வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Tuesday, November 16, 2010

நமக்கும் ஒரு என்கவுண்டர்

   

           செவ்வாய் கிழமை விடியும் போதே மழை பெய்துகொண்டே  இருந்தது.... காலையில்  இருந்து வெளியில் போகமுடியவில்லை.  எதோ பக்கத்து வீட்டு புண்ணியத்துல அப்ப அப்ப சூடா தேநீர் கிடைத்துக் கொண்டு இருந்தது.  மாலை நேரம் வடை சாப்பிடலாம் என முடிவு செய்து மலையாள சேச்சியின் வடை கடைக்கு சென்றோம் நானும் என் நண்பனும். சேச்சி ஒரு சின்ன பிளாஸ்டிக் தார்ப்பாயின் கீழ் அடுப்பை வைத்து, எங்களைப் போல  மழைக்கு வடை சாப்பிட வேண்டும் என்று நினைத்த பல பேரின்  ஆசைகளை  பூர்த்தி செய்து கொண்டிருந்தார்.

            அடுத்து நடந்தது தான் பெரிய காமெடி.. சேச்சியிடம் வடை ரெடி ஆகும் வரை மழையில் நனையாமல்  இருக்க அருகில் இருந்த  ஆட்டோவில்  நானும் என் நண்பனும்  உக்கார்ந்து  இருந்தோம். அப்போது  பக்கத்து வீட்டில்  இருந்து ஒரு சிறுமி 10  வயது இருக்கும், டியுஷன்   செல்வதற்காக   வெளியில் வந்தாள். மணி ஐந்து தான் ஆகியிருந்தது. ஆனால் எழு மணி போல இருட்டியிருந்தது. தெருவில் யாரும் இல்லை.

      அந்த பாப்பா மழையில் வெளியில் வருவதும், டியுஷன் போக மனம்  இல்லாமல் மீண்டும் உள்ளே செல்வதுமாக இருந்தாள். உடனே எனக்கும் என் நண்பனுக்கும் பழைய கால சிந்தனைகள், நம்மலாம் அந்த காலத்துல  எந்த டியுஷன்க்கு போனோம்?   (அந்த காலம்னா  உடனே பிளாக் அண்ட்  ஒயிட்ல  யோசிக்காதிங்க. நாங்களும் யூத் தான்)  இன்னைக்கு ஒருநாளாவது பாப்பா சந்தோசமா இருக்கட்டும் என்று என் நண்பன் ஒரே ஒரு பொய் தாங்க சொன்னான்.  அது என்கவுண்டர் அளவு போகும்னு நெனைக்கவே இல்லைங்க... 

      "பாப்பா உனக்கு டியுஷன் இல்ல. லீவ் விட்டுடாங்க." இது தாங்க அந்த பொய். ஆனா அதுக்கு அந்த பாப்பா பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள். அதன்பிறகு தான் நாங்கள் பண்ணிய தவறு நினைவுக்கு வந்தது. நாங்க ஒரு ஆட்டோவில் இருக்கோம், இருட்டு வேறு, மழை, தெருவில் யாரும் இல்லை. அப்போது அந்த பாப்பா ஐயோ கடத்துறாங்க என ஒரே ஒரு சவுண்ட் விட்டிருந்தால் எங்க நிலைமை என்ன ஆகிருக்கும்? மவனே உனக்கு என்கவுண்டர் தாண்டா.

  ஆகவே மக்களே சாலையில் முன்பின் தெரியாத  சிறு குழந்தைகளிடம் கவனமாக இருங்கள்.

   டிஸ்கி: எந்த ஒரு முறைதவறுதலுக்கும்  அதன் பலனை நாம் அனுபவித்தே ஆக வேண்டும்.  ஏதோ ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நியாயப்படுத்தப்பட்ட காரணங்களுக்காக தான் லஞ்சம் நமது சமூகத்தில் முதன்முதலில் நுழைந்திருக்கும். ஆனால் இன்று டிராபிக் முதல் டெலிகாம் வரை புரையோடிப் புண்ணாகி நாறுகிறது. இதே போன்ற நிலைமை நாளை என்கவுண்டர்களுக்கும் வரலாம். தேன் எடுக்கும் போது புறங்கையை நக்கியவன் சும்மா இருக்க மாட்டான் என்பார்கள். கோவை என்கவுண்டர் முறைதவறுதலின் நியாயப்படுத்தப்பட்ட முதல்படி. புறங்கையை நக்கிவிட்டார்கள். இனி சும்மா இருப்பார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

3 comments:

எஸ்.கே said...

அனுபவம் சுவாரசியமாக இருந்தது!
// எந்த ஒரு முறைதவறுதலுக்கும் அதன் பலனை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். //
உண்மைதான்!

அருண் பிரசாத் said...

ஹா ஹா ஹா...

ஜஸ்ட்டு மிஸ்...

philosophy prabhakaran said...

ஒரு சின்ன சம்பவத்தை அருமையாக விவரித்திருக்கிறீர்கள்... நல்ல கிரியேட்டிவிட்டி...