வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Saturday, September 18, 2010

உலகத்திலேயே காஸ்ட்லியான பொழுது போக்கு

நிகழ்ச்சி 1:

      சனிக்கிழமை இரவு பதினொன்றரை மணி. தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்குள் ஒரு ஸ்ட்ரெச்சர் வேகமாக நுழைந்தது. அதன்மேல் சுயநினைவின்றி ஒருவன். மேலோட்டமாகப் பார்த்தால் காயம் ஒன்றும் இல்லை. பின்னாலேயே ஒரு பெண், சுமார் முப்பது வயது இருக்கும். சேலை முழுவதும் இரத்தக் கறை. அழுது கொண்டே வந்தாள்.
 "கீழ விழுந்துட்டார் சார். தலைல அடி பட்டுருச்சு. இரத்தமா வருது" 

                  அவனது தலையை தூக்கிப் பார்த்தால், பின் மண்டையில் இருந்து இரத்தம் பீச்சி அடித்துக் கொண்டிருந்தது. ஆர்ட்டரி கட். ஹெவி பிளீடிங். ஸ்ட்ரெச்சர் முழுவதும் அவனுக்கு கீழே இரத்தம். உடனடியாக தையல் இட வேண்டும். ஒரு மருத்துவர் தையல் இடும் வேலையை கவனிக்க, மற்றொரு மருத்துவர் கூட வந்த பெண்ணிடம் ஹிஸ்டரி கேட்க ஆரம்பித்தார்.

   "என்ன ஆச்சுமா?"
   "கீழ விழுந்துட்டார் சார்."
   "வண்டில இருந்தா?"
   "இல்ல சார் வீட்ல, கதவுல இடிச்சுட்டார்"......................
    உரையாடல் தொடர்ந்தது. மற்றொரு பக்கம் சிகிச்சையும். பின்மண்டையில் ஆங்கில "U" வடிவில் பெரிய காயம். தையல் இட்டு இரத்தப் போக்கை நிறுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது. ஒருவழியாக தையலிட்டு முடித்த பின் மீண்டும் எங்கிருந்தோ இரத்தம் வழிந்தது. தலை முழுவதும் முடியை நீக்கிப் பார்த்தால், நடுமண்டையில் "S" வடிவில் மற்றொரு காயம். மற்றும் சில சிறுசிறு காயங்கள். அனைத்திற்கும் மருந்திட்டு சரி செய்ய கிட்ட தட்ட ஒருமணி நேரம் ஆனது. இன்னும் அவனுக்கு சுயநினைவு திரும்பவில்லை.
  
          "அல்கஹாலிக் டாக்டர். குடிச்சுட்டு வீட்ல இருக்க கதவுல மோதி படில உருண்டு விழுந்துட்டாராம்" சக மருத்துவர் கூறினார். அவன் கொத்தனாராக வேலை செய்கிறானாம். ஒரு நாளைக்கு முன்னூறு சம்பளம். பொழுது போக்கிற்கு எப்போதாவது குடிப்பானாம். அன்று குடித்துவிட்டு வரும் போது கதவில் இடித்திருக்கிறான். அந்த கதவில் இரும்புக் குமிழ்கள் இருந்திருக்கின்றன. அதனால் பலத்த அடி. இன்னும் சுய நினைவு திரும்பாததன் காரணம், ஒருவேளை குடித்ததால் இருக்கலாம், அல்லது மூளையில் இரத்தக்கசிவு, காயம் இருக்கலாம். அதனால் சி.டி ஸ்கேன் செய்யப்பட்டது. நல்லவேளை. அது நார்மல். ஓரிரு தினங்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தால் போதும். எனினும் மறுநாள் காலை இரத்தக் கறை படிந்த அதே சேலையுடன் கேண்டினில் டீ வாங்கிய அவனது மனைவியைப் பார்க்கையில் கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. "கண்ணு முழிச்சுட்டார் சார்." என்றாள் சிரிப்புடன். 

