாதக விளம்பரம்?
      ஏன்? ரோடுல ஆக்ஸிடன்ட்ல சிக்குனவருக்கு உடனடியா லேகியம் குடுத்து காப்பாத்தலாமே? ஹார்ட் அட்டாக் வந்தவருக்கு சூரணம் கொடுக்கலாமே.
  அதுலாம் முடியாது. அரைமணி நேரத்துல ரிசல்ட் தெரிஞ்சுரும். ஆனா ஆஸ்துமா ஆறு மாசம் சாப்பிடு. அப்படின்னு சொல்லலாம்.
    ஆங்கில மருத்துவம் வியாபாரமாகி விட்டதாம். மாற்று மருத்துவத்தை நடத்த ஹரிச்சந்திரன் வந்து கொண்டு இருக்கிறான். மற்ற மருத்துவ முறைகளில் எளிதாக ஏமாற்றலாம் என்பது தெரியாதோ?
   சிறுநீரகத்தின் உறிஞ்சும் திறனை குறைத்து சிறுநீரை அதிகமாக வெளியேற்றும் லாசிக்ஸ் என்ற மருந்தை பொடி செய்து வைத்து தேவ பொடி என ஏமாற்றி, சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளிடம் பணம் பறித்து, அவர்களின் நோயை அதிகரிக்கச் செய்த போலியை நான் அறிவேன். அவர்களும் சிறுநீர் அதிகமாக போகிறது. நோய் தீர்ந்துவிட்டது என செல்வர். இது போன்ற பித்தலாட்டம் ஆங்கில மருத்துவத்தில் உண்டா?
         ஆங்கில மருத்துவம் வெளிநாட்டில் இருந்து வந்ததாக நினைக்க வேண்டாம். இந்த உலக மக்களுக்காக உலகத்தில் தோன்றியது.  
   நம் சித்த வைத்திய முறைகளில் கண்டறிந்த பலவற்றை சுயநலத்தால் யாருக்கும் சொல்லாமல் அழித்தோம். அவற்றை எல்லாம் ஆவணப்படுத்தி இருந்தால் மருத்துவ உலகில் எங்கோ சென்றிருப்போம்.அதன் விளைவு தான் முழுமையற்ற நம்  பாரம்பரிய மருத்துவம். அவற்றை மீண்டும் மீட்டு எடுக்க வேண்டும். அனால் அது வரை........

      முடியும் என்றால் நிரூபித்துக் காட்டியும், முடியாது என்றால் ஒத்துக்கொண்டும், நிமிர்ந்த நடையுடன், லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி, கோடிக்கணக்கான உயிர்களின் வாழ்நாளை அதிகரித்த
 அல்லோபதி மருத்துவத் தாயே உன்னைத் தலை வணங்குகிறேன்.
 

