வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Wednesday, September 15, 2010

கல்வி புரோக்கர்கள் எதற்கு?

      
   

           தனியார் பள்ளி வாகனம் மோதி மாணவன் பலி. ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்குத் தீவைத்தனர் - இந்த செய்தியை இரண்டு தினங்களாக தினசரிகளில் பார்த்து இருப்பீர்கள். இதில் எனக்கு சில சந்தேகங்கள்.

        ஏன் பள்ளிக்கு தீ வைத்தனர்?
                     அ) மாணவன் இறந்ததால்
                    ஆ) அதிக கட்டணம் வசூலித்ததால்
                     இ)  இரண்டுக்கும் சேர்த்து

  அ) மாணவன் இறந்ததால் - அப்ப போலிஸ் வேன் மோதி இறந்தால் போலிஸ் ஸ்டேசன எரிப்பீங்களா? ஆம்புலன்ஸ் மோதுனா ஹாஸ்பிட்டல எரிக்கனும்.  பள்ளி தாளாளர் நம்பியார் மாதிரி இடது உள்ளங்கைல வலது கையை வைத்து சுத்திக் கொண்டு, "அவன கொன்னுடு"னு ஆர்டர் போட்டாரா? அவர் வீட்ட ஏன் அடிச்சு நொறுக்குறீங்க? டிரைவர் செஞ்ச தப்புக்கு அவர் என்ன செய்வார்? "ஆக்ஸிடன்ட் செய்ய மாட்டேன்னு எழுதிக் குடு" அப்படி எழுதி வாங்கிட்டா வேலைல சேர்க்க முடியும்? ஒரு டிரைவர் செய்த தவறுக்கு மொத்த பள்ளியையும் எரிக்கலாமா? தனி மனித தவறுக்கு நிறுவனத்தை எரிக்கலாமா? அப்படி பண்ணனும்னா "துட்டுக்கு ஓட்டு" தமிழ்நாட்டுக்கு தீ வைங்க முதல்ல.

 ஆ) அதிக கட்டணம் வசூலித்ததால் - உன்ன யாரு இங்க படிக்க வைக்க சொன்னா? காசு அதிகம்னு தெரியுதுல? உனக்கு பிடிச்ச இடத்துல சேர்த்துக்கோ. பார்க் ஷெராட்டன்ல சாப்பிடனும்னா பில் கட்டி தான் ஆகணும். சாப்பிட்டு முடிச்சு பில் அதிகமா வந்தா ஹோட்டலுக்கு தீ வைப்பீங்களா? என் மகன்/மகள் ஸ்டேட் ரேங்க் எடுக்கணும்னு தான அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி எல்லாத்தையும் விட்டுட்டு புரோக்கர்கள் நடத்தும் பள்ளிகள்ல சேர்க்குறீங்க? விளம்பரம் பண்ற ஸ்கூல் தான் நல்ல ஸ்கூல். இரண்டாயிரம் பேர் படிச்சு மூணு பேர் ஸ்டேட் ரேங்க் எடுத்துருப்பான். அப்ப மீதி 1997 பேர் கதி?
    
        அந்த பள்ளி தாளாளர் உங்கள வேற பள்ளில சேர கூடாது, இங்க தான் படிக்கணும்னு சொல்லி அதிகம் வாங்குனா நீங்க பண்றது ஓ.கே. நான் இங்க தான் படிக்க வைப்பேன், நான் கொடுக்குற பணத்த தான் வாங்கணும்னா, அது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?

  இ) இரண்டிற்கும் சேர்த்து - ஒரு பள்ளி அதிகக் கட்டணம் வாங்கியதைக் கண்டிக்க நமக்கு ஒரு சிறுவனின் உயிர் தேவைப் படுகிறது. யாராவது உயிர் இழந்தால் தான் நமக்கு சொரணையே வரும்? அவன் இறந்திருக்காவிட்டால் நவத் துவாரங்களையும் அடைத்துக் கொண்டு கேட்கும் பணத்தை கொடுத்துக் கொண்டு இருப்பீர்கள். ரஞ்சிதா புகழ் நித்தியை திட்டும் போது அங்கு சென்ற படித்த கூமுட்டைகளையும் சேர்த்து தானே திட்டினோம். பள்ளியை திட்டும் போது, அதை வளர்த்து விட்ட பெற்றோரையும் சேர்த்து தானே திட்ட வேண்டும்?


