வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....
Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Tuesday, November 16, 2010

நமக்கும் ஒரு என்கவுண்டர்

   

           செவ்வாய் கிழமை விடியும் போதே மழை பெய்துகொண்டே  இருந்தது.... காலையில்  இருந்து வெளியில் போகமுடியவில்லை.  எதோ பக்கத்து வீட்டு புண்ணியத்துல அப்ப அப்ப சூடா தேநீர் கிடைத்துக் கொண்டு இருந்தது.  மாலை நேரம் வடை சாப்பிடலாம் என முடிவு செய்து மலையாள சேச்சியின் வடை கடைக்கு சென்றோம் நானும் என் நண்பனும். சேச்சி ஒரு சின்ன பிளாஸ்டிக் தார்ப்பாயின் கீழ் அடுப்பை வைத்து, எங்களைப் போல  மழைக்கு வடை சாப்பிட வேண்டும் என்று நினைத்த பல பேரின்  ஆசைகளை  பூர்த்தி செய்து கொண்டிருந்தார்.

            அடுத்து நடந்தது தான் பெரிய காமெடி.. சேச்சியிடம் வடை ரெடி ஆகும் வரை மழையில் நனையாமல்  இருக்க அருகில் இருந்த  ஆட்டோவில்  நானும் என் நண்பனும்  உக்கார்ந்து  இருந்தோம். அப்போது  பக்கத்து வீட்டில்  இருந்து ஒரு சிறுமி 10  வயது இருக்கும், டியுஷன்   செல்வதற்காக   வெளியில் வந்தாள். மணி ஐந்து தான் ஆகியிருந்தது. ஆனால் எழு மணி போல இருட்டியிருந்தது. தெருவில் யாரும் இல்லை.

      அந்த பாப்பா மழையில் வெளியில் வருவதும், டியுஷன் போக மனம்  இல்லாமல் மீண்டும் உள்ளே செல்வதுமாக இருந்தாள். உடனே எனக்கும் என் நண்பனுக்கும் பழைய கால சிந்தனைகள், நம்மலாம் அந்த காலத்துல  எந்த டியுஷன்க்கு போனோம்?   (அந்த காலம்னா  உடனே பிளாக் அண்ட்  ஒயிட்ல  யோசிக்காதிங்க. நாங்களும் யூத் தான்)  இன்னைக்கு ஒருநாளாவது பாப்பா சந்தோசமா இருக்கட்டும் என்று என் நண்பன் ஒரே ஒரு பொய் தாங்க சொன்னான்.  அது என்கவுண்டர் அளவு போகும்னு நெனைக்கவே இல்லைங்க... 

      "பாப்பா உனக்கு டியுஷன் இல்ல. லீவ் விட்டுடாங்க." இது தாங்க அந்த பொய். ஆனா அதுக்கு அந்த பாப்பா பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள். அதன்பிறகு தான் நாங்கள் பண்ணிய தவறு நினைவுக்கு வந்தது. நாங்க ஒரு ஆட்டோவில் இருக்கோம், இருட்டு வேறு, மழை, தெருவில் யாரும் இல்லை. அப்போது அந்த பாப்பா ஐயோ கடத்துறாங்க என ஒரே ஒரு சவுண்ட் விட்டிருந்தால் எங்க நிலைமை என்ன ஆகிருக்கும்? மவனே உனக்கு என்கவுண்டர் தாண்டா.

  ஆகவே மக்களே சாலையில் முன்பின் தெரியாத  சிறு குழந்தைகளிடம் கவனமாக இருங்கள்.

   டிஸ்கி: எந்த ஒரு முறைதவறுதலுக்கும்  அதன் பலனை நாம் அனுபவித்தே ஆக வேண்டும்.  ஏதோ ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நியாயப்படுத்தப்பட்ட காரணங்களுக்காக தான் லஞ்சம் நமது சமூகத்தில் முதன்முதலில் நுழைந்திருக்கும். ஆனால் இன்று டிராபிக் முதல் டெலிகாம் வரை புரையோடிப் புண்ணாகி நாறுகிறது. இதே போன்ற நிலைமை நாளை என்கவுண்டர்களுக்கும் வரலாம். தேன் எடுக்கும் போது புறங்கையை நக்கியவன் சும்மா இருக்க மாட்டான் என்பார்கள். கோவை என்கவுண்டர் முறைதவறுதலின் நியாயப்படுத்தப்பட்ட முதல்படி. புறங்கையை நக்கிவிட்டார்கள். இனி சும்மா இருப்பார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