Saturday, August 28, 2010

கொடூரம்

 காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து  ஆய்வாளர்களுக்கு அவசர கடிதம் வந்தது. அது தாங்கி வந்த செய்தி "நகரில் பெருகி வரும் வாகன விபத்துகளை குறைக்க  ஒரு கலந்தாலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்". அனைவரும் அது சம்பந்தமான விவரங்களை எடுத்துக் கொண்டு ஆய்வாளர் அலுவலகத்திற்கு விரைந்தனர்.
                  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை, வேறு வேறு எண்ணங்கள்.. "இது மாதிரி 1000 மீட்டிங் போட்டாச்சு. நோ யூஸ்",   "நம்ம ஏரியால தான் ஆக்ஸிடன்ட் நிறைய நடந்துருக்கு, என்ன ஆகுமோ",  "டிரங்கன் டிரைவ் பிடிக்காம விட்டோமே, அத கேட்பாரோ?"  "ஒருவேளை ஹெல்மெட் போடுறத ஸ்ட்ரிக்ட் பண்ண போறாரோ?"  "மீட்டிங் முடிஞ்ச உடனே சாப்பாடு இருக்குமா?" அந்த இடமே mind voice-ன்  இரைச்சலால் நிரம்பி நிசப்தமாய் இருந்தது.  ஆணையாளர் நுழையும் போதே அனைவரின் எண்ண ஓட்டத்தையும் ஊகித்துக் கொண்டே வந்தார்.
               " ஆக்சிடன்ட் குறைய நீங்க நினைக்குற மாதிரி ஹெல்மெட் போடுறது, டிரங்கன் டிரைவ் பிடிக்குறது, இதெல்லாம் பழசு. ஏற்கனவே ட்ரை பண்ணி பெருசா எதுவும் ரிசல்ட் இல்ல.  இப்போ புதுசா ஏதாவது செய்யணும். என்ன செய்யலாம்?" 
        ஆய்வாளர்களிடம் நீண்ட மௌனம். சிறிது தயக்கத்திற்குப் பிறகு ஒருவர் "சார், எல்லா இடத்துலயும் செக்கிங் ஸ்ட்ரிக்ட் பண்ணலாம் சார். பைன் நிறைய போடலாம்."
   ஆணையாளர் சிரித்து விட்டார். "ஹா ஹா ஹா. எங்க வர்றீங்கனு புரியுது. இது எலெக்சன் டைம். அப்படி பண்ண வேணாம்னு மேலிட உத்தரவு." அதற்கு அடுத்து யாரும் வாயை திறக்கவில்லை.
     "ஒ.கே. நானே ஒரு ஐடியா சொல்றேன்." ஆணையாளர் தொடர்ந்தார். "ஒரு விபத்த பாத்த கொஞ்ச நேரத்துக்கு கவனமா ஓட்டுறது மனித இயல்பு. அதுனால சிட்டில முக்கியமான இடங்கள்ல எல்லார் கண்ணுலயும் படுற மாதிரி ஏற்கனவே நடந்த விபத்துகளோட போட்டோஸ் பெருசா வைப்போம். இது மக்களுக்கும் தொந்தரவு இல்ல. ஒரு புது முயற்சியா இருக்கும்."
   "நம்ம வைக்குற போட்டோ கொடூரமா இருக்கணும். அத பாத்துட்டு யாரும் வேகமா போகவே கூடாது. இங்க இருக்குற போட்டோஸ்ல ஒன்ன செலக்ட் பண்ணுங்க. இதெல்லாம் சிட்டில போன வருஷம் நடந்த விபத்துகளில் எடுக்கப்பட்ட்டது ." 
   அனைவரும் ஒருமனதாக ஒரு போட்டோவை தேர்ந்தெடுத்தனர். லாரி சக்கரத்தின் கீழ் தலை நசுங்கி இறந்த ஒருவனுடைய போட்டோ. அவன் வந்த பைக்  உருக்குலைந்து அருகில் கிடந்தது. பார்க்கவே கொடூரமாக இருந்தது.
  "இந்த போட்டோ எல்லாருக்கும் ஒ.கே தான? சிட்டிக்கு உள்ள டிரைவ் பண்ற யாரும் இந்த போட்டோவ பாக்காம போக கூடாது. பாக்குற யாரும் டிரைவ் பண்ண பயப்படனும். அப்படி எல்லா இடத்துலயும் இத பெருசா வைங்க" ஆணையாளர் அவருக்கே உரிய கட்டை குரலில் கூறினார்.
  இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மட்டும் மெதுவாக எழுந்து, "இந்த போட்டோ வேணாம் சார்"  என்றார்.
 "ஏன்யா வேணாம்?"
"ப்ளீஸ் சார் வேணாம்." அழுதே விட்டார்.
"அதான் ஏன் வேணாம்னு கேக்குறேன்? ரொம்ப கொடுரமா இருக்கா?"
"இல்ல சார். அது என் பையன் சார்...... " 
   

