வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Monday, September 13, 2010

போதும் பொண்ணு - போதும்டா கொடுமை சாமி!!!



போன வருடம் அக்டோபர் மாதம் என்று நினைக்கிறேன். மதுரை இராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் நல வார்டில் பணி. அன்று ஞாயிற்றுக் கிழமை. மதியம் இரண்டு மணி இருக்கும். அவசர சிகிச்சை பிரிவிற்கு வேகமாக ஒரு ஆட்டோ வந்தது. ஒரு பாட்டி போர்வையால் மூடப்பட்ட ஒரு பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்தார். வழக்கம் போல ஏதாவது சளி காய்ச்சலாக இருக்கும் என்று நான் அந்த பாட்டி வருவதை பார்த்துக் கொண்டே இருந்தேன். குழந்தையை கட்டிலில் கிடத்தி விட்டு, அந்தப் பாட்டியிடம்,
  "பாப்பாவிற்கு என்ன பண்ணுது பாட்டி?"
   "பாம்பு கடிச்குருச்சு. ஒரு கால் வீங்கிடுச்சு சாமி"
     போர்வையை விலக்கிப் பார்த்தேன். வலது முழங்காலுக்கு கீழே முழுவதும் வீங்கி கறுத்து, நீர் வழிந்து கொண்டு இருந்தது. எனக்கு பேரதிர்ச்சி. கோபத்தில் அந்த பாட்டியை திட்ட ஆரம்பித்தேன்.
   "கொஞ்சமாவது அறிவு இருக்கா? கால் அழுகி போற மாதிரி இருக்கு. இவ்ளோ நாள் வீட்ல வச்சு என்ன பண்ணிக்கிட்டு இருந்திங்க?"
  "இன்னைக்கு காலைல தான் கடிச்சுது சார். உடனே தூக்கிட்டு வர்றேன்." பாட்டி அழுக ஆரம்பித்தது.
   நிச்சயமாக தெரியும் இது நடந்து மூன்று நான்கு நாட்கள் ஆகிருக்கும். இனிமேல் இந்த பாட்டியிடம் உண்மை வராது. பேசி நேரத்தை வீணடிக்காமல் சிகிச்சையை ஆரம்பிக்கலாம் என்று நினைத்து அந்தப் பாட்டியிடம், "பாப்பா இங்க இருக்கட்டும், முன்னாடி போய் பாப்பா பேரு சொல்லி சீட்டு பதிஞ்சிட்டு வாங்க" என்று அனுப்பினேன்.
      அந்த குழந்தையிடம்,
         "வலிக்குதா பாப்பா?"
         "லேசா வலிக்குது சார்"
        "உன் பேரு என்னடா?"
        "போதும் பொண்ணு"
      மதுரை பக்கம் இந்த பெயரை அடிக்கடி கேட்கலாம். வரிசையாக பெண் குழந்தை பிறந்து கொண்டே இருந்தால், கடைசிக் குழந்தைக்கு போதும் பொண்ணு என்று பெயர் வைத்தால் அடுத்து பையன் பிறக்கும் என்பது நம்பிக்கை.
     " என்னைக்கு பாம்பு கடிச்சுது?"
      " மூணு நாள் ஆச்சு சார்."
        "எங்க கடிச்சுது?"
      "வீட்டு பக்கத்திலேயே சார். விளையாடிகிட்டு இருக்கும் போது."
      "அப்புறம் என்ன பண்ணுனீங்க?"
 அந்த ஐந்து வயது குழந்தை என் கேள்விகளுக்கு அழகாக பதில் சொல்லிக் கொண்டே வந்தது. அது பேசுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல. வேதனையின் சாயல் முகத்தில் தெரிந்தாலும், அதை வெளிக்காட்டாமல் பொறுமையாக என்னிடம் பேசியது. அவ்வளவு அழகு. பாம்பு கடித்த உடன் அவளது பாட்டி, லோக்கல் நாட்டு வைத்தியர் கம் கோவில் பூசாரியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் கடித்த இடத்தில் கத்தியால் கீறி இரத்தத்தை வெளியேற்றிவிட்டு, விஷம் வெளியேறி விட்டது என்று வீட்டுக்கு அனுப்பி விட்டான். வீட்டிற்கு வந்த பின் கால் சிறிது சிறிதாக வீங்க ஆரம்பித்து இருக்கிறது. மீண்டும் அவனிடம் அழைத்துச் சென்ற போது மீண்டும் கீறி விட்டு, கொஞ்சம் இலைகளை மூலிகை என்று கொடுத்து அனுப்பி விட்டான். பாட்டியும் வீட்டில் தனக்கு தெரிந்த வைத்தியத்தை பார்த்திருக்கிறார். அதற்குள் மூன்று தினங்கள் ஓட, வீக்கம் அதிகமாகவே இங்கு அழைத்து வந்து இருக்கிறார்கள். இது கொடுமை என்றால் இதற்கு அடுத்து போதும் பொண்ணு சொன்னது மிகப் பெரிய கொடுமை.
  "உங்க அப்பா என்ன பண்றார்? அவராவது உன்ன முன்னாடியே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துருக்கலாம்ல?"
"எங்க அப்பாக்கு என்ன பிடிக்காது."
"ஏன் பிடிக்காது?"
"நா பையனா பிறக்கனும்னு நெனச்சாராம். ஆனா பொண்ணா பிறந்ததால பிடிக்காது. என்கிட்ட பேசவே மாட்டார்."
"அம்மா?"
"அவங்க இப்ப மாசமா இருக்காங்க. நிறை மாசம். வர முடியாதாம். கால பாத்து அழுதுகிட்டே இருந்தாங்க."