Monday, September 27, 2010

காமன்வெல்த் பாடம்


 

   கரை வேட்டியில்
   கறை படாமல்
   கரையில் நிற்பவன்
   கையில் முத்து
  
   காற்றிழுத்து
   கடலுக்குள் மூழ்கி
   காரிருளில்
   கண்டேன் சிப்பியை

   காசு சேர்க்க
   கட்சிக்காரனா(நா)ய்  இரு
   காமன்வெல்த்
   கற்றுத் தந்த பாடம்

  

Monday, September 20, 2010

தவறான மருத்துவத் தகவல்கள் , உயிரைப் பறிக்கும் ஆபத்து - கட்டாயம் தவிர்க்க வேண்டிய பதிவுகள்.

    தவறான மருத்துவப் பதிவுகள் பற்றிய பதிவில், எனது கோபம் தெரிகிறது என நண்பர்கள் கூறி இருந்தனர். அவரது ஒரு பதிவில் தான் முரண்பாடு என நினைக்கின்றனர். உண்மை அப்படி அல்ல. இதை பொறுமையாகப் படிக்கவும், நாம் ஏமாற்றப்பட்ட பல விஷயங்கள் உங்களுக்கு புரியும்.  

        அடிப்படை அறிவே இல்லாமல், இயற்கை வைத்தியம் என்ற பெயரில், எந்த ஒரு குறையும் இல்லாத மூன்று மாத குழந்தைக்கு விளக்கெண்ணெய், இன்னும் சில பொருட்களை கொடுத்து, intestinal oobstruction   ஏற்பட்டு, அந்தக் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றி தெரியுமா? இறுதி முயற்சியாக அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப் பட்டது. வாழ்நாள் முழுவதும் அரைக் குடலுடன் வாழப் போகும் அந்தக் குழந்தையின் முகத்த்தில் இவர்களால் விழிக்க இயலுமா?

       சிவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்பதைப் போல இயற்கை வைத்தியத்தில் பக்க விளைவு இல்லை என்பவர்களே இதை என்ன சொல்வீர்கள்?

          விளக்கெண்ணெயின் பக்க விளைவுகளைப் பற்றி அறிவீர்களா? அன்றாடம் உபயோகப்படுத்தும் மஞ்சளுக்கும் டைபாய்டு காய்ச்சலுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா? உப்பில் இருந்து மிளகாய் வரை அனைத்துப் பொருட்களும் பக்க விளைவு கொண்டவை என்பது தெரியுமா?

   ஒரு நோயாளியின் மருத்துவ அறிக்கையின் சுருக்கத் தமிழாக்கம் -  "அறுபது வயது சர்க்கரை நோயாளி சாப்பிடாமல் சர்க்கரை குறை நிலைக்குச் சென்று சுயநினைவின்றி விழுந்துவிட்டார். அவரைக் காப்பற்ற சர்க்கரைக் கரைசலை வாயில் ஊற்றினார் அவரது மனைவி. (சுய நினைவின்றி இருப்பவருக்கு வாய் வழியே எதுவும் கொடுக்க கூடாது என்ற அடிப்படை மருத்துவ அறிவு எத்தனை பேருக்கு தெரியும்?) அது புரையேறி aspirated pneumonia உருவாகி அவரது உயிரைப் பறித்தது."  இது போன்ற மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில் சர்க்கரை நோயாளியை சாப்பிடாமல் உபவாசம் என்ற பெயரில் பட்டினி இருக்கச் சொல்வது எத்தனை பேரின் உயிரைப் பறிக்குமோ? இதெல்லாம் என்ன விளைவு வைத்தியரே? (குறைவான அளவு உணவை அடிக்கடி உண்பதே சர்க்கரை நோய்க்கு ஏற்றது என்பது நண்பருக்கு தெரியுமோ என்னவோ?)

