வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Sunday, September 5, 2010

வாங்க மறந்த புத்தகங்கள் - நூலாறு 2010


 வேலூர் கோட்டை மைதானத்தில் "நூலாறு 2010" என்று புத்தகக் கண்காட்சி நடக்கிறது. ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமா? சலங்கை கட்டிக் கொண்டு கிளம்பியாச்சு.

        பபாப்சி நடத்துவது போல பிரம்மாண்டம் இல்லை எனினும், நன்றாக இருந்தது. நான் போகும் போது சாரை சாரையாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன் வந்து கொண்டு இருந்தனர். வந்ததற்கு அடையாளமாக திருக்குறள், பாரதியார் கவிதைகளை வாங்கிக் கொண்டு இருந்தனர். ஒரு மாணவன் மட்டும் வயதுக்கு சம்பந்தமில்லாமல் "தி.மு.க உருவானது ஏன்?" போன்ற தலைப்புகளைப் பார்த்துக் கொண்டு இருந்தான். (பிற்காலத்தில் பிரபல பதிவராக வாய்ப்புகள் உள்ளது, வாழ்த்துக்கள் தம்பி). பெண் ஆசிரியர்களது பார்வை பெரும்பாலும் ரமணிச்சந்திரன், காஞ்சனா ஜெயதிலகர் போன்றோரின் புத்தகங்களின் மீதே இருந்தது.

                    பெரும்பான்மையான பதிப்பகங்களில் ஏற்கனவே பார்த்த புத்தகங்களையேப் பார்க்க முடிந்தது. புது வரவுகள் குறைவாகவே தென்பட்டன. ஒரு நல்ல விஷயம் சமையல் புத்தக்கங்களின் ஆதிக்கம் குறைந்து இருந்தது. ஆனால் அந்த இடத்தை ஆன்மீக மற்றும் மருத்துவ குறிப்பு புத்தகங்கள் அடைத்திருந்தன.

                         கல்லூரி மாணவர்களில் இருவகை.  சே, பிரபாகரன், பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் இன்னபிற ஒருவகை. பணக் கடவுள் வாரன் பபெட்,  இன்போசிஸ் நாராயண மூர்த்தி, என ஒருவகை. ஒருவகையினரை மற்ற வகையினர் கேவலமாக பார்த்துக் கொண்டனர்.

         மற்ற புத்தகக் கண்காட்சி போலவே இதிலும் நடுத்தர நவீனத்துவவாதிகளின் தொல்லை தாங்க முடியவில்லை.  (நடுத்தர வயதில், பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்று, குடும்பத்திலும் எதுவும் பிரச்சனை இல்லாத போது, அதுவரை மறந்து போன சமூகப் பொறுப்பு, இலக்கிய ஆர்வம் எல்லாம் பொத்துக் கொண்டு வருமே, அவர்கள் தான்.) ந.ந.வாதி1: "யாருக்குமே படிக்குற  ஆர்வமே இல்லப்பா"
ந.ந.வாதி 2: "எல்லாரும் டி.வி பாக்குரதுல தான் இன்டரஸ்ட் காட்றாங்க. ஏதோ நம்மள மாதிரி ஒன்னு ரெண்டு பேர் தான் புக் படிக்குறோம்."
ந.ந.வாதி1: "என் பையனுக்கு டெய்லி சொல்றேன் புக் படிடா னு. கேக்க மாட்டேன்றான்" ஆர்வ மிகுதியில் அவர்கள் வாங்கியப் புத்தகங்களை எட்டிப் பார்த்தேன். இயர்புக் சலுகை விலையில் எழுபது, சிவகாமியின் சபதம் முதல் பாகம் நக்கீரனில் மலிவு விலைப் பதிப்பு. ( கடைக்காரர் எவ்வளவோ சொல்லியும் இரண்டாம் பாகம் வாங்கவில்லை அவர். அடுத்த எக்சிபிசன்ல வாங்கிக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.) கவின்ஸ் மில்க் குடிங்க. வேகமா வளரலாம் என்று சொல்லலாம் என்று நினைத்தேன்.
            ஐம்பதில் தான் வாசிக்கும் பழக்கம் ஆரம்பிக்கிறது என்றால், அடுத்த தலைமுறையினருக்கு எப்படி அறிவுரை கூற முடியும்? நல்ல வேலை. சென்னை மதுரை போல, பெருமைக்கு புத்தகம் வாங்கும் கூட்டம் இங்கு அதிகமாக இல்லை.

        எப்போதும் போல, கிழக்கு, விகடன் பதிப்பகங்களில் கூட்டம் இருந்தது. விகடனில், சக்தி விகடனில் உருவி செய்த புத்தகங்களுக்கு 25% தள்ளுபடி வேறு. சில பதிப்பகங்களின் ஸ்டால்களுக்குள் நுழையவே முடியவில்லை. அவர்களின் தலைப்புப்படி பார்த்தால், உலகத்தில் அனைவரும் பணக்காரர்களாக, தன்னம்பிக்கை உடையவர்களாக, அனைத்து மொழிகளையும் தெரிந்தவராக, உடல் ஆரோக்கியம் உள்ளவராக ............... இன்னும் நிறைய உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


  
     ஏழாவது முறையாக "பெண் ஏன் அடிமையானாள்?" வாங்கினேன். இந்தமுறையும் யாருக்காவது பரிசாகக் கொடுத்தால் சந்தோசம் தான். (விலை 25/- ரூபாய் தாங்க ஹி ஹி ஹி). 

     மொத்தப் புத்தகங்களிலும் மதியின் அடடே!! கார்டூன்கள் தொகுப்பு மிகவும் கவர்ந்தது.நேரமும் பணமும் இருந்தால் படிங்க.



    கல்லூரியில் படிக்கும் போது மெஸ் பீஸ் கட்ட வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்கள் வாங்கிவிட்டு, மூன்று வேளையும் தேநீர், வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு வெறித்தனமாக புத்தகங்கள் படித்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.  ஸ்டால்களில் நின்று கொண்டே முழுப் புத்தகத்தையும் படித்து விடுவோம். ஆனால் இப்போது புத்தகங்களின் மீதான அந்தக் கவர்ச்சி குறைந்துவிட்டது. வாசிப்பின் மீதான கவர்ச்சி அப்படியேத் தான் உள்ளது. என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தேன்.
   அலுப்பு தட்டும் ஒரே வகையான மோனோடோனஸ் புத்தகங்கள்.
   தெரிந்து கொள்ள சிறிதும் தேவை இல்லாத கருத்துகளைப் பற்றிய புத்தகங்கள்.
 ஆழ்ந்து செல்லாமல் நுனிப்புல் மேயும் புத்தகங்கள்,
  இதைவிட அதிகமாக நெட்டில் கிடைக்கிறதே என்ற எண்ணம்.
 அதியசமாக கிடைக்கும் ஒன்றிரண்டு நல்ல புத்தகங்களிலும் மலைக்க வைக்கும் விலை. 

   இப்போது புத்தகம் வாங்க வைத்திருக்கும் பணத்தில் சாப்பிடுகிறேன். என்னைப் போன்றே பலர் நினைக்கின்றனர் போல. அதனால் தான் கண்காட்சிக்கு வெளியில் டார்லிங் பேக்கரி ஸ்டாலில் நல்ல கூட்டம்.


       பழைய ஞாபகங்கள் நினைவுக்கு வர, தமிழ்ப் புத்தகக் கன்னி இழந்த கவர்ச்சியை மீண்டும் பெற்றால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்ற எண்ணத்துடன் வெளியேறினேன்.

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்

அலைகள் பாலா said...

நன்றி ராம்ஜி