   
        ஒரு பக்கம் பி.எட் முடித்து வேலை இல்லாமல் நிறைய பட்டதாரிகள். மற்றொரு பக்கம் எல்.கே.ஜி. அட்மிஷன்க்கு லட்ச ரூபாய் நன்கொடை. ஏன் இந்த முரண்பாடு?
 
          பள்ளி என்பது நிர்வாகம், ஆசிரியர் என இரு பகுதிகளைக் கொண்டது. நிர்வாகம் மட்டுமே மாறாதது. ஆசிரியர்கள் மாறிக் கொண்டே இருப்பர். ஆனால் ஆசிரியர்களே உங்கள் குழந்தைக்கு கிடைக்கும் கல்விக்கு பொறுப்பானவர்கள். நிர்வாகத்திற்கும் கல்விக்கும் சம்பந்தமே இல்லை. பள்ளி ஓனரா உங்க குழந்தைக்கு சொல்லித் தர போறார்? உங்கள் குழந்தைக்கு கற்பிக்கும் ஆசிரியருக்கு மிஞ்சி போனால் நாலாயிரம் ரூபாய் சம்பளம். அவர் வெளியேறினால் அதே நாலாயிரத்திற்கு மற்றொரு பி.எட் படித்தவர். இதில் பள்ளியின் தரம் என எதைக் கூறுவீர்கள்? ஆசிரியரையா? அல்லது நிர்வாகத்தையா? கண்டிப்பாக ஆசிரியர் தான். அப்புறம் எதற்கு நிர்வாகத்திற்கு மதிப்பு தருகிறீர்கள்?



     ஏனென்றால் வறட்டு கவுரவம். இது மட்டுமே அனைத்திற்கும் காரணம். பணம் கட்ட முடியாத, அல்லது கட்ட வொர்த் இல்லாத பள்ளிகளில் சேர்த்து விட்டு, என் பையன் அங்கு படிக்குறான் என பீற்றுவது. பின் பள்ளியை எரிப்பது. அப்பள்ளியில் இருந்து நல்ல ஆசிரியர் விலகி ஒரு சிறிய பள்ளியில் சேர்கிறார், அல்லது ஆரம்பிக்கிறார் என்றால் உங்கள் குழந்தைகளை அங்கு சேர்ப்பீர்களா?

   என் தந்தை சேர்த்தார் (அவரும் ஆசிரியர் தான்). வேலை இல்லாத பட்டதாரி ஆசிரியர்கள் நான்கு பேர் சேர்ந்து ஆரம்பித்த பள்ளியில், அவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அந்தப் பள்ளியின் முதல் வருடத்திலேயே என்னை சேர்த்தார். அவர்கள் என்னை மருத்துவராக்கி அழகு பார்த்தனர்.  என்னுடன் அப்பள்ளியில் படித்த அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்றனர்.  (மிக மிகக் குறைந்த கட்டணத்தில்)

  பெற்றோரின் கவனத்திற்கு,
    ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் கட்டும் பணத்தில் எச்சம் மட்டுமே உங்கள் குழந்தைகளுக்கு கல்வி தரும் ஆசிரியர்களுக்கு செல்கிறது. மற்றவை ஏ.ஸி அறையில் இருக்கும் கல்வி புரோக்கர்களுக்கே செல்கின்றன. 

        குழந்தைகளை கவனிக்காமல் விடும் பாவத்திற்கு பெரிய பள்ளியில் சேர்த்து நிறைய பணம் கட்டி பரிகாரம் தேட முயற்ச்சிக்க வேண்டாம். எத்தனை பெரிய பள்ளியாக இருந்தாலும் உங்கள் அன்பும், கவனிப்பும் இல்லை என்றால் எல்லாமே வேஸ்ட்.