  உடலில் வியர்வை எப்படி உருவாகிறது என நெட்டில் படிக்கவும் நண்பரே. உடலில் இருந்து வெப்பம் வெளியேற முடியாத நிலையில் வியர்வை உற்பத்தி ஆகி வெப்பத்தை சமன் செய்கிறது. வியர்வையில் எவ்வளவு சோடியம், எவ்வளவு குளோரைடு உள்ளது என அனைத்தும் நெட்டில் கிடைக்கும். அறிவியல் இப்படி இருக்க வாழை இலையை சுற்றிக் கொண்டு படுத்தால் வியர்க்குமாம், கெட்ட நீர் வெளியேறுமாம். கேக்குறவன் கேனையனா இருந்தா வியர்வைல.....வேணாம், விட்ருங்க.   சிமென்ட் சாக்கு தெரியுமா/ அதை கட்டிக் கொண்டு படுத்துப் பாருங்கள். இதைவிட அதிகமாக வேர்க்கும்.

   வியர்வை எப்படி உருவாகும்? வியர்வையில் உள்ள பொருட்கள் என்ன? என்பது போன்ற அறிவியல் கருத்துகள் நிருபிக்கப்பட்ட பிறகும் "கெட்ட நீர் வெளியேறிவிட்டது" என்று மோசடி செய்யும் உங்களை என்னவென்று சொல்வது? இதற்குப் பெயர் தான் மருத்துவ அறிவை வளர்ப்பதா? (வெப்பம் கூடினால் சுரப்பி வியர்வையை சுரக்கும், மற்றபடி வாழை இழைக்கும், சிமென்ட் சாக்கிற்கும் அதற்கு வித்தியாசம் தெரியாது)

   கரையான்களும், பாம்புகளும் எச்சமிட்ட புற்றுமண்ணை உடலில் பூசினால் இன்பெக்க்ஷன் வராதா? நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களின் காயத்தில் மண் பட்டால் சீழ் பிடிக்காதா?

  இங்கு அனைத்தும் ஆய்வுக்கு உட்பட்டவை. ஆயிரம் வருடங்களாக இருப்பதாலேயே கேள்விகள் இன்றி ஒத்துக் கொள்ள முடியாது. உடன்கட்டை ஏறுதல் கூட ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இருந்தது.

  பால் சாப்பிட்டால் காம எண்ணம் தலை தூக்குமாம், நீங்கள் பெரிதும் மதிக்கும் காந்தி அடிகள் இறுதிவரை பால் தான் சாப்பிட்டார், அவருக்கும் தூக்கிக் கொண்டே இருந்ததோ காம எண்ணம்? உடலுக்கு தேவையான பெரும்பான்மை விட்டமின்கள் பாலில் இருக்கின்றன என்பது +2 மாணவர்களுக்கு கூட தெரிந்த நிலையில், நண்பருக்கு தெரியாதது சோகமே.(பாலைப் பற்றி பதிவுத் தொடரே எழுதலாம்) வைட்டமின் B12 பற்றி தெரியுமா? சைவ உணவு உண்பவர்களுக்கு B12 கிடைக்க ஒரே வழி பால் தான். நாசிசம் பாசிசம் போல food faddism ஆபத்தான விஷயம். தெரிந்தோ தெரியாமலோ அதைப் பரப்புகிறீர்கள் நண்பரே. இது போல சொல்லிக் கொண்டே போகலாம் நண்பரே.

  மருத்துவப் பதிவுகளை எழுதுவதும் அவற்றைப் பற்றி கேட்டால், அந்த புத்தகத்தில் போட்டுருக்கு, எனக்கு தெரியாது என பொறுப்பை தட்டிக் கழிப்பதும் சரியான விஷயம் அல்ல நண்பரே. மற்ற உயிரை ம... ராக மதிக்கும் குணம்.

