வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Saturday, September 18, 2010

உலகத்திலேயே காஸ்ட்லியான பொழுது போக்கு

நிகழ்ச்சி 1:

      சனிக்கிழமை இரவு பதினொன்றரை மணி. தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்குள் ஒரு ஸ்ட்ரெச்சர் வேகமாக நுழைந்தது. அதன்மேல் சுயநினைவின்றி ஒருவன். மேலோட்டமாகப் பார்த்தால் காயம் ஒன்றும் இல்லை. பின்னாலேயே ஒரு பெண், சுமார் முப்பது வயது இருக்கும். சேலை முழுவதும் இரத்தக் கறை. அழுது கொண்டே வந்தாள்.
 "கீழ விழுந்துட்டார் சார். தலைல அடி பட்டுருச்சு. இரத்தமா வருது" 

                  அவனது தலையை தூக்கிப் பார்த்தால், பின் மண்டையில் இருந்து இரத்தம் பீச்சி அடித்துக் கொண்டிருந்தது. ஆர்ட்டரி கட். ஹெவி பிளீடிங். ஸ்ட்ரெச்சர் முழுவதும் அவனுக்கு கீழே இரத்தம். உடனடியாக தையல் இட வேண்டும். ஒரு மருத்துவர் தையல் இடும் வேலையை கவனிக்க, மற்றொரு மருத்துவர் கூட வந்த பெண்ணிடம் ஹிஸ்டரி கேட்க ஆரம்பித்தார்.

   "என்ன ஆச்சுமா?"
   "கீழ விழுந்துட்டார் சார்."
   "வண்டில இருந்தா?"
   "இல்ல சார் வீட்ல, கதவுல இடிச்சுட்டார்"......................




    உரையாடல் தொடர்ந்தது. மற்றொரு பக்கம் சிகிச்சையும். பின்மண்டையில் ஆங்கில "U" வடிவில் பெரிய காயம். தையல் இட்டு இரத்தப் போக்கை நிறுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது. ஒருவழியாக தையலிட்டு முடித்த பின் மீண்டும் எங்கிருந்தோ இரத்தம் வழிந்தது. தலை முழுவதும் முடியை நீக்கிப் பார்த்தால், நடுமண்டையில் "S" வடிவில் மற்றொரு காயம். மற்றும் சில சிறுசிறு காயங்கள். அனைத்திற்கும் மருந்திட்டு சரி செய்ய கிட்ட தட்ட ஒருமணி நேரம் ஆனது. இன்னும் அவனுக்கு சுயநினைவு திரும்பவில்லை.
  
          "அல்கஹாலிக் டாக்டர். குடிச்சுட்டு வீட்ல இருக்க கதவுல மோதி படில உருண்டு விழுந்துட்டாராம்" சக மருத்துவர் கூறினார். அவன் கொத்தனாராக வேலை செய்கிறானாம். ஒரு நாளைக்கு முன்னூறு சம்பளம். பொழுது போக்கிற்கு எப்போதாவது குடிப்பானாம். அன்று குடித்துவிட்டு வரும் போது கதவில் இடித்திருக்கிறான். அந்த கதவில் இரும்புக் குமிழ்கள் இருந்திருக்கின்றன. அதனால் பலத்த அடி. இன்னும் சுய நினைவு திரும்பாததன் காரணம், ஒருவேளை குடித்ததால் இருக்கலாம், அல்லது மூளையில் இரத்தக்கசிவு, காயம் இருக்கலாம். அதனால் சி.டி ஸ்கேன் செய்யப்பட்டது. நல்லவேளை. அது நார்மல். ஓரிரு தினங்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தால் போதும். எனினும் மறுநாள் காலை இரத்தக் கறை படிந்த அதே சேலையுடன் கேண்டினில் டீ வாங்கிய அவனது மனைவியைப் பார்க்கையில் கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. "கண்ணு முழிச்சுட்டார் சார்." என்றாள் சிரிப்புடன். 

நிகழ்ச்சி 2:

        அந்த நகரின் பிரபல ஹோட்டல் உரிமையாளர் அவர். உடல்நிலை சரி இல்லாததால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அப்போது பணியில் இருந்த மருத்துவர் எனது நண்பர். அவரை சந்திக்கச் சென்ற போது எதேச்சையாக ஹோட்டல் உரிமையாளரை அங்கு காண நேர்ந்தது. கட்டிலில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில். அவரது படுக்கை முழுவதும் கோழை, எச்சில். தனக்குத் தானே பேசிக்கொண்டும் ஏதேதோ வார்த்தையில் திட்டிக் கொண்டும் வானத்தைப் பார்த்து காறி உமிந்து கொண்டும் இருந்தார். அது அவர் மேலேயே விழுந்தது.





      "அல்கஹாலிக் வித்ட்ராயல். டெலிரியம் அண்ட் டிரமன்ஸ்-க்கு போய்ட்டார்." நான் அவரையே பார்ப்பதைக் கண்டு எனது நண்பர் என்னிடம் கூறினார். (டெலிரியம் அண்ட் டிரமன்ஸ் பற்றி தனிப் பதிவே எழுதலாம். விவரம் வேண்டும் நண்பர்கள் லிங்கைப் பார்க்கவும். வலையில் தேடினாலும் கிடைக்கும்.) அவர் படுத்திய பாட்டிற்கு, அவரது மனைவி வந்து பார்ப்பதே இல்லையாம். மகன் வெளிநாட்டில். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. அவரது ஹோட்டல் மேனேஜர் வந்து பில் செட்டில் செய்து விடுவாராம். இது எதுவும் புரியாமல் அவர் தனக்குத் தானே புலம்பிக்கொண்டு இருந்தார்.

     ஒரு பொது அறிவு கேள்வி. ஒரு குவாட்டரின் விலை என்ன?  அறுபது ரூபாய்?, எழுபது ரூபாய்? அட மேக்ஸிமம் நூறு, ஆயிரம் ரூபாய்?

            . நிகழ்ச்சி 1ன் படி, அந்த கொத்தனாருக்கு தையல், சி.டி ஸ்கேன், அட்மிஷன், ரூம் சார்ஜ், மருந்து, மாத்திரை அவனை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் செலவு என எப்படியும் அவனது ஒரு மாத சம்பளத்தை விட அதிகம் செலவு ஆகிவிடும். இது போக இன்னும் சில தினங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாது. தலை முழுவதும் மொட்டை வேறு. காயம் ஆறினாலும் தழும்பு இருக்கும். எப்படியும் இரண்டு மாத சம்பளம் காலி. இதே நிகழ்வு சாலை விபத்தாக இருந்தால்,.... வேறு விலை.