நிகழ்ச்சி 2:

        அந்த நகரின் பிரபல ஹோட்டல் உரிமையாளர் அவர். உடல்நிலை சரி இல்லாததால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அப்போது பணியில் இருந்த மருத்துவர் எனது நண்பர். அவரை சந்திக்கச் சென்ற போது எதேச்சையாக ஹோட்டல் உரிமையாளரை அங்கு காண நேர்ந்தது. கட்டிலில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில். அவரது படுக்கை முழுவதும் கோழை, எச்சில். தனக்குத் தானே பேசிக்கொண்டும் ஏதேதோ வார்த்தையில் திட்டிக் கொண்டும் வானத்தைப் பார்த்து காறி உமிந்து கொண்டும் இருந்தார். அது அவர் மேலேயே விழுந்தது.

      "அல்கஹாலிக் வித்ட்ராயல். டெலிரியம் அண்ட் டிரமன்ஸ்-க்கு போய்ட்டார்." நான் அவரையே பார்ப்பதைக் கண்டு எனது நண்பர் என்னிடம் கூறினார். (டெலிரியம் அண்ட் டிரமன்ஸ் பற்றி தனிப் பதிவே எழுதலாம். விவரம் வேண்டும் நண்பர்கள் லிங்கைப் பார்க்கவும். வலையில் தேடினாலும் கிடைக்கும்.) அவர் படுத்திய பாட்டிற்கு, அவரது மனைவி வந்து பார்ப்பதே இல்லையாம். மகன் வெளிநாட்டில். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. அவரது ஹோட்டல் மேனேஜர் வந்து பில் செட்டில் செய்து விடுவாராம். இது எதுவும் புரியாமல் அவர் தனக்குத் தானே புலம்பிக்கொண்டு இருந்தார்.

     ஒரு பொது அறிவு கேள்வி. ஒரு குவாட்டரின் விலை என்ன?  அறுபது ரூபாய்?, எழுபது ரூபாய்? அட மேக்ஸிமம் நூறு, ஆயிரம் ரூபாய்?

            . நிகழ்ச்சி 1ன் படி, அந்த கொத்தனாருக்கு தையல், சி.டி ஸ்கேன், அட்மிஷன், ரூம் சார்ஜ், மருந்து, மாத்திரை அவனை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் செலவு என எப்படியும் அவனது ஒரு மாத சம்பளத்தை விட அதிகம் செலவு ஆகிவிடும். இது போக இன்னும் சில தினங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாது. தலை முழுவதும் மொட்டை வேறு. காயம் ஆறினாலும் தழும்பு இருக்கும். எப்படியும் இரண்டு மாத சம்பளம் காலி. இதே நிகழ்வு சாலை விபத்தாக இருந்தால்,.... வேறு விலை.

      நிகழ்ச்சி 2-ன் படி, ஊரில் மதிக்கப்படும் அவர், அஃக்றினை போல மானமிழந்து, மதிகெட்டு, மனைவியும் பார்க்க விரும்பாமல் எல்லோருக்கும் பொல்லனாக கை கால்கள் கட்டப்பட்டு இருப்பது.

              இப்போது சொல்லுங்கள் உலகில் காஸ்ட்லியான பொழுதுபோக்கு எது?
  ச்சே. யோசிச்சா ஒரே டென்ஷன் பா.  மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்.

அப்படியே  ஓட்டும் போடுங்க பா.
   

4 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

டெலிரியம் அண்ட் டிரமன்ஸ் பற்றி விக்கிபீடியாவில் படித்தேன் .. தினமும் குடிக்கும் எனக்கும் சற்று யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது... அளவாகவே குடிப்பேன் என்றாலும்... குறைத்துக் கொள்வதுதான் உத்தமம் என்று நினைக்கிறேன்...

அலைகள் பாலா said...

@@@ கே.ஆர்.பி.செந்தில் said...

சக்சஸ் சக்சஸ். பிளான் பண்ணி கவுத்துட்ட டா பாலா.

dearbalaji said...

Boss! இப்ப என்ன சொல்லவரிங்க? தண்ணி அடிக்கலாமா வேணாமா ? தெளிவா சொல்லுங்க.

துளசி கோபால் said...

கலர் டிவி, ஒரு ரூபா அரிசி எல்லாம் எப்படி கொடுப்பதுன்னு கவலை வந்துருச்சு:(

கண்ணு போனா என்னங்க. சித்திரம் ப்ரிண்ட் ரெடியா இருக்கு. விநியோகத்தை நிறுத்த முடியுமா?

என்னவோ போங்க......