            எனக்கு வந்த கோவத்திற்கு அந்த அப்பனை வெட்டிக் கொல்லலாம் போல இருந்தது. ஆனால் கோவப் பட நேரம் இல்லை. காலில் நீர் கோர்த்து, இரத்தக் குழாயை அழுத்திக் கொண்டு இருப்பாதால் காலுக்கு இரத்தம் செல்லாமல் கால் அழுகிக் கொண்டு இருந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை நிபுணரை வரவைத்து, பேஸியாட்டமி எனும் சிறிய அறுவை சிகிச்சை செய்து அழுத்தத்தை குறைத்தோம். மீண்டும் இரத்த ஓட்டம் வந்துள்ளதா என அறிய டாப்ளர் ஸ்கேன் பண்ண வேண்டும். அன்று ஞாயிறு. விடுமுறை. அறுவைசிகிச்சை நிபுணர் அவரது நண்பரிடம் ஹேன்ட் டாப்ளர் மிசின் வாங்கி வந்து பார்த்தார். இரத்த ஓட்டம் வர வில்லை. இரத்தநாள அடைப்பை நீக்கும் மருந்துகள் செலுத்தப்பட்டன. செல்லுலைடிஸ்-க்கு ஆண்டிபையாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டன. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர் வாஸ்குலார் சர்ஜனை (இரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர்)  போனில் பிடித்தோம். அன்று அவருக்கு பணி இல்லை எனினும் குழந்தைக்காக வந்து பார்த்தார். மொத்த வார்டும் பம்பரமாக சுழன்றது. இந்த ரோஜாப் பூவை காப்பாற்ற வேண்டும் என்று.



                          வாஸ்குலார் சர்ஜன் "எல்லாமே கேங்கிரீன் ஆயிடுச்சு, ஆம்புடேஷன் தான் பண்ணனும் போல. இல்லனா கேங்கிரீன் எக்ஸ்டன்ட் ஆகிட்டே இருக்கும்." எனக்கு கண்களில் நீர் வந்தது.
  "முதல்ல below knee amputation பண்ணலாம். முடிஞ்சவரை ட்ரை பண்ணலாம். அப்படியும் முடியலனா above knee பண்ணிக்கலாம்." வாஸ்குலார் சர்ஜன் சொன்னார். அறுவைசிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தோம். எனக்கு மனதே சரி இல்லை. இந்தப் பிஞ்சு இனி கால் இல்லாமல் எப்படி இருக்குமோ என்று. அட்லீஸ்ட் below knee யோடுபிழைத்து வந்து விடு மகளே. என அவளிடம் மனதுக்குள் கூறினேன். வார்டில் இருக்கப் பிடிக்காமல் ரெஸ்ட் ரூம்க்கு வந்தேன். அறுவை சிகிச்சை முடித்து சர்ஜனும் வந்தார். "above knee போயிடும் போல டாக்டர். சுத்தமா பிளட் சப்ளை இல்ல." என்றார்.