Wednesday, August 18, 2010

சுகரும் ஃபிகரும் பாகம் - 2


 
                                       கையில் கொஞ்சம் காசு சேர்ந்தாலே மனித மூளையை நாய் நக்கிவிடும் போல.(காசு இல்லனா மனுசனே நாய் மாதிரி தான் அது வேறுவிஷயம்). நாலு நோட்ட ஒன்னாப் பாத்த உடனே, "பாருக்கு போலாமா, பப் க்கு போலாமா, இல்ல வேற எங்கயும் போலாமா, இதப் பண்ணலாமா, அதப் பண்ணலாமா" என்று  தோன்றும்.  இந்த மாதிரி பசங்க கெட்டு போகக் கூடாது அப்படிங்கிற நல்ல எண்ணத்தில்  பரிமாண வளர்ச்சியில் உருவானவங்க தான் "ஃபிகரு" (வால்பையன் சார் அப்படியா?) எவ்வளவு சம்பாரிச்சாலும் அவங்களுக்கு செலவு பண்ணவே பத்தாது.இதுல எங்க பாருக்கு போக? கல்யாணம் ஆனவங்க நிலைமை இன்னும் மோசம். காலையில்  பெட்ரோல் காசுக்கு அம்மணிட்ட தான் நிற்க வேண்டும். 
                                         வாழ்க்கைக்குப் பணம் எப்படியோ அப்படித்தான் உடலுக்கு குளுக்கோஸ். வாழ்க்கையை உடலாகவும், பணத்தை குளுக்கோஸாகவும் உருவகப்படுத்திப் புரிந்து கொண்டால், "டயாபடீஸ் பில்டிங்கின் பேஸ்மட்டத்தில் முதல் பில்லரை ஸ்ட்ராங்காக" ஊன்றிவிடலாம்.
        அப்ப ஃபிகரு  இன்சுலினா?
                   - ஆமா. கரெக்ட். அவங்க தான் இன்சுலின்.(இங்க பார்டா. அதுக்குள்ள ரெண்டாவது பில்லர்)
                            ஆதி காலத்தில், மனிதன் வேட்டையாடித் திரிந்த போது அடுத்த வேலை உணவிற்கு நிச்சயமில்லாத நிலை. (அப்ப ரெண்டு ருவா அரிசிலாம் இல்லயா?) எப்பவாவது கிடைக்கும் உணவை வைத்து பொழுதை ஓட்ட வேண்டிய கட்டாயம். அதற்கு நம் கதையில் வருவது போல, மாரிக்கண்ணுக்கு பணத்தை அவனது மனைவி  நிர்வகிப்பது போல, கிடைக்கும் குளுக்கோஸை ஒழுங்காக சேமித்து தேவைப்படும் போது பயன்படுத்த ஒர் அமைப்பு தேவைப்பட்டது., குளுக்கோஸை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட அந்த அமைப்பில் பல ஹார்மோன்கள் இருந்தன. அவற்றுள், தேவைக்கு அதிகமான குளுக்கோஸை சேமிக்கும் பொறுப்பு இன்சுலினிடம் கொடுக்கப்பட்டது. (குளுக்கோஸை மீட்டு, எடுத்துக் கொடுக்கும் பொறுப்புக்கு வேறு ஹார்மோன்கள்)  சனிக்கிழமை வாங்கும் சம்பளத்தை வைத்து, அடுத்த வாரம் வரை குடும்பம் நடத்துவதைப் போல, ஒருமுறை உணவு உண்ட பின் கிடைக்கும் குளுக்கோஸை வைத்து அடுத்து உணவு கிடைக்கும் வரை உடலை இயக்க இவை கற்றுக்கொண்டன.
                    இதில் ஒரு கொடுமை என்னனா, சாப்பிட்ட உடனே இரத்ததில் ஏறுகிற  குளுக்கோஸ், பாருக்கு போறப்ப மாரிக்கண்ணு கைல இருக்க பணம் மாதிரி. உடனே செலவும் ஆயிடும், உடம்புக்கும் கெடுதி. எல்லா பணமும் (குளுக்கோஸ்) செலவாயிட்டா, அப்ப அடுத்த வாரம் வரை குடும்பம் நடத்த......? சுருக்கமா சொன்னா, இரத்ததில் உள்ள குளுக்கோஸ் குடிகாரன் கையில் உள்ள பணம் மாதிரி. உடனே பத்திரப்படுத்தணும். இல்லனா ஆப்பு தான்
குளுக்கோஸ் - பணம்
இரத்தத்தில் குளுக்கோஸ்- குடிகாரன் கையில் பணம்.
                    
                               அப்புறம் எதுக்கு குடிகாரன் கையில பணம் அத புடுங்கிருங்க பா. புடுங்கிடலாமா??
                               அடுத்த பாகத்தில்.... .

டிஸ்கி: சந்தேகங்களையும், கருத்துகளையும் பின்னூட்டத்தில் சொல்லுங்க நட்புகளே..  மறக்காம ஓட்டையும் போட்டுருங்க.