      நிகழ்ச்சி 2-ன் படி, ஊரில் மதிக்கப்படும் அவர், அஃக்றினை போல மானமிழந்து, மதிகெட்டு, மனைவியும் பார்க்க விரும்பாமல் எல்லோருக்கும் பொல்லனாக கை கால்கள் கட்டப்பட்டு இருப்பது.

              இப்போது சொல்லுங்கள் உலகில் காஸ்ட்லியான பொழுதுபோக்கு எது?




  ச்சே. யோசிச்சா ஒரே டென்ஷன் பா.  மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்.

அப்படியே  ஓட்டும் போடுங்க பா.
   

Wednesday, September 15, 2010

கல்வி புரோக்கர்கள் எதற்கு?

      
   

           தனியார் பள்ளி வாகனம் மோதி மாணவன் பலி. ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்குத் தீவைத்தனர் - இந்த செய்தியை இரண்டு தினங்களாக தினசரிகளில் பார்த்து இருப்பீர்கள். இதில் எனக்கு சில சந்தேகங்கள்.

        ஏன் பள்ளிக்கு தீ வைத்தனர்?
                     அ) மாணவன் இறந்ததால்
                    ஆ) அதிக கட்டணம் வசூலித்ததால்
                     இ)  இரண்டுக்கும் சேர்த்து

  அ) மாணவன் இறந்ததால் - அப்ப போலிஸ் வேன் மோதி இறந்தால் போலிஸ் ஸ்டேசன எரிப்பீங்களா? ஆம்புலன்ஸ் மோதுனா ஹாஸ்பிட்டல எரிக்கனும்.  பள்ளி தாளாளர் நம்பியார் மாதிரி இடது உள்ளங்கைல வலது கையை வைத்து சுத்திக் கொண்டு, "அவன கொன்னுடு"னு ஆர்டர் போட்டாரா? அவர் வீட்ட ஏன் அடிச்சு நொறுக்குறீங்க? டிரைவர் செஞ்ச தப்புக்கு அவர் என்ன செய்வார்? "ஆக்ஸிடன்ட் செய்ய மாட்டேன்னு எழுதிக் குடு" அப்படி எழுதி வாங்கிட்டா வேலைல சேர்க்க முடியும்? ஒரு டிரைவர் செய்த தவறுக்கு மொத்த பள்ளியையும் எரிக்கலாமா? தனி மனித தவறுக்கு நிறுவனத்தை எரிக்கலாமா? அப்படி பண்ணனும்னா "துட்டுக்கு ஓட்டு" தமிழ்நாட்டுக்கு தீ வைங்க முதல்ல.

 ஆ) அதிக கட்டணம் வசூலித்ததால் - உன்ன யாரு இங்க படிக்க வைக்க சொன்னா? காசு அதிகம்னு தெரியுதுல? உனக்கு பிடிச்ச இடத்துல சேர்த்துக்கோ. பார்க் ஷெராட்டன்ல சாப்பிடனும்னா பில் கட்டி தான் ஆகணும். சாப்பிட்டு முடிச்சு பில் அதிகமா வந்தா ஹோட்டலுக்கு தீ வைப்பீங்களா? என் மகன்/மகள் ஸ்டேட் ரேங்க் எடுக்கணும்னு தான அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி எல்லாத்தையும் விட்டுட்டு புரோக்கர்கள் நடத்தும் பள்ளிகள்ல சேர்க்குறீங்க? விளம்பரம் பண்ற ஸ்கூல் தான் நல்ல ஸ்கூல். இரண்டாயிரம் பேர் படிச்சு மூணு பேர் ஸ்டேட் ரேங்க் எடுத்துருப்பான். அப்ப மீதி 1997 பேர் கதி?
    
        அந்த பள்ளி தாளாளர் உங்கள வேற பள்ளில சேர கூடாது, இங்க தான் படிக்கணும்னு சொல்லி அதிகம் வாங்குனா நீங்க பண்றது ஓ.கே. நான் இங்க தான் படிக்க வைப்பேன், நான் கொடுக்குற பணத்த தான் வாங்கணும்னா, அது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?

  இ) இரண்டிற்கும் சேர்த்து - ஒரு பள்ளி அதிகக் கட்டணம் வாங்கியதைக் கண்டிக்க நமக்கு ஒரு சிறுவனின் உயிர் தேவைப் படுகிறது. யாராவது உயிர் இழந்தால் தான் நமக்கு சொரணையே வரும்? அவன் இறந்திருக்காவிட்டால் நவத் துவாரங்களையும் அடைத்துக் கொண்டு கேட்கும் பணத்தை கொடுத்துக் கொண்டு இருப்பீர்கள். ரஞ்சிதா புகழ் நித்தியை திட்டும் போது அங்கு சென்ற படித்த கூமுட்டைகளையும் சேர்த்து தானே திட்டினோம். பள்ளியை திட்டும் போது, அதை வளர்த்து விட்ட பெற்றோரையும் சேர்த்து தானே திட்ட வேண்டும்?


   
        ஒரு பக்கம் பி.எட் முடித்து வேலை இல்லாமல் நிறைய பட்டதாரிகள். மற்றொரு பக்கம் எல்.கே.ஜி. அட்மிஷன்க்கு லட்ச ரூபாய் நன்கொடை. ஏன் இந்த முரண்பாடு?
 
          பள்ளி என்பது நிர்வாகம், ஆசிரியர் என இரு பகுதிகளைக் கொண்டது. நிர்வாகம் மட்டுமே மாறாதது. ஆசிரியர்கள் மாறிக் கொண்டே இருப்பர். ஆனால் ஆசிரியர்களே உங்கள் குழந்தைக்கு கிடைக்கும் கல்விக்கு பொறுப்பானவர்கள். நிர்வாகத்திற்கும் கல்விக்கும் சம்பந்தமே இல்லை. பள்ளி ஓனரா உங்க குழந்தைக்கு சொல்லித் தர போறார்? உங்கள் குழந்தைக்கு கற்பிக்கும் ஆசிரியருக்கு மிஞ்சி போனால் நாலாயிரம் ரூபாய் சம்பளம். அவர் வெளியேறினால் அதே நாலாயிரத்திற்கு மற்றொரு பி.எட் படித்தவர். இதில் பள்ளியின் தரம் என எதைக் கூறுவீர்கள்? ஆசிரியரையா? அல்லது நிர்வாகத்தையா? கண்டிப்பாக ஆசிரியர் தான். அப்புறம் எதற்கு நிர்வாகத்திற்கு மதிப்பு தருகிறீர்கள்?