 உண்மையிலேயே இயற்கை மருத்துவத்திற்கு நன்மை செய்ய நினைத்தால், அதை நான்கு பேருக்கு பரப்ப நினைத்தால், மூளை கட்டி குணமானதை ஆதாரத்துடன் நிரூபியுங்கள், நோபல் பரிசு வாங்கும் அளவு மருத்துவ உலகில் பெரும் புரட்சியாக அது இருக்கும். அதை விட்டுவிட்டு "இந்த நோட்டிசை மூவாயிரம் காப்பி பிரிண்ட் செய்த கர்நாடககாரருக்கு தங்கப் புதையல் கிடைத்தது, கிழித்துப் போட்டவர் இரத்தம் கக்கி செத்தார்" என்று வரும் பிட் நோட்டிஸ் போல ஆதாரம் இல்லாமல் ப்ளாக் எழுத வேண்டாம். எப்படி குணம் ஆனது என்று அறிவியல் ரீதியில் விளக்க முயன்றால் அது நல்ல விஷயம். இல்லையென்றால், பிரார்த்தனை கூட்டத்தில் கண் தெரியாதவருக்கு பார்வை கொடுக்கும் முறைக்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை.

   மருத்துவ பதிவு எழுதும் முன், சில விசயங்களை யோசித்துக் கொள்ளுங்கள்,
அ) தாங்கள் கூற வந்தது சரியான கருத்தா?
ஆ) அதில் நம்பகத் தன்மை எவ்வளவு உள்ளது
இ) இதனால் மற்றவருக்கு துன்பம் வருமா?
ஈ) மருத்துவ அறிவு வளருமா?
உ) அதைப் பற்றி சந்தேகம் கேட்டால் நம்மால் விளக்க முடியுமா?
         பதிவை எழுதும் முன் சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதில் ஒரு கேள்விக்கு பதில் வரவில்லை என்றாலும் எழுத வேண்டாம். பரபரப்புக்காக எழுத வேண்டும் என்றால் எந்திரன் பற்றி பதிவு எழுதி விட்டுப் போங்களேன். யாருக்கும் நஷ்டம் இல்லை. உங்களது பதிவால் ஒரு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் அந்தப் பாவம் உங்களையே சாரும்.

       பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள், யார் என்ன சொன்னாலும் ஆ!!!!!! என்று கேட்காமல் அதன் உண்மை தன்மையை யோசியுங்கள். மருத்துவ சந்தேகங்களைப் பற்றி தகுதியான நபர்களிடம் விளக்கம் பெறவும். படித்தவர்களிடமே மருத்துவ அறியாமை பரவி உள்ள நிலையில் (kidneyக்கும் testisக்கும் வித்தியாசம் தெரியாத பயபுள்ளக இருக்க ஊருண்னே இது) கருப்பை எடுத்தால் மாதவிலக்கு வரலாம் என்று காதில் பூ சுத்தலாம், வியர்வையில் கெட்ட நீர் வெளியேறும் என பூமாலையே சுற்றலாம்.

 டிஸ்கி:  இதில் நான் எந்த லிங்க்கும் கொடுக்கவில்லை. இதில் சந்தேகம் உள்ள வார்த்தைகளை நெட்டில் சர்ச் செய்து பாருங்கள். தேவைக்கு அதிகமாகவே விஷயம் கிடைக்கும். 

Saturday, September 18, 2010

உலகத்திலேயே காஸ்ட்லியான பொழுது போக்கு

நிகழ்ச்சி 1:

      சனிக்கிழமை இரவு பதினொன்றரை மணி. தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்குள் ஒரு ஸ்ட்ரெச்சர் வேகமாக நுழைந்தது. அதன்மேல் சுயநினைவின்றி ஒருவன். மேலோட்டமாகப் பார்த்தால் காயம் ஒன்றும் இல்லை. பின்னாலேயே ஒரு பெண், சுமார் முப்பது வயது இருக்கும். சேலை முழுவதும் இரத்தக் கறை. அழுது கொண்டே வந்தாள்.
 "கீழ விழுந்துட்டார் சார். தலைல அடி பட்டுருச்சு. இரத்தமா வருது" 

                  அவனது தலையை தூக்கிப் பார்த்தால், பின் மண்டையில் இருந்து இரத்தம் பீச்சி அடித்துக் கொண்டிருந்தது. ஆர்ட்டரி கட். ஹெவி பிளீடிங். ஸ்ட்ரெச்சர் முழுவதும் அவனுக்கு கீழே இரத்தம். உடனடியாக தையல் இட வேண்டும். ஒரு மருத்துவர் தையல் இடும் வேலையை கவனிக்க, மற்றொரு மருத்துவர் கூட வந்த பெண்ணிடம் ஹிஸ்டரி கேட்க ஆரம்பித்தார்.