Tuesday, August 17, 2010

சுகரும் ஃபிகரும் பாகம் - 1


        படிச்சவங்களுக்கு சுகர், பாட்டிகளுக்கு சக்கர வியாதி, பீட்ட்ரு விட நெனச்சா டயாபடீஸ், இப்படி நிறைய பெயர்களில் நம் வாழ்க்கையில் ஒன்றிவிட்ட வியாதி சுகர் என்ற டயாபடீஸ் என்ற சர்க்கரை வியாதி. இப்போதெல்லாம் இது அந்தஸ்தின் அடையாளம். பொது இடங்களில் "சுகர் கம்மியா போடுங்க, எனக்கு டயாபடீஸ்" என்று சொல்வதை பெருமையாகவே நினைக்கிறார்கள்.
  அது சரிப்பா, சுகருக்கும் ஃபிகருக்கும் என்ன சம்பந்தம்? இருக்கே... சம்பந்தம் இருக்கே..
      ரெண்டுமே பெரிய தொல்லை. ஆனா கூட இருந்தா ஒரு வெட்டி பெருமை.
      சுகரும் சரி ஃபிகரும் சரி பர்ஸ்க்கு பாம் வைக்குறதுல கில்லாடிங்க.
  ரெண்டுமே வாய் கொழுப்புல நமக்கு நாமே வச்சுகிற சூன்யம். (இங்க பார்டா சிலேடைய)
               சுகரு வந்தா மெடிக்கல் ஷாப்
               ஃபிகரு போனா ஒயின்ஷாப்.
         ஆனா ஒரு விசயத்துல சுகர நம்பலாம்.  நம்மவிட்டு ஃபிகர் போனாலும் சுகர் போகாது.
       சுகர் பத்தி சப்ஜெக்ட்க்கே வராம 20 பக்கம் பேசலாம். ஆனா சுகர்னா என்ன?  சுகர் வந்தா கட்டாயம் மாத்திரை சாப்பிடணுமா? இட்லி சாப்பிட்டா நல்லதா? சப்பாத்தி சாப்பிட்டா நல்லதா? எத்தனை சாப்பிடலாம்? இன்சுலின் எப்பப் போடணும்? ... இந்த மாதிரி எக்கச்சக்க கேள்விகள் நம்ம கிட்ட இருக்கு. ஃபிகர பத்தி தெரிந்த அளவுக்கு சுகர பத்தி தெரியல. நம்மில் நிறைய பேருக்கு மருத்துவ அறிவில்   "'பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ்மட்டம் வீக்கு."
         பேஸ்மட்டத்தில் இருந்து டயாபடீஸ் பத்தி முழுமையாக விளக்குகிற தொடராக இதை ஆரம்பித்துள்ளேன். பொறுமையாக படித்தால் நிச்சயம் டயாபடீஸ் பற்றிய புரிதல் அதிகமாகும்.
         சர்க்கரை வியாதி என்பது நம் உடலில் உணவு சேமிப்பதில் உள்ள குறைபாடு (storage disorder) - இப்படிலாம் சொன்னா ஏதோ 12வது பயாலஜி புக் வாசிக்கிற ஃபீலிங் வந்துரும். ஸ்டோரேஜ் டிஸார்டர்க்குள் போகும் முன் ஒரு சிறிய கதை, புரிதலுக்காக.
    மாரிக்கண்ணுக்குக்  கொத்தனார் வேலை. வாரச் சம்பளம். அவனோட காண்ட்ராக்டர் ரொம்ப நல்லவர். சனிக்கிழமை கரெக்ட்டா சம்பளம் தந்துருவார். மாரிக்கண்ணுக்கு ஒரு கெட்ட பழக்கம். கைல 180 ருவாய்க்கு மேல இருந்தா, எவ்வளோ காசு இருந்தாலும் டாஸ்மாக் பார்க்கு போயி காலியாக்கி விடுவான். கொஞ்ச நேரத்தில பாத்ரூம் போனா எல்லா காசும் தண்ணியா போய்டும்.   ஆனா ஒரு நல்ல பழக்கம் 180க்கு ஒரு பைசா குறைஞ்சாலும் அந்த பக்கம் போக மாட்டான்.(அதென்ன ஒரு கணக்கு 180? பிறகு சொல்றேன்). அதனால சம்பளம் வந்த உடனே எல்லா பணத்தயும் வீட்டுக்காரம்மாட்ட(ஹவுஸ் ஒனர் இல்லிங்க) கொடுத்துடுவான். அவங்க கொஞ்சம் பொறுப்பான குடும்ப தலைவி. அஞ்சறை பெட்டில கொஞ்சம், அலமாரில கொஞ்சம்னு எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி வைப்பாங்க.அப்பப்ப செலவுக்கு எடுத்துகுவாங்க. வாரத்தில ஒருநாள் மட்டும் சம்பளம் வந்தாலும் அத வச்சு முழுவாரத்தையும் பிரச்சனையில்லாம சமாளிச்சாங்க. .
                             என்னமோ சொல்ல வர்ற மாதிரி இருக்கு? அதுசரி இந்த கதைக்கும் டயாபடீஸ்க்கும் என்ன தொடர்பு? அடுத்த பாகம்.....