     ஏனென்றால் வறட்டு கவுரவம். இது மட்டுமே அனைத்திற்கும் காரணம். பணம் கட்ட முடியாத, அல்லது கட்ட வொர்த் இல்லாத பள்ளிகளில் சேர்த்து விட்டு, என் பையன் அங்கு படிக்குறான் என பீற்றுவது. பின் பள்ளியை எரிப்பது. அப்பள்ளியில் இருந்து நல்ல ஆசிரியர் விலகி ஒரு சிறிய பள்ளியில் சேர்கிறார், அல்லது ஆரம்பிக்கிறார் என்றால் உங்கள் குழந்தைகளை அங்கு சேர்ப்பீர்களா?

   என் தந்தை சேர்த்தார் (அவரும் ஆசிரியர் தான்). வேலை இல்லாத பட்டதாரி ஆசிரியர்கள் நான்கு பேர் சேர்ந்து ஆரம்பித்த பள்ளியில், அவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அந்தப் பள்ளியின் முதல் வருடத்திலேயே என்னை சேர்த்தார். அவர்கள் என்னை மருத்துவராக்கி அழகு பார்த்தனர்.  என்னுடன் அப்பள்ளியில் படித்த அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்றனர்.  (மிக மிகக் குறைந்த கட்டணத்தில்)

  பெற்றோரின் கவனத்திற்கு,
    ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் கட்டும் பணத்தில் எச்சம் மட்டுமே உங்கள் குழந்தைகளுக்கு கல்வி தரும் ஆசிரியர்களுக்கு செல்கிறது. மற்றவை ஏ.ஸி அறையில் இருக்கும் கல்வி புரோக்கர்களுக்கே செல்கின்றன. 

        குழந்தைகளை கவனிக்காமல் விடும் பாவத்திற்கு பெரிய பள்ளியில் சேர்த்து நிறைய பணம் கட்டி பரிகாரம் தேட முயற்ச்சிக்க வேண்டாம். எத்தனை பெரிய பள்ளியாக இருந்தாலும் உங்கள் அன்பும், கவனிப்பும் இல்லை என்றால் எல்லாமே வேஸ்ட்.

     எல்.கே.ஜி.யிலேயே உங்கள் குழந்தையின் தலையில் பணத்தை கட்டி  ரேசில் ஓடும் குதிரை ஆக்கிவிடாதீர்கள். கல்வி என்பது பாடப்புத்தகம் மட்டும் அல்ல.  பள்ளிக்கு வெளியே கல்வியைக் காட்டுங்கள்.  பெரிய பள்ளி என்று அதிகமாக செலவு செய்து ரிட்டனை உங்கள் குழந்தையிடம் எதிர்பார்த்து, அவர்களிடம் பொறுப்பை திணித்து, பள்ளி வாழ்க்கையை, இளமைப் பருவத்தை நரகமாக்காதீர்கள்.


 
  வேலை இல்லாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்,
           தயவு செய்து பண முதலை பள்ளிகளிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் .மனசாட்சிக்கு பிடிக்காமல் வேலை செய்யாதீர்கள். முடிந்த வரை கூட்டாக சேர்ந்து பள்ளி ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். இல்லை எனில் பகுதி நேரமாக சில மாணவர்களை தத்து எடுத்து நல்ல மதிப்பெண் பெற வையுங்கள். அடுத்து கூட்டம் தானாக உங்களைத் தேடி வரும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஏதேனும் உதவி கேட்டால் செய்யுங்கள். பி.எட் முடித்து வேலைக்கு செல்லாமல் இருக்கும் குடும்பத் தலைவிகளே, உங்களுக்கு வருமானம் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிறைய குழந்தைகளுக்கு உங்களது உதவி தேவைப் படுகிறது. ஆத்ம திருப்ப்திக்காக பகுதி நேரமாகவாது சொல்லிக் கொடுங்கள்.

  பெரிய புகழ் பெற்ற பள்ளி என்று, கல்வி புரோக்கர்களிடம் சிக்கி அவதிப் படுவதை விட சிறிய பள்ளிகளில் சேர்ந்து நேரடியாக ஆசிரியர்களின் உதவியை பெறலாம். இதனால் திறமை உள்ள ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

   பள்ளிகளை எரிப்பதால் பிரச்சனை தீரப் போவது இல்லை.  "எங்க அப்பா ஸ்கூல்க்கு தீ வச்சார். அதனால நான் புது ஸ்கூல்ல சேர போறேன்" என்று உங்கள் குழந்தைகள் சொல்லும் கேவலமான நிலைக்கு தான் இட்டுச் செல்லும்.

       பெற்றோரும் ஆசிரியரும் ஒரே சமுதாயத்தில் அருகருகே இருக்கும் போது, இடையில் கல்வி புரோக்கர்கள் எதற்கு?
    
   

    

Monday, September 13, 2010

போதும் பொண்ணு - போதும்டா கொடுமை சாமி!!!