   "என்ன ஆச்சுமா?"
   "கீழ விழுந்துட்டார் சார்."
   "வண்டில இருந்தா?"
   "இல்ல சார் வீட்ல, கதவுல இடிச்சுட்டார்"......................




    உரையாடல் தொடர்ந்தது. மற்றொரு பக்கம் சிகிச்சையும். பின்மண்டையில் ஆங்கில "U" வடிவில் பெரிய காயம். தையல் இட்டு இரத்தப் போக்கை நிறுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது. ஒருவழியாக தையலிட்டு முடித்த பின் மீண்டும் எங்கிருந்தோ இரத்தம் வழிந்தது. தலை முழுவதும் முடியை நீக்கிப் பார்த்தால், நடுமண்டையில் "S" வடிவில் மற்றொரு காயம். மற்றும் சில சிறுசிறு காயங்கள். அனைத்திற்கும் மருந்திட்டு சரி செய்ய கிட்ட தட்ட ஒருமணி நேரம் ஆனது. இன்னும் அவனுக்கு சுயநினைவு திரும்பவில்லை.
  
          "அல்கஹாலிக் டாக்டர். குடிச்சுட்டு வீட்ல இருக்க கதவுல மோதி படில உருண்டு விழுந்துட்டாராம்" சக மருத்துவர் கூறினார். அவன் கொத்தனாராக வேலை செய்கிறானாம். ஒரு நாளைக்கு முன்னூறு சம்பளம். பொழுது போக்கிற்கு எப்போதாவது குடிப்பானாம். அன்று குடித்துவிட்டு வரும் போது கதவில் இடித்திருக்கிறான். அந்த கதவில் இரும்புக் குமிழ்கள் இருந்திருக்கின்றன. அதனால் பலத்த அடி. இன்னும் சுய நினைவு திரும்பாததன் காரணம், ஒருவேளை குடித்ததால் இருக்கலாம், அல்லது மூளையில் இரத்தக்கசிவு, காயம் இருக்கலாம். அதனால் சி.டி ஸ்கேன் செய்யப்பட்டது. நல்லவேளை. அது நார்மல். ஓரிரு தினங்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தால் போதும். எனினும் மறுநாள் காலை இரத்தக் கறை படிந்த அதே சேலையுடன் கேண்டினில் டீ வாங்கிய அவனது மனைவியைப் பார்க்கையில் கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. "கண்ணு முழிச்சுட்டார் சார்." என்றாள் சிரிப்புடன். 

நிகழ்ச்சி 2:

        அந்த நகரின் பிரபல ஹோட்டல் உரிமையாளர் அவர். உடல்நிலை சரி இல்லாததால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அப்போது பணியில் இருந்த மருத்துவர் எனது நண்பர். அவரை சந்திக்கச் சென்ற போது எதேச்சையாக ஹோட்டல் உரிமையாளரை அங்கு காண நேர்ந்தது. கட்டிலில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில். அவரது படுக்கை முழுவதும் கோழை, எச்சில். தனக்குத் தானே பேசிக்கொண்டும் ஏதேதோ வார்த்தையில் திட்டிக் கொண்டும் வானத்தைப் பார்த்து காறி உமிந்து கொண்டும் இருந்தார். அது அவர் மேலேயே விழுந்தது.





      "அல்கஹாலிக் வித்ட்ராயல். டெலிரியம் அண்ட் டிரமன்ஸ்-க்கு போய்ட்டார்." நான் அவரையே பார்ப்பதைக் கண்டு எனது நண்பர் என்னிடம் கூறினார். (டெலிரியம் அண்ட் டிரமன்ஸ் பற்றி தனிப் பதிவே எழுதலாம். விவரம் வேண்டும் நண்பர்கள் லிங்கைப் பார்க்கவும். வலையில் தேடினாலும் கிடைக்கும்.) அவர் படுத்திய பாட்டிற்கு, அவரது மனைவி வந்து பார்ப்பதே இல்லையாம். மகன் வெளிநாட்டில். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. அவரது ஹோட்டல் மேனேஜர் வந்து பில் செட்டில் செய்து விடுவாராம். இது எதுவும் புரியாமல் அவர் தனக்குத் தானே புலம்பிக்கொண்டு இருந்தார்.