     எல்.கே.ஜி.யிலேயே உங்கள் குழந்தையின் தலையில் பணத்தை கட்டி  ரேசில் ஓடும் குதிரை ஆக்கிவிடாதீர்கள். கல்வி என்பது பாடப்புத்தகம் மட்டும் அல்ல.  பள்ளிக்கு வெளியே கல்வியைக் காட்டுங்கள்.  பெரிய பள்ளி என்று அதிகமாக செலவு செய்து ரிட்டனை உங்கள் குழந்தையிடம் எதிர்பார்த்து, அவர்களிடம் பொறுப்பை திணித்து, பள்ளி வாழ்க்கையை, இளமைப் பருவத்தை நரகமாக்காதீர்கள்.


 
  வேலை இல்லாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்,
           தயவு செய்து பண முதலை பள்ளிகளிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் .மனசாட்சிக்கு பிடிக்காமல் வேலை செய்யாதீர்கள். முடிந்த வரை கூட்டாக சேர்ந்து பள்ளி ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். இல்லை எனில் பகுதி நேரமாக சில மாணவர்களை தத்து எடுத்து நல்ல மதிப்பெண் பெற வையுங்கள். அடுத்து கூட்டம் தானாக உங்களைத் தேடி வரும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஏதேனும் உதவி கேட்டால் செய்யுங்கள். பி.எட் முடித்து வேலைக்கு செல்லாமல் இருக்கும் குடும்பத் தலைவிகளே, உங்களுக்கு வருமானம் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிறைய குழந்தைகளுக்கு உங்களது உதவி தேவைப் படுகிறது. ஆத்ம திருப்ப்திக்காக பகுதி நேரமாகவாது சொல்லிக் கொடுங்கள்.

  பெரிய புகழ் பெற்ற பள்ளி என்று, கல்வி புரோக்கர்களிடம் சிக்கி அவதிப் படுவதை விட சிறிய பள்ளிகளில் சேர்ந்து நேரடியாக ஆசிரியர்களின் உதவியை பெறலாம். இதனால் திறமை உள்ள ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

   பள்ளிகளை எரிப்பதால் பிரச்சனை தீரப் போவது இல்லை.  "எங்க அப்பா ஸ்கூல்க்கு தீ வச்சார். அதனால நான் புது ஸ்கூல்ல சேர போறேன்" என்று உங்கள் குழந்தைகள் சொல்லும் கேவலமான நிலைக்கு தான் இட்டுச் செல்லும்.

       பெற்றோரும் ஆசிரியரும் ஒரே சமுதாயத்தில் அருகருகே இருக்கும் போது, இடையில் கல்வி புரோக்கர்கள் எதற்கு?
    
   

    

4 comments:

Jackiesekar said...

உண்மைதான் தம்பி பாலா.. மக்கள் தொகை பெருக்கத்தில் எல்லோருக்கும் அரச பள்ளிகளில் இடம் கிடைப்பது சாத்தியம் இல்லை.. தனியார் பள்ளிகளில் பெற்றோர் நீங்கள் சொல்லவது போல பெருமை பீற்றிக்கொள்ளவே சேர்க்கின்றனர்..ஆனால் சேர்க்க வருகின்றார்கள் என்பதற்க்காக அநியாய கொள்ளை அடிப்பது எந்த விதத்தில் நியாயம்.. எல்லா மல்ட்டி தியேட்டர்களிலும்120 ருபாய் கட்டனம் என்றால் அதைததான் வாங்க வேண்டும்.. ஆனால் 250 வாங்கினால் அது கொள்ளை அல்லவா அதைதான் தனியார் பள்ளிகய் செய்கின்றன.. அதனால்தான் அந்த கோபம்..

அலைகள் பாலா said...

ஆமாம் அண்ணா. அவர்களது கொள்ளைக்கு அளவே இல்லை. ஆனால் கோபம் வெளிப்பட்ட விதம் தவறு தானே? ரொம்ப நன்றி அண்ணா!:)

நிலாமதி said...

குழந்தைகளின் கல்விக்காக உங்களது ஆக்ரோஷம் நியாயமானது

அலைகள் பாலா said...

நன்றி அக்கா