போன வருடம் அக்டோபர் மாதம் என்று நினைக்கிறேன். மதுரை இராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் நல வார்டில் பணி. அன்று ஞாயிற்றுக் கிழமை. மதியம் இரண்டு மணி இருக்கும். அவசர சிகிச்சை பிரிவிற்கு வேகமாக ஒரு ஆட்டோ வந்தது. ஒரு பாட்டி போர்வையால் மூடப்பட்ட ஒரு பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்தார். வழக்கம் போல ஏதாவது சளி காய்ச்சலாக இருக்கும் என்று நான் அந்த பாட்டி வருவதை பார்த்துக் கொண்டே இருந்தேன். குழந்தையை கட்டிலில் கிடத்தி விட்டு, அந்தப் பாட்டியிடம்,
  "பாப்பாவிற்கு என்ன பண்ணுது பாட்டி?"
   "பாம்பு கடிச்குருச்சு. ஒரு கால் வீங்கிடுச்சு சாமி"
     போர்வையை விலக்கிப் பார்த்தேன். வலது முழங்காலுக்கு கீழே முழுவதும் வீங்கி கறுத்து, நீர் வழிந்து கொண்டு இருந்தது. எனக்கு பேரதிர்ச்சி. கோபத்தில் அந்த பாட்டியை திட்ட ஆரம்பித்தேன்.
   "கொஞ்சமாவது அறிவு இருக்கா? கால் அழுகி போற மாதிரி இருக்கு. இவ்ளோ நாள் வீட்ல வச்சு என்ன பண்ணிக்கிட்டு இருந்திங்க?"
  "இன்னைக்கு காலைல தான் கடிச்சுது சார். உடனே தூக்கிட்டு வர்றேன்." பாட்டி அழுக ஆரம்பித்தது.
   நிச்சயமாக தெரியும் இது நடந்து மூன்று நான்கு நாட்கள் ஆகிருக்கும். இனிமேல் இந்த பாட்டியிடம் உண்மை வராது. பேசி நேரத்தை வீணடிக்காமல் சிகிச்சையை ஆரம்பிக்கலாம் என்று நினைத்து அந்தப் பாட்டியிடம், "பாப்பா இங்க இருக்கட்டும், முன்னாடி போய் பாப்பா பேரு சொல்லி சீட்டு பதிஞ்சிட்டு வாங்க" என்று அனுப்பினேன்.
      அந்த குழந்தையிடம்,
         "வலிக்குதா பாப்பா?"
         "லேசா வலிக்குது சார்"
        "உன் பேரு என்னடா?"
        "போதும் பொண்ணு"
      மதுரை பக்கம் இந்த பெயரை அடிக்கடி கேட்கலாம். வரிசையாக பெண் குழந்தை பிறந்து கொண்டே இருந்தால், கடைசிக் குழந்தைக்கு போதும் பொண்ணு என்று பெயர் வைத்தால் அடுத்து பையன் பிறக்கும் என்பது நம்பிக்கை.
     " என்னைக்கு பாம்பு கடிச்சுது?"
      " மூணு நாள் ஆச்சு சார்."
        "எங்க கடிச்சுது?"
      "வீட்டு பக்கத்திலேயே சார். விளையாடிகிட்டு இருக்கும் போது."
      "அப்புறம் என்ன பண்ணுனீங்க?"
 அந்த ஐந்து வயது குழந்தை என் கேள்விகளுக்கு அழகாக பதில் சொல்லிக் கொண்டே வந்தது. அது பேசுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல. வேதனையின் சாயல் முகத்தில் தெரிந்தாலும், அதை வெளிக்காட்டாமல் பொறுமையாக என்னிடம் பேசியது. அவ்வளவு அழகு. பாம்பு கடித்த உடன் அவளது பாட்டி, லோக்கல் நாட்டு வைத்தியர் கம் கோவில் பூசாரியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் கடித்த இடத்தில் கத்தியால் கீறி இரத்தத்தை வெளியேற்றிவிட்டு, விஷம் வெளியேறி விட்டது என்று வீட்டுக்கு அனுப்பி விட்டான். வீட்டிற்கு வந்த பின் கால் சிறிது சிறிதாக வீங்க ஆரம்பித்து இருக்கிறது. மீண்டும் அவனிடம் அழைத்துச் சென்ற போது மீண்டும் கீறி விட்டு, கொஞ்சம் இலைகளை மூலிகை என்று கொடுத்து அனுப்பி விட்டான். பாட்டியும் வீட்டில் தனக்கு தெரிந்த வைத்தியத்தை பார்த்திருக்கிறார். அதற்குள் மூன்று தினங்கள் ஓட, வீக்கம் அதிகமாகவே இங்கு அழைத்து வந்து இருக்கிறார்கள். இது கொடுமை என்றால் இதற்கு அடுத்து போதும் பொண்ணு சொன்னது மிகப் பெரிய கொடுமை.
  "உங்க அப்பா என்ன பண்றார்? அவராவது உன்ன முன்னாடியே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துருக்கலாம்ல?"
"எங்க அப்பாக்கு என்ன பிடிக்காது."
"ஏன் பிடிக்காது?"
"நா பையனா பிறக்கனும்னு நெனச்சாராம். ஆனா பொண்ணா பிறந்ததால பிடிக்காது. என்கிட்ட பேசவே மாட்டார்."
"அம்மா?"
"அவங்க இப்ப மாசமா இருக்காங்க. நிறை மாசம். வர முடியாதாம். கால பாத்து அழுதுகிட்டே இருந்தாங்க."

            எனக்கு வந்த கோவத்திற்கு அந்த அப்பனை வெட்டிக் கொல்லலாம் போல இருந்தது. ஆனால் கோவப் பட நேரம் இல்லை. காலில் நீர் கோர்த்து, இரத்தக் குழாயை அழுத்திக் கொண்டு இருப்பாதால் காலுக்கு இரத்தம் செல்லாமல் கால் அழுகிக் கொண்டு இருந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை நிபுணரை வரவைத்து, பேஸியாட்டமி எனும் சிறிய அறுவை சிகிச்சை செய்து அழுத்தத்தை குறைத்தோம். மீண்டும் இரத்த ஓட்டம் வந்துள்ளதா என அறிய டாப்ளர் ஸ்கேன் பண்ண வேண்டும். அன்று ஞாயிறு. விடுமுறை. அறுவைசிகிச்சை நிபுணர் அவரது நண்பரிடம் ஹேன்ட் டாப்ளர் மிசின் வாங்கி வந்து பார்த்தார். இரத்த ஓட்டம் வர வில்லை. இரத்தநாள அடைப்பை நீக்கும் மருந்துகள் செலுத்தப்பட்டன. செல்லுலைடிஸ்-க்கு ஆண்டிபையாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டன. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர் வாஸ்குலார் சர்ஜனை (இரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர்)  போனில் பிடித்தோம். அன்று அவருக்கு பணி இல்லை எனினும் குழந்தைக்காக வந்து பார்த்தார். மொத்த வார்டும் பம்பரமாக சுழன்றது. இந்த ரோஜாப் பூவை காப்பாற்ற வேண்டும் என்று.



                          வாஸ்குலார் சர்ஜன் "எல்லாமே கேங்கிரீன் ஆயிடுச்சு, ஆம்புடேஷன் தான் பண்ணனும் போல. இல்லனா கேங்கிரீன் எக்ஸ்டன்ட் ஆகிட்டே இருக்கும்." எனக்கு கண்களில் நீர் வந்தது.
  "முதல்ல below knee amputation பண்ணலாம். முடிஞ்சவரை ட்ரை பண்ணலாம். அப்படியும் முடியலனா above knee பண்ணிக்கலாம்." வாஸ்குலார் சர்ஜன் சொன்னார். அறுவைசிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தோம். எனக்கு மனதே சரி இல்லை. இந்தப் பிஞ்சு இனி கால் இல்லாமல் எப்படி இருக்குமோ என்று. அட்லீஸ்ட் below knee யோடுபிழைத்து வந்து விடு மகளே. என அவளிடம் மனதுக்குள் கூறினேன். வார்டில் இருக்கப் பிடிக்காமல் ரெஸ்ட் ரூம்க்கு வந்தேன். அறுவை சிகிச்சை முடித்து சர்ஜனும் வந்தார். "above knee போயிடும் போல டாக்டர். சுத்தமா பிளட் சப்ளை இல்ல." என்றார்.