     ஒரு பொது அறிவு கேள்வி. ஒரு குவாட்டரின் விலை என்ன?  அறுபது ரூபாய்?, எழுபது ரூபாய்? அட மேக்ஸிமம் நூறு, ஆயிரம் ரூபாய்?

            . நிகழ்ச்சி 1ன் படி, அந்த கொத்தனாருக்கு தையல், சி.டி ஸ்கேன், அட்மிஷன், ரூம் சார்ஜ், மருந்து, மாத்திரை அவனை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் செலவு என எப்படியும் அவனது ஒரு மாத சம்பளத்தை விட அதிகம் செலவு ஆகிவிடும். இது போக இன்னும் சில தினங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாது. தலை முழுவதும் மொட்டை வேறு. காயம் ஆறினாலும் தழும்பு இருக்கும். எப்படியும் இரண்டு மாத சம்பளம் காலி. இதே நிகழ்வு சாலை விபத்தாக இருந்தால்,.... வேறு விலை.

      நிகழ்ச்சி 2-ன் படி, ஊரில் மதிக்கப்படும் அவர், அஃக்றினை போல மானமிழந்து, மதிகெட்டு, மனைவியும் பார்க்க விரும்பாமல் எல்லோருக்கும் பொல்லனாக கை கால்கள் கட்டப்பட்டு இருப்பது.

              இப்போது சொல்லுங்கள் உலகில் காஸ்ட்லியான பொழுதுபோக்கு எது?




  ச்சே. யோசிச்சா ஒரே டென்ஷன் பா.  மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்.

அப்படியே  ஓட்டும் போடுங்க பா.
   

Wednesday, September 15, 2010

கல்வி புரோக்கர்கள் எதற்கு?

      
   

           தனியார் பள்ளி வாகனம் மோதி மாணவன் பலி. ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்குத் தீவைத்தனர் - இந்த செய்தியை இரண்டு தினங்களாக தினசரிகளில் பார்த்து இருப்பீர்கள். இதில் எனக்கு சில சந்தேகங்கள்.

        ஏன் பள்ளிக்கு தீ வைத்தனர்?
                     அ) மாணவன் இறந்ததால்
                    ஆ) அதிக கட்டணம் வசூலித்ததால்
                     இ)  இரண்டுக்கும் சேர்த்து

  அ) மாணவன் இறந்ததால் - அப்ப போலிஸ் வேன் மோதி இறந்தால் போலிஸ் ஸ்டேசன எரிப்பீங்களா? ஆம்புலன்ஸ் மோதுனா ஹாஸ்பிட்டல எரிக்கனும்.  பள்ளி தாளாளர் நம்பியார் மாதிரி இடது உள்ளங்கைல வலது கையை வைத்து சுத்திக் கொண்டு, "அவன கொன்னுடு"னு ஆர்டர் போட்டாரா? அவர் வீட்ட ஏன் அடிச்சு நொறுக்குறீங்க? டிரைவர் செஞ்ச தப்புக்கு அவர் என்ன செய்வார்? "ஆக்ஸிடன்ட் செய்ய மாட்டேன்னு எழுதிக் குடு" அப்படி எழுதி வாங்கிட்டா வேலைல சேர்க்க முடியும்? ஒரு டிரைவர் செய்த தவறுக்கு மொத்த பள்ளியையும் எரிக்கலாமா? தனி மனித தவறுக்கு நிறுவனத்தை எரிக்கலாமா? அப்படி பண்ணனும்னா "துட்டுக்கு ஓட்டு" தமிழ்நாட்டுக்கு தீ வைங்க முதல்ல.