Sunday, August 15, 2010

உரிமைக்குப் போராடிய கருப்பையா


  பயிற்சி மருத்துவராக  சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த போது நடந்த நிகழ்ச்சி.  காலை எட்டு  மணி  இருக்கும். அமைதியாக வரிசையில் வந்தார் அந்த நபர். மேஜையைச் சுற்றி நான்கு பேர் அமர்ந்திருந்த எங்கள் மருத்துவக் குழுவில் மற்ற மருத்துவர்களிடம் நோயாளிகள் இருந்ததால் என்னிடம் வர வேண்டிய நிலை அவருக்கு. அந்த PHC யிலேயே பணிபுரியும் மருத்துவ அலுவலரை பார்த்த படியே என்னிடம் வந்தார்.  அவரது பார்வையிலேயே என் மீது அவருக்கு இருந்த (அவ)நம்பிக்கை! புரிந்துவிட்டது.
                                     நமக்கு தான் ஆர்வக் கோளாறு அதிகமாச்சே. "இவர் திரும்ப இந்த PHCக்கு வந்தா நம்ம கிட்ட தான் வரணும். அந்த அளவு இவர சூப்பரா ட்ரீட் பண்ணனும்"னு முடிவு பண்ணிட்டேன். அவர்  கையில இருந்த சீட்டை வாங்கினேன்.   கருப்பையா, வயது 40 என்று எழுதி இருந்தது. ஆனால் ஆளைப் பார்த்தால் 60 க்கும் அதிகமாகவே சொல்லலாம். பொதுவாக கிராமத்து ஆட்கள் சொல்லும் வயதிற்கும் அவர்களைப்  பார்த்தால் நாம் நினைக்கும் வயதிற்கும் வித்தியாசம் அதிகம் இருக்கும். அதற்கு நிறைய காரணங்கள் சொல்லல்லாம். வெயிலில் அலைந்து திரியும் வேலை, சரியான பராமரிப்பு இன்மை....   நிறைய பேருக்கு பிறந்த வருடமே தெரியாது. குத்து மதிப்பாக ஒரு வருடம் வைத்து வயதைச் சொல்வார்கள். ஒரு ஆவரேஜா இவருக்கு 50 வச்சுக்கலாம். 
           " அய்யா உங்களுக்கு என்ன தொந்தரவு?"
            " கொஞ்ச நாளாவே உடம்பு சரி இல்ல சார்" 
                                  - இந்த மாதிரி Non specific complaints நிறைய பார்த்திருப்பதால் கேள்விய கொஞ்சம் திருப்பி போட்டேன்.
            "சரிங்க அய்யா, என்ன பண்ணுது?"
            "ரொம்ப தளர்ச்சியா இருக்கு சார். திடீர் திடீர்னு கால் வீங்குது. வேலையே பாக்க முடியல. எப்ப பாத்தாலும் படுக்கணும் போலவே இருக்கு சார்"
                                   வழக்கமான பரிசோதனை செய்ததில் அவருக்கு இரத்த அழுத்தம் சற்று அதிகமாக இருந்தது. இந்த "Undiagnosed hypertension" எந்த எந்த உறுப்புகளை பாதித்து உள்ளது என்பதை கண்டறிய வேண்டும்.
                "அய்யா உங்களுக்கு பிரஷர் இருக்க மாதிரி இருக்கு. இந்த இரத்த டெஸ்ட் பண்ணுனிங்கனா முழுக்க தெரிஞ்சுரும்" 
                        இரத்த அழுத்தத்தின் கூடா நட்பு டயாபட்டிஸ் கண்டுபிடிக்க இரத்த சர்க்கரை அளவு, சிறுநீரக செயல்பாட்டைக் கண்டறிய இரத்த யுரியா, கிரியாடினின் அளவுகளுக்கு குறித்து அவரிடம் அந்த சீட்டை தந்து,
               "அய்யா, இப்படியே நேர போயி இடது பக்கம் வளைஞ்சா Lab வரும். அங்க இந்த டெஸ்ட் பண்ணிட்டு வரிங்களா?"