மறுநாள் போதும் பொண்ணைப் பார்த்தேன்.
 "எப்படி இருக்குடா? வலிக்குதா?"
 "வலி குறஞ்சுருச்சு சார். திரும்ப கால் வளந்துருமா சார்?"
  அவளிடம் எப்படி சொல்ல இதற்கு மேலும் கால் வெட்டப்படும் என்று. சிரித்துக் கொண்டே மழுப்பினேன். அவளுக்காக வாங்கிய சாக்லேட்டை அவளிடம் கொடுத்து விட்டு  நிற்க அங்கு நிற்க முடியாமல் வந்து விட்டேன்.
    அன்றில் இருந்து பதினைந்து நாட்களுக்கு சொந்த வேலை காரணமாக விடுமுறை எடுத்திருந்தேன். மீண்டும் பணிக்கு திரும்பிய போது போதும் பொண்ணு அங்கு இல்லை. என்ன நடந்திருக்கும் என்று தெரிந்ததால் அவளைப் பற்றி யாரிடமும் கேட்க வில்லை. போதும்டா கொடுமை சாமி!!.

 
  டிஸ்கி: இது என் மருத்துவ நண்பருக்கு நடந்த உண்மைச் சம்பவம்.

Friday, September 10, 2010

சுகரும் ஃபிகரும் பாகம் - 4

  முதல்  மூன்று பாகங்களிலும் சர்க்கரை வியாதியின் அடிப்படை விசயங்களைப் பார்த்தோம். இதுவரை நாம் தெரிந்து கொண்ட விசயங்களில் இருந்து ஒரு எளிய ரியல் டைம் எடுத்துக்காட்டு.



 டயாபடிஸ் இல்லாத நார்மல் உடல்

 காலை 8.00 மணி : 
         ஒரு வடை கொஞ்சம் பொங்கல்

        9.00 a.m
            உணவு குளுக்கோஸாக மாறி இரத்தத்தில் கலக்கிறது. இரத்த குளுக்கோஸ் அளவு கூடுகிறது.

          9.01 a.m
             உடனே இன்சுலின் செயல்பட்டு குளுக்கோஸை  சேமிக்கிறது/செலவழிக்கிறது.

           9.01 to 9.30
            இரத்த குளுக்கோஸின் அளவு கட்டுக்குள் வருகிறது.

           10.30 a.m
            உடல் இயக்கத்திற்கு குளுக்கோஸ் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதால் இரத்தத்தில் அதன் அளவு குறையத் தொடங்குகிறது. 

          10.31 a.m to 1.00 p.m
                       குளுக்கோஸை மீட்டு எடுக்கும் ஹார்மோன்கள் செயல்பட தொடங்கி இன்சுலின் சேமித்த குளுக்கோஸை மீட்டு இரத்தத்திற்கு அளிக்கின்றன.

         1.00 p.m
         அடுத்த சாப்பாடு. மீண்டும் அதே நிகழ்வு.


   இது போன்று தான் இரத்தத்தில் குளுக்கோஸ் சமநிலையாக வைக்கப்படுகிறது. உடலுக்கு தேவையான குளுக்கோஸும் வழங்கப்படுகிறது.

    சிகிச்சை பெறாத டயாபடிஸ் நோயாளியின் உடலில்  இது எப்படி நடக்கும்?

காலை 8.00 மணி
       ஒரு வடை கொஞ்சம் பொங்கல்

   9.00 a.m
      இரத்ததில் குளுக்கோஸின் அளவு கூடுகிறது.

   9.01 a.m
      இன்சுலின் இல்லாததால் ஹைபர்கிளைசீமியா வருகிறது ( முழு விளக்கத்திற்கு பாகம் மூன்றைப் பார்க்கவும்).
  
    9.01 to 9.30 a.m
          குளுக்கோஸை சேமிக்க முடிவதில்லை. இரத்தத்தில் அதிகமாக குளுக்கோஸ் இருப்பதால் இரத்தக் குழாய்கள் பாதிக்கப் படுகின்றன.  


 
9.30 to 10.00 a.m
       இரத்ததில் சர்க்கரை தொடர்ந்து அதிகரிக்கிறது. சிறுநீரில் வெளியேறுகிறது.

10.00 a.m
       உடல் இயக்கத்திற்கு பயன்படுத்தப் பட்டதாலும், சிறுநீரில் வெளியேறியதாலும் இரத்த குளுக்கோஸ் அளவு குறைகிறது.  

 10.30 a.m
     சேமிக்கப் படாததால் குளுக்கோஸை மீட்டு எடுக்கவும் முடிவதில்லை.

10.30 a.m-க்கு பிறகு
     குளுக்கோஸ் பற்றாக்குறையால் சோர்வு, தளர்ச்சி, மயக்கம் ஏற்படுகிறது.

        இந்த படத்தை கொஞ்ச நேரம் முறைச்சு பாத்தா நிறையா விஷயம் புரியும்.

  எனவே டயாபடீஸ் நோயாளி அதிக குளுக்கோஸ் மற்றும் குறைந்த குளுக்கோஸ் இரண்டாலும் அவதிப்படுவார். இரத்தத்தில் குளுக்கோஸ் சமநிலையாக இருக்காது. உடலுக்கும் தேவையான குளுக்கோஸ் கிடைக்காது. (குறிப்பு: நேரங்கள் எடுத்துக்காட்டுக்காக போடப்பட்டவை. நபருக்கு நபர் அவை மாறும்.)

  முதல் மூன்று பாகங்களில் விளக்கிய விசயங்களையே இங்கு எடுத்துக்காட்டாகத் தந்திருக்கிறேன். இதில் சந்தேகம் இருந்தால் அவற்றை படித்துப் பார்க்கவும். அப்படியும் தீர வில்லை என்றால், மெயில் அல்லது பின்னூட்டம் வழியாக தெரியப்படுத்தவும்.
 
  பிடித்து இருந்தால், நான்கு பேருக்கு இந்த பதிவு தெரிய வேண்டும் என்று நினைத்தால் ஓட்டுப் போடுங்கள்.
 சுகரும் ஃபிகரும் பாகம் -3
 சுகரும் ஃபிகரும் பாகம் -2
 சுகரும் ஃபிகரும் பாகம் -1

 



    
 

Monday, September 6, 2010

சுகரும் ஃபிகரும் பாகம் - 3

முந்தைய  பதிவுகள்,
சுகரும் ஃபிகரும் பாகம் - 1
சுகரும் ஃபிகரும் பாகம் - 2



  தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் கலைச் சொற்கள்
    ஹைபோகிளைசீமியா(hypoglycaemia)
                - இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்த நிலை
    ஹைபர்கிளைசீமியா(hyperglycaemia)
                     - இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமான நிலை

     Sickness comes on horseback but departs on foot.  ~Dutch Proverb



   நம் உடல் ஒரு அழகான வெனிஸ் நகரம்.
                     ஆம். உடலின் எல்லா செல்களும் இரத்த ஓட்டத்தில் ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டுள்ளன.
                    இரத்த ஓட்டம் என்றால் சாதாரண ஓட்டம் இல்லைங்க. வலது இதயத்தில் கிளம்பி, நுரையீரலுக்கு போய் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு, அப்படியே இடது இதயத்துக்கு வந்து, அங்கிருந்து பல பாகமாக பிரிந்து உடல் முழுவதும் சென்று, தேவையானவற்றை கொடுத்துவிட்டு, கழிவுகளை எடுத்துக்கொண்டு, சிறுநீரகத்தில் அந்தக் கழிவுகளை வெளியேற்றிவிட்டு, குடல் பகுதியில் இன்பாக்ஸ்-ல் வந்த உணவில் சத்துப் பொருட்களை உறிஞ்சி, கல்லீரலுக்கு போய் ஸ்பேம் செக் பண்ணிட்டு, திரும்ப வலது இதயத்திற்கு வந்தால்,..... ஸ்ஸ்ஸ் அப்பாடா! ஆனா ரெஸ்ட் கிடையாது. உடனே திரும்ப நுரையீரலுக்கு அனுப்பிவிடும் இதயம். இப்படி பிறந்ததில் இருந்து ஒரு செகண்ட் கூட ரெஸ்ட் எடுக்காம ஓடுறது தான் இரத்த ஓட்டம்.

               இந்த இரத்த ஓட்டத்தின் மூலமாக மட்டுமே அனைத்து செல்களுக்கும் குளுக்கோஸ் பரிமாற்றம் நடக்கிறது. அதனால், இரத்தத்தில் குளுக்கோஸ் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது.

              நம் கதையில், (கதை மறந்து விட்டால் ஒருமுறை பார்த்துக் கொள்ளவும்) வீட்டிற்கு தேவையான மளிகை, காய்கறி, பால் போன்ற பொருட்களை மாரிக்கண்ணு தான் வாங்கி வர வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவன் கையில் பணம் இருப்பது எவ்வளவு அவசியம்?

                   இரத்தத்தில் குளுக்கோஸ் அவசியம். ஓ.கே. அதிகமாக இருந்தால் என்ன ஆகும்?

             ஏற்கனவே நாம் சொன்னது போல,
   இரத்தத்தில் குளுக்கோஸ்- குடிகாரன் கையில் பணம்.
 ஒரு அளவுக்கு இருந்தா பிரச்சனை இல்ல. அதிகமா இருந்தா ஆப்பு தான்.

   நம்ம இரத்தத்தில இருக்க குளுக்கோஸ் யூரின்ல லீக் ஆகாம தடுக்குறது கிட்னி தான். ஓரளவுக்கு தான் அதனால தடுக்க முடியும். அதாவது சுமார் 180mg/dl வரை. அதுக்கு மேல இரத்த சர்க்கரை கூடினா "போய் தொலை. என்னால தடுக்க முடியல." என்று வழியனுப்பி வைத்துவிடும். போற குளுக்கோஸ் சும்மா போகாது. கூடவே உடம்புல இருக்க தண்ணீரையும் கூட்டிகிட்டு போகும். அதனால அதிகமா யூரின் போகும். யூரின் அதிகமா போறதால தண்ணீர் அதிகமா தவிக்கும். குளுக்கோஸ் அதிகமா போறதால, பசியும் அதிகமா எடுக்கும்.

 இப்போ அடுத்த எடுத்துக்காட்டு.

  யூரின்ல போற குளுக்கோஸ் - ஒயின்ஷாப் பார்ல செலவாகுற பணம்.

இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகமாக  இருந்தால் (ஹைபர்கிளைசீமியா) வேறு என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
   நாவறட்சி, அதிக முறை சிறுநீர் கழித்தல், இரவில் சிறுநீர் வருவதால் தூக்கமின்மை, உடலுக்கு தேவையான குளுக்கோஸ் வெளியேறுவதால் சோர்வு, தளர்ச்சி, உடல் எடையில் மாற்றம்,  அதிக குளுக்கோஸ் காரணமாக, நோய்த் தொற்று, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, மன உளைச்சல் - இவை உடனடியாக ஏற்படும்.

   நீண்ட காலமாக ஹைபர்கிளைசீமியா இருந்தால் இரத்தக் குழாய்கள், நரம்புகள் பாதிக்கப்படும். கண், சிறுநீரகத்தில் உள்ள மெல்லிய இரத்தக் குழாய்கள் பாதிக்கப் படுவதால் கண் பார்வைக் குறைபாடு, சிறுநீரக செயலிழப்பு ஏற்ப்படும். இதயம், மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்கள் பாதிக்கப் படுவதால் இதய அடைப்பு, பக்கவாதம் ஏற்ப்படும். நரம்புகள் பாதிக்கப் படுவதால் தலைசுற்றல், புற நரம்புகளில் வலி, எரிச்சல்  போன்றவை ஏற்ப்படும்
  இரத்தத்தில குளுக்கோஸ் அதிகமா இருந்தா இவ்வளவு வருமா? ஆவ்வ்வ்வ்......


.

நகைக்கடை விளம்பர டிஸ்கசனில் தப்பி வந்தவரின் மரண வாக்குமூலம்

 முஸ்கி: சத்தியமா இது கற்பனை தானுங்கோ.

  நகைக்கடை விளம்பரத்தின் டிஸ்கசனில் கலந்து கொண்ட ஒரு நபர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவர் மூலம் உலகிற்கு அதிர்ச்சி தரும் விஷயங்கள் கசிந்துள்ளன.  டிஸ்கசனில் நடந்ததாக அவர் கூறியதாவது.

விஜய் : சைலன்ஸ். யாரும் பேசக் கூடாது. டிஸ்கசன் ஆரம்பிங்க.

இயக்குனர் (பவ்யமாக) : பேசாம டிஸ்கசன் பண்ண முடியாது சார்.

விஜய்: ஒரு டாக்டர்க்கே சொல்லித்தரியா? தமிழ்நாட்டுல என்ன எதுத்து பேசுன மொத ஆள் நீ தான்.

உதவி இயக்குனர்: அது இல்ல சார்........

விஜய்: இரண்டாவது ஆள் நீ தான்.  

நகைக்கடை  ஓனர்: (மொபைலில்). ஹலோ யாரு தாவூத்தா? ஏக் மா தோ துக்கடா. இங்க ஒருத்தன் லொள்ளு பண்ணிகிட்டே இருக்கான்.................. இல்ல இல்ல. உடனே போட வேண்டாம். ஒத்து வரலைனா சொல்றேன்.


                    அழகா இருந்தாலே பொறாமை. பஸ் ஸ்டாப்ல ஏதோ ஒரு நாயி பண்ணுன வேலை

விஜய்: ண்ணா! இதுக்குலாம் கோவிச்சுகலாமா? வாங்கண்ணா நம்ம டிஸ்கசன்க்கு போலாம்.

இயக்குனர்: சார் முதல் ஷாட். நீங்க கார்ல இருந்து இறங்கி வரீங்க.

விஜய்: சூப்பர். உடனே ஓபனிங் சாங். இப்ப தான் விவேகா பேசுனார். "அரிசினா ஆட்டுக்கல்லு, மாவுனா தோசைகல்லு"னு சூப்பர் சாங் எழுதி வச்சுருக்கார்.

இயக்குனர்: விளம்பரமே 30 செகண்ட் தான். இதுல சாங் லாம் வைக்க முடியாது.

விஜய்: சாங் இல்லையா? கோக் விளம்பரத்துல வச்சாங்க. நல்லா என்ன ஏமாத்துறிங்க. நெக்ஸ்ட்?

இயக்குனர்: ஒரு ஸ்கூல்க்கு போய் அங்க இருக்குற மணிய பாக்குறிங்க. உடனே பிளாஷ்பேக்.

விஜய்: நா சொல்றேன். சின்ன வயசுல, ஸ்கூல் மணிய இரும்பு கடைல போட்டு, பேரிச்சம்பழம் வாங்கி சாப்பிட்டுறேன். அதனால ஊர விட்டு ஓடி வந்து தி.நகர்ல வெல்டிங் கடைல வேலை பாக்குறேன். அப்ப அசின் உங்க அப்பா, அம்மா யாருன்னு கேக்குது. உடனே ஊருக்குப் போறேன். என்னாத்த சொல்வேனுங்கோ. வடுமாங்கா ஊறுதுங்கோ.

இயக்குனர்: இதென்ன சிவகாசி ரீமேக்கா? கான்செப்ட்ட கேளுங்க சார். நீங்க பெல் அடிக்கும் போது வாட்ச்மேன் வந்து விஜய்னு சொல்றார்.

விஜய்: இந்த கான்செப்ட் சரி இல்ல சார். நகைக்கடை விளம்பரம் எப்படி இருக்கணும் னு நான் சொல்றேன் பாருங்க. வில்லன் நகையை கொள்ளை அடிச்சுட்டு ப்ளைட்ல தப்பிச்சு போறான். நான் சைக்கிள்ல விரட்டிகிட்டே போறேன். சரியான சேஸிங் சீன். அவன் இந்தியா பார்டர தாண்டும் போது சைக்கிள்ல முன் பிரேக் பிடிச்சு அப்படியே பறந்து பிளைட்குள்ள போயி நகைய காப்பாத்துறேன்.

  கேட்டுக்கொண்டிருந்த  ஒரு உதவி இயக்குனருக்கு திடீரென்று காக்கா வலிப்பு வந்து இழுக்கிறது. அவரை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு செல்கின்றனர்.

விஜய்: இந்த கான்செப்ட் சரி இல்ல போல. நீங்க சொன்னதே பண்ணலாம்.

இயக்குனர்: வாட்ச்மேன் விஜய்னு சொன்னது, தலைவாசல் விஜய்ய. அவர் தான் ஹெட்மாஸ்டர். உடனே கோவிச்சுக்கிட்டு நீங்க வந்த கார்லயே திரும்பி போயிடுறிங்க.

விஜய்: திரும்பி போறதுக்கு முன்னாடி ஒரு பஞ்ச் டயலாக் வச்சா நல்லா இருக்கும். நீங்க பிஸ்கட் செய்ய தான் தங்கம் வாங்குவிங்க, நாங்க பிரட் செய்ய, பிஸ்ஸா செய்ய, ஜாங்கிரி செய்ய, மசாலா கடலை செய்ய, கார சேவு செய்ய தங்கம் வாங்குவோம்.

  மற்றொரு உதவி இயக்குனர் மாடியில் இருந்நது குதிக்க, 108க்கு கால் பறக்கிறது. கொலைக் கேஸ் ஆகிவிடும் என அனைவரும் தலைதெறிக்க ஓட, டிஸ்கசன் முடிந்தது.

Sunday, September 5, 2010

வாங்க மறந்த புத்தகங்கள் - நூலாறு 2010


 வேலூர் கோட்டை மைதானத்தில் "நூலாறு 2010" என்று புத்தகக் கண்காட்சி நடக்கிறது. ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமா? சலங்கை கட்டிக் கொண்டு கிளம்பியாச்சு.

        பபாப்சி நடத்துவது போல பிரம்மாண்டம் இல்லை எனினும், நன்றாக இருந்தது. நான் போகும் போது சாரை சாரையாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன் வந்து கொண்டு இருந்தனர். வந்ததற்கு அடையாளமாக திருக்குறள், பாரதியார் கவிதைகளை வாங்கிக் கொண்டு இருந்தனர். ஒரு மாணவன் மட்டும் வயதுக்கு சம்பந்தமில்லாமல் "தி.மு.க உருவானது ஏன்?" போன்ற தலைப்புகளைப் பார்த்துக் கொண்டு இருந்தான். (பிற்காலத்தில் பிரபல பதிவராக வாய்ப்புகள் உள்ளது, வாழ்த்துக்கள் தம்பி). பெண் ஆசிரியர்களது பார்வை பெரும்பாலும் ரமணிச்சந்திரன், காஞ்சனா ஜெயதிலகர் போன்றோரின் புத்தகங்களின் மீதே இருந்தது.