 ஆ) அதிக கட்டணம் வசூலித்ததால் - உன்ன யாரு இங்க படிக்க வைக்க சொன்னா? காசு அதிகம்னு தெரியுதுல? உனக்கு பிடிச்ச இடத்துல சேர்த்துக்கோ. பார்க் ஷெராட்டன்ல சாப்பிடனும்னா பில் கட்டி தான் ஆகணும். சாப்பிட்டு முடிச்சு பில் அதிகமா வந்தா ஹோட்டலுக்கு தீ வைப்பீங்களா? என் மகன்/மகள் ஸ்டேட் ரேங்க் எடுக்கணும்னு தான அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி எல்லாத்தையும் விட்டுட்டு புரோக்கர்கள் நடத்தும் பள்ளிகள்ல சேர்க்குறீங்க? விளம்பரம் பண்ற ஸ்கூல் தான் நல்ல ஸ்கூல். இரண்டாயிரம் பேர் படிச்சு மூணு பேர் ஸ்டேட் ரேங்க் எடுத்துருப்பான். அப்ப மீதி 1997 பேர் கதி?
    
        அந்த பள்ளி தாளாளர் உங்கள வேற பள்ளில சேர கூடாது, இங்க தான் படிக்கணும்னு சொல்லி அதிகம் வாங்குனா நீங்க பண்றது ஓ.கே. நான் இங்க தான் படிக்க வைப்பேன், நான் கொடுக்குற பணத்த தான் வாங்கணும்னா, அது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?

  இ) இரண்டிற்கும் சேர்த்து - ஒரு பள்ளி அதிகக் கட்டணம் வாங்கியதைக் கண்டிக்க நமக்கு ஒரு சிறுவனின் உயிர் தேவைப் படுகிறது. யாராவது உயிர் இழந்தால் தான் நமக்கு சொரணையே வரும்? அவன் இறந்திருக்காவிட்டால் நவத் துவாரங்களையும் அடைத்துக் கொண்டு கேட்கும் பணத்தை கொடுத்துக் கொண்டு இருப்பீர்கள். ரஞ்சிதா புகழ் நித்தியை திட்டும் போது அங்கு சென்ற படித்த கூமுட்டைகளையும் சேர்த்து தானே திட்டினோம். பள்ளியை திட்டும் போது, அதை வளர்த்து விட்ட பெற்றோரையும் சேர்த்து தானே திட்ட வேண்டும்?


   
        ஒரு பக்கம் பி.எட் முடித்து வேலை இல்லாமல் நிறைய பட்டதாரிகள். மற்றொரு பக்கம் எல்.கே.ஜி. அட்மிஷன்க்கு லட்ச ரூபாய் நன்கொடை. ஏன் இந்த முரண்பாடு?
 
          பள்ளி என்பது நிர்வாகம், ஆசிரியர் என இரு பகுதிகளைக் கொண்டது. நிர்வாகம் மட்டுமே மாறாதது. ஆசிரியர்கள் மாறிக் கொண்டே இருப்பர். ஆனால் ஆசிரியர்களே உங்கள் குழந்தைக்கு கிடைக்கும் கல்விக்கு பொறுப்பானவர்கள். நிர்வாகத்திற்கும் கல்விக்கும் சம்பந்தமே இல்லை. பள்ளி ஓனரா உங்க குழந்தைக்கு சொல்லித் தர போறார்? உங்கள் குழந்தைக்கு கற்பிக்கும் ஆசிரியருக்கு மிஞ்சி போனால் நாலாயிரம் ரூபாய் சம்பளம். அவர் வெளியேறினால் அதே நாலாயிரத்திற்கு மற்றொரு பி.எட் படித்தவர். இதில் பள்ளியின் தரம் என எதைக் கூறுவீர்கள்? ஆசிரியரையா? அல்லது நிர்வாகத்தையா? கண்டிப்பாக ஆசிரியர் தான். அப்புறம் எதற்கு நிர்வாகத்திற்கு மதிப்பு தருகிறீர்கள்?



     ஏனென்றால் வறட்டு கவுரவம். இது மட்டுமே அனைத்திற்கும் காரணம். பணம் கட்ட முடியாத, அல்லது கட்ட வொர்த் இல்லாத பள்ளிகளில் சேர்த்து விட்டு, என் பையன் அங்கு படிக்குறான் என பீற்றுவது. பின் பள்ளியை எரிப்பது. அப்பள்ளியில் இருந்து நல்ல ஆசிரியர் விலகி ஒரு சிறிய பள்ளியில் சேர்கிறார், அல்லது ஆரம்பிக்கிறார் என்றால் உங்கள் குழந்தைகளை அங்கு சேர்ப்பீர்களா?

   என் தந்தை சேர்த்தார் (அவரும் ஆசிரியர் தான்). வேலை இல்லாத பட்டதாரி ஆசிரியர்கள் நான்கு பேர் சேர்ந்து ஆரம்பித்த பள்ளியில், அவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அந்தப் பள்ளியின் முதல் வருடத்திலேயே என்னை சேர்த்தார். அவர்கள் என்னை மருத்துவராக்கி அழகு பார்த்தனர்.  என்னுடன் அப்பள்ளியில் படித்த அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்றனர்.  (மிக மிகக் குறைந்த கட்டணத்தில்)

  பெற்றோரின் கவனத்திற்கு,
    ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் கட்டும் பணத்தில் எச்சம் மட்டுமே உங்கள் குழந்தைகளுக்கு கல்வி தரும் ஆசிரியர்களுக்கு செல்கிறது. மற்றவை ஏ.ஸி அறையில் இருக்கும் கல்வி புரோக்கர்களுக்கே செல்கின்றன. 

        குழந்தைகளை கவனிக்காமல் விடும் பாவத்திற்கு பெரிய பள்ளியில் சேர்த்து நிறைய பணம் கட்டி பரிகாரம் தேட முயற்ச்சிக்க வேண்டாம். எத்தனை பெரிய பள்ளியாக இருந்தாலும் உங்கள் அன்பும், கவனிப்பும் இல்லை என்றால் எல்லாமே வேஸ்ட்.

     எல்.கே.ஜி.யிலேயே உங்கள் குழந்தையின் தலையில் பணத்தை கட்டி  ரேசில் ஓடும் குதிரை ஆக்கிவிடாதீர்கள். கல்வி என்பது பாடப்புத்தகம் மட்டும் அல்ல.  பள்ளிக்கு வெளியே கல்வியைக் காட்டுங்கள்.  பெரிய பள்ளி என்று அதிகமாக செலவு செய்து ரிட்டனை உங்கள் குழந்தையிடம் எதிர்பார்த்து, அவர்களிடம் பொறுப்பை திணித்து, பள்ளி வாழ்க்கையை, இளமைப் பருவத்தை நரகமாக்காதீர்கள்.


 
  வேலை இல்லாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்,
           தயவு செய்து பண முதலை பள்ளிகளிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் .மனசாட்சிக்கு பிடிக்காமல் வேலை செய்யாதீர்கள். முடிந்த வரை கூட்டாக சேர்ந்து பள்ளி ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். இல்லை எனில் பகுதி நேரமாக சில மாணவர்களை தத்து எடுத்து நல்ல மதிப்பெண் பெற வையுங்கள். அடுத்து கூட்டம் தானாக உங்களைத் தேடி வரும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஏதேனும் உதவி கேட்டால் செய்யுங்கள். பி.எட் முடித்து வேலைக்கு செல்லாமல் இருக்கும் குடும்பத் தலைவிகளே, உங்களுக்கு வருமானம் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிறைய குழந்தைகளுக்கு உங்களது உதவி தேவைப் படுகிறது. ஆத்ம திருப்ப்திக்காக பகுதி நேரமாகவாது சொல்லிக் கொடுங்கள்.

  பெரிய புகழ் பெற்ற பள்ளி என்று, கல்வி புரோக்கர்களிடம் சிக்கி அவதிப் படுவதை விட சிறிய பள்ளிகளில் சேர்ந்து நேரடியாக ஆசிரியர்களின் உதவியை பெறலாம். இதனால் திறமை உள்ள ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

   பள்ளிகளை எரிப்பதால் பிரச்சனை தீரப் போவது இல்லை.  "எங்க அப்பா ஸ்கூல்க்கு தீ வச்சார். அதனால நான் புது ஸ்கூல்ல சேர போறேன்" என்று உங்கள் குழந்தைகள் சொல்லும் கேவலமான நிலைக்கு தான் இட்டுச் செல்லும்.

       பெற்றோரும் ஆசிரியரும் ஒரே சமுதாயத்தில் அருகருகே இருக்கும் போது, இடையில் கல்வி புரோக்கர்கள் எதற்கு?