                          அவருக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை போல. இதெல்லாம் கட்டாயம் பண்ணனுமா என்பது போல பார்த்தார்.
                  "எல்லாமே free தாங்க. காசுலாம் இல்ல. சும்மா பண்ணிட்டு வாங்க." 
                          வேண்டா வெறுப்பாக சென்றார். அருகில் இருந்த மருத்துவர்கள் எல்லாம் "ஒரே patient-a  வச்சு டைம் ஓட்டுறான்டா இவன்"  என்று முறைத்தனர். அதை கண்டுக்காதது போல அடுத்த நபரைப் பார்க்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரம் கழித்து கருப்பையா வந்தார். கையில் டெஸ்ட் ரிசல்ட். நேர மற்றொரு மருத்துவரிடம் சென்றார். அவர் என்னிடம் போகும்படி கைகாட்ட வேறு வழியின்றி என்னிடம் வந்தார்.
                     நல்லவேளை இரத்த சர்க்கரை அளவு நார்மல். கிரியாடினின் மட்டும் சராசரியை விட அதிகமாக இருந்தது. ஆனாலும் கவலை இல்லை. இரத்த அழுத்ததை கட்டுக்குள் வைத்தால் போதும். சிறுநீரகத்தை பாதிப்பு இன்றி காப்பாற்றிவிடலாம்.
                      "அய்யா, உங்களுக்கு பிரசர் அதிகமா இருக்கு. அதன் தளர்ச்சி வருது. பிரசர் மாத்திரை சாப்பிடிங்கனா குறைஞ்சுரும். ஒன்னும் பிரச்சனை இல்ல. மாத்திரையை மட்டும் விடாம சாப்புடுங்க. திங்கள் கிழமை வாராவாரம் வந்து வாங்கிகோங்க"   
                                       உயர் இரத்த அழுத்த மாத்திரைகளை குறித்து கொடுத்தேன். ஒரு திருப்தி எனக்கு. Non specific complaints உள்ள ஒருவரை சோதித்து, காரணத்தைக் கண்டறிந்து அதையும் investigate பண்ணி  சரியான சிகிச்சை அளித்ததால் ஏற்பட்ட சந்தோசம்.
           கருப்பையா எதோ கேட்க நினைப்பது போல் நின்று கொண்டு இருந்தார். அப்போது தான் எனக்கு உணவு முறைகளை விளக்காமல் விட்டது ஞாபகம் வந்தது.
                "உப்பு மட்டும் குறைச்சுடுங்க. அரை உப்பு, கால் உப்பு போதும். கறி, மீனு, கோழிலாம் எப்பவாது சாப்டுக்கலாம். ஊறுகாய், அப்பளம் வேணாம். எண்ணெய், கொழுப்பு, மசாலா அயிட்டம் வேணாம். "
       கருப்பையாக்கு இன்னும் திருப்தி வரவில்லை.
              "ஊசி இல்லையா சார்?" 
      எனக்கு தெரிந்து உயர் இரத்த அழுத்ததிற்கு மாத்திரை தான். அவசர சிகிச்சையின் போது உடனடியாக குறைக்க வேண்டிய இடங்களில் மட்டும் தான் ஊசி மருந்து பயன்படும். இவருக்கு அது தேவை இல்லையே.
        "ஊசிலாம் வேணாம் அய்யா. இந்த மாத்திரை சாப்பிட்டாலே போதும்"
        "பரவாயில்லை சார். சும்மா ஒரு ஊசி போட்டுக்கிறேன். அப்ப தான் சரி ஆகும்."
       "அய்யா உங்களுக்கு இருக்குறது பிரசர். ஒரு ஊசி போட்டா சரி ஆயிடாது. டெய்லி மாத்திரை சாப்பிடனும்."
           "இல்ல சார் ஒரே ஒரு ஊசியாவது போடுங்க"