                    பெரும்பான்மையான பதிப்பகங்களில் ஏற்கனவே பார்த்த புத்தகங்களையேப் பார்க்க முடிந்தது. புது வரவுகள் குறைவாகவே தென்பட்டன. ஒரு நல்ல விஷயம் சமையல் புத்தக்கங்களின் ஆதிக்கம் குறைந்து இருந்தது. ஆனால் அந்த இடத்தை ஆன்மீக மற்றும் மருத்துவ குறிப்பு புத்தகங்கள் அடைத்திருந்தன.

                         கல்லூரி மாணவர்களில் இருவகை.  சே, பிரபாகரன், பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் இன்னபிற ஒருவகை. பணக் கடவுள் வாரன் பபெட்,  இன்போசிஸ் நாராயண மூர்த்தி, என ஒருவகை. ஒருவகையினரை மற்ற வகையினர் கேவலமாக பார்த்துக் கொண்டனர்.

         மற்ற புத்தகக் கண்காட்சி போலவே இதிலும் நடுத்தர நவீனத்துவவாதிகளின் தொல்லை தாங்க முடியவில்லை.  (நடுத்தர வயதில், பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்று, குடும்பத்திலும் எதுவும் பிரச்சனை இல்லாத போது, அதுவரை மறந்து போன சமூகப் பொறுப்பு, இலக்கிய ஆர்வம் எல்லாம் பொத்துக் கொண்டு வருமே, அவர்கள் தான்.) ந.ந.வாதி1: "யாருக்குமே படிக்குற  ஆர்வமே இல்லப்பா"
ந.ந.வாதி 2: "எல்லாரும் டி.வி பாக்குரதுல தான் இன்டரஸ்ட் காட்றாங்க. ஏதோ நம்மள மாதிரி ஒன்னு ரெண்டு பேர் தான் புக் படிக்குறோம்."
ந.ந.வாதி1: "என் பையனுக்கு டெய்லி சொல்றேன் புக் படிடா னு. கேக்க மாட்டேன்றான்" ஆர்வ மிகுதியில் அவர்கள் வாங்கியப் புத்தகங்களை எட்டிப் பார்த்தேன். இயர்புக் சலுகை விலையில் எழுபது, சிவகாமியின் சபதம் முதல் பாகம் நக்கீரனில் மலிவு விலைப் பதிப்பு. ( கடைக்காரர் எவ்வளவோ சொல்லியும் இரண்டாம் பாகம் வாங்கவில்லை அவர். அடுத்த எக்சிபிசன்ல வாங்கிக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.) கவின்ஸ் மில்க் குடிங்க. வேகமா வளரலாம் என்று சொல்லலாம் என்று நினைத்தேன்.
            ஐம்பதில் தான் வாசிக்கும் பழக்கம் ஆரம்பிக்கிறது என்றால், அடுத்த தலைமுறையினருக்கு எப்படி அறிவுரை கூற முடியும்? நல்ல வேலை. சென்னை மதுரை போல, பெருமைக்கு புத்தகம் வாங்கும் கூட்டம் இங்கு அதிகமாக இல்லை.

        எப்போதும் போல, கிழக்கு, விகடன் பதிப்பகங்களில் கூட்டம் இருந்தது. விகடனில், சக்தி விகடனில் உருவி செய்த புத்தகங்களுக்கு 25% தள்ளுபடி வேறு. சில பதிப்பகங்களின் ஸ்டால்களுக்குள் நுழையவே முடியவில்லை. அவர்களின் தலைப்புப்படி பார்த்தால், உலகத்தில் அனைவரும் பணக்காரர்களாக, தன்னம்பிக்கை உடையவர்களாக, அனைத்து மொழிகளையும் தெரிந்தவராக, உடல் ஆரோக்கியம் உள்ளவராக ............... இன்னும் நிறைய உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


  
     ஏழாவது முறையாக "பெண் ஏன் அடிமையானாள்?" வாங்கினேன். இந்தமுறையும் யாருக்காவது பரிசாகக் கொடுத்தால் சந்தோசம் தான். (விலை 25/- ரூபாய் தாங்க ஹி ஹி ஹி). 

     மொத்தப் புத்தகங்களிலும் மதியின் அடடே!! கார்டூன்கள் தொகுப்பு மிகவும் கவர்ந்தது.நேரமும் பணமும் இருந்தால் படிங்க.



    கல்லூரியில் படிக்கும் போது மெஸ் பீஸ் கட்ட வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்கள் வாங்கிவிட்டு, மூன்று வேளையும் தேநீர், வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு வெறித்தனமாக புத்தகங்கள் படித்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.  ஸ்டால்களில் நின்று கொண்டே முழுப் புத்தகத்தையும் படித்து விடுவோம். ஆனால் இப்போது புத்தகங்களின் மீதான அந்தக் கவர்ச்சி குறைந்துவிட்டது. வாசிப்பின் மீதான கவர்ச்சி அப்படியேத் தான் உள்ளது. என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தேன்.
   அலுப்பு தட்டும் ஒரே வகையான மோனோடோனஸ் புத்தகங்கள்.
   தெரிந்து கொள்ள சிறிதும் தேவை இல்லாத கருத்துகளைப் பற்றிய புத்தகங்கள்.
 ஆழ்ந்து செல்லாமல் நுனிப்புல் மேயும் புத்தகங்கள்,
  இதைவிட அதிகமாக நெட்டில் கிடைக்கிறதே என்ற எண்ணம்.
 அதியசமாக கிடைக்கும் ஒன்றிரண்டு நல்ல புத்தகங்களிலும் மலைக்க வைக்கும் விலை. 

   இப்போது புத்தகம் வாங்க வைத்திருக்கும் பணத்தில் சாப்பிடுகிறேன். என்னைப் போன்றே பலர் நினைக்கின்றனர் போல. அதனால் தான் கண்காட்சிக்கு வெளியில் டார்லிங் பேக்கரி ஸ்டாலில் நல்ல கூட்டம்.


       பழைய ஞாபகங்கள் நினைவுக்கு வர, தமிழ்ப் புத்தகக் கன்னி இழந்த கவர்ச்சியை மீண்டும் பெற்றால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்ற எண்ணத்துடன் வெளியேறினேன்.