மறுநாள் போதும் பொண்ணைப் பார்த்தேன்.
 "எப்படி இருக்குடா? வலிக்குதா?"
 "வலி குறஞ்சுருச்சு சார். திரும்ப கால் வளந்துருமா சார்?"
  அவளிடம் எப்படி சொல்ல இதற்கு மேலும் கால் வெட்டப்படும் என்று. சிரித்துக் கொண்டே மழுப்பினேன். அவளுக்காக வாங்கிய சாக்லேட்டை அவளிடம் கொடுத்து விட்டு  நிற்க அங்கு நிற்க முடியாமல் வந்து விட்டேன்.
    அன்றில் இருந்து பதினைந்து நாட்களுக்கு சொந்த வேலை காரணமாக விடுமுறை எடுத்திருந்தேன். மீண்டும் பணிக்கு திரும்பிய போது போதும் பொண்ணு அங்கு இல்லை. என்ன நடந்திருக்கும் என்று தெரிந்ததால் அவளைப் பற்றி யாரிடமும் கேட்க வில்லை. போதும்டா கொடுமை சாமி!!.

 
  டிஸ்கி: இது என் மருத்துவ நண்பருக்கு நடந்த உண்மைச் சம்பவம்.

13 comments:

சிங்கக்குட்டி said...

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்...!

அந்த அப்பனை வரச்சொல்லி ரெண்டு அறை விட்டிருக்கணும் நீங்க.

கோவி.கண்ணன் said...

ரொம்ப கொடுமைங்க. குழந்தை இல்லை என்று எதிர்பார்த்து பலர் இருக்க, பெற்றக்குழந்தையை இப்படி

:(

எம் அப்துல் காதர் said...

உண்மையிலேயே மனம் நெகிழ வைத்து விட்டது. எல்லோரும் படித்து பகிர வேண்டிய பதிவு. வாழ்த்துகள்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:(

அலைகள் பாலா said...

//அந்த அப்பனை வரச்சொல்லி ரெண்டு அறை விட்டிருக்கணும் நீங்க.//
அது தான் எனக்கும் ஆசை. ஆனா முடியலையே.

எஸ்.கே said...

நான் மூன்று, நான்கு வருடங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது below knee, above knee amputationகளை பார்த்துள்ளேன். பாவமாக இருக்கும். அவர்களில் பலருக்கு டயாபடிஸ் இருந்தது.(சிலர் கால் எடுத்து சில வாரங்களில் இறந்து விட்டனர்).

எனக்கும் gangrene இருந்தது அதிர்ஷ்டவசமாக தப்பித்துவிட்டேன். ஒரு குழந்தைக்கு இந்த நிலை என்ற போது மனம் கனக்கிறது.

துளசி கோபால் said...

என்ன ஜென்மங்கள் இவுங்கெல்லாம்.....

மனசு கனத்துப் போச்சு:(

நிலாமதி said...

குழந்தயை நினைக்க கவலையாக் இருக்கு. என்று திருந்தும் இந்த உலகம்.

Bruno said...

//அவ்வளவு அழகு. பாம்பு கடித்த உடன் அவளது பாட்டி, லோக்கல் நாட்டு வைத்தியர் கம் கோவில் பூசாரியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் கடித்த இடத்தில் கத்தியால் கீறி இரத்தத்தை வெளியேற்றிவிட்டு, விஷம் வெளியேறி விட்டது என்று வீட்டுக்கு அனுப்பி விட்டான்.//

எவ்வளவு பட்டாலும் நம்ம ஆட்களுக்கு தான் புத்தி வராதே

Bruno said...

// டிஸ்கி: இது என் மருத்துவ நண்பருக்கு நடந்த உண்மைச் சம்பவம். //

சரி சரி நீங்க புனைவு எழுதல்ல. சரியா :) :) :)

இவ்வளவு பயம் தேவைதான் !!

அலைகள் பாலா said...

//below knee, above knee amputationகளை பார்த்துள்ளேன். பாவமாக இருக்கும். //

ஆமாம். கொடுமையாக இருக்கும்

அலைகள் பாலா said...

கருத்துரை வழங்கிய அனைவருக்கும் நன்றி.

அலைகள் பாலா said...

//எவ்வளவு பட்டாலும் நம்ம ஆட்களுக்கு தான் புத்தி வராதே//

கரெக்ட் சார்