                அருகில் இருக்கும் மருத்துவர்கள் முறைக்க ஆரம்பித்தனர். வெளியில் 300 பேருக்கு மேல நோயாளிகள் நிற்கின்றனர். காலை 11 மணிக்கு முன்பு அனைவரயும் பார்க்க வேண்டும். நான் பார்க்கும் வேகத்தில் பார்த்தால் ராத்திரி 11 மணிக்கு கூட பார்த்து முடிக்க முடியாது. மருத்துவ அலுவலர் "கொஞ்சம் வேகமா பாருங்க டாக்டர்" என்றார்.
   வேற வழி இல்லை. மருத்துவ அலுவலரிடமே கேட்டேன். "Sir one hypertensive patient, wants injection.  what to do sir?" (உயர் இரத்த அழுத்த நோயாளி ஊசி கேட்கிறார். என்ன செய்ய சார்?)
அனுபவம்னா சும்மாவா? உடனே அவர் "prescribe inj.vitB12 doctor" (B12 வைட்டமின் ஊசியை எழுதுங்க டாக்டர்) . ஆஹா இந்த ஐடியா நம்ம கிட்ட இல்லையே. உடனே கருப்பையாக்கு inj.vitB12 குறித்து கொடுத்தேன்.
      "அய்யா, இந்த ஊசிய போட்டுகோங்க. அப்புறம் இந்த மாத்திரைய மறக்காம சாப்டுங்க."
           கருப்பையா முகத்தில் இப்போது தான் சந்தோசம்.
   'சரிங்க சார்" ஒருவழியாக கிளம்பி விட்டார். அப்பாடா!!!.
         கருப்பையாவுடன் மல்லுக்கட்டி பொழுதை ஓட்டியதால் எனக்கு தர வேண்டிய தேநீரை தரவில்லை நம்ம நண்பர்கள்.கேட்டால் கெட்ட வார்த்தையில் திட்டுவார்களோ என்று பயம் வேற. தண்ணீராவது குடிக்கலாம் என்று ரெஸ்ட் ரூம்க்கு கிளம்பினேன். வழியில் ஊசி போடும் அறையில் கருப்பையாவின் குரல் சத்தமாக கேட்டுக்கொண்டு இருந்தது.
                        "கொஞ்சம் ஏமாந்து இருந்தாலும் ஊசி போடாம அனுப்பிருப்பாரு அந்த சின்ன டாக்டர். நம்ம பெரிய டாக்டர் தான் ஊசி எழுதி தர சொன்னார். கவருமண்டு ஊசி குடுத்தா இவங்க கை காச குடுக்குற மாதிரி ரொம்பப் பண்றாங்க. மாத்திரை யாருக்கு வேணும்?  இந்த மாத்திரைய எப்பவாது காய்ச்சல், தலைவலி வரும் போது போட்டுக்கலாம் கைல இருக்கட்டும். இப்ப ஊசி போடுங்கனா கேக்க மாட்றாங்க."
        எனக்கு பகீரென்றது. அடப்பாவி hypertension tableta காய்ச்சல் தலைவலிக்கு போடப் போறிங்களா? நீங்க போட்டாலும் பரவாயில்ல மத்தவங்களுக்கும் கொடுப்பிங்களே! (கவர்மென்ட் ஆஸ்பத்திரில வாங்குன இலவச மாத்திரையை கொடுத்து தான் நிறைய பேர் தங்கள் வள்ளல் தன்மையை வெளிப்படுத்துவர்.)   காலைல இருந்து கஷ்டப்பட்டு diagnose பண்ணுனா ஒரு விட்டமின் ஊசி போதும்னு சொல்றாரே.
                                                      மருத்துவ அலுவலரிடம் சொன்னேன். அவரோ ரொம்ப கூலா "உனக்கு இது புதுசு. மெயின் ரோடுக்கு போற வழில ரயில்வே டிராக் தாண்டி பாரு. நம்ம குடுத்த மாத்திரைலாம் கிடக்கும். போற வழில தூக்கி போட்ருவாங்க. அவங்களுக்கு தேவை ஊசி தான். மாத்திரைய வேற வழி இல்லாம வாங்குறாங்க. ஊசி அவங்க உரிமை. அதுவும் சிபாரிசோட வந்தா ரெண்டு ஊசி போட்டா தான் போவாங்க," என்று சிரித்தார். அதன்பிறகு கருப்பையாவைத் தனியே அழைத்து மண்டகப்படி நடத்தியது தனி கதை.
                      என்ன இருந்தாலும் நம் மக்களின் அறியாமையை நினைக்கும் போது பாவமாக தான் இருக